கரீபியன் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு பியோனா சூறாவளி (Hurricane Fiona) கனடா - நோவா ஸ்கோடியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் நாட்டின் வரலாற்றில் மிகக் கடுமையான புயல்களில் ஒன்றை கிழக்கு கனடா இன்று சனிக்கிழமை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பியோனா சூறாவளி நோவா ஸ்கோடியாவை தாக்கும்போது கடும் காற்றுடன் பாரிய அலைகள் ஏற்படும். அத்துடன், அதிக மழை பெய்யக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரீபியன் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய பியோனா சூறாவளி வெள்ளிக்கிழமை இரவு பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அட்லாண்டிக் கனடா நோக்கி இன்று நகரும் போது சக்திவாய்ந்த சூறாவளியாகவே இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை, புயல் எச்சரிக்கையை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜப்பானுக்கான திட்டமிட்ட பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை பிரதமர் ட்ரூடோ புறப்படத் தயாராக இருந்தார்.
இதேவேளை, புயல் மத்திய நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு நகரத் தொடங்கிய போது காற்றின் வேகம் 165 கி மீ. ஆக அதிகரித்தது.
இந்நிலையில் நோவா ஸ்கோடியாவில் 150,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நியூபவுண்ட்லான்ட் சில பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது நோவா ஸ்கோடியாவின் கிழக்குக் கரையை ஒட்டி அலைகள் சுமார் 10 மீட்டர் உயரத்தில் எழுந்து தாக்குலாம் எனவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு பகுதிகளுக்கு கனடிய அதிகாரிகள் அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
கடற்கரையோரங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் மிகவும் ஆபத்தான அலைகள் எழுந்து அழிவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.