கனடா வரலாற்றில் மிகக் கடுமையான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் பியோனா சூறாவளி கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கியதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
சூறாவளி தாக்கத்தினால் சேதமடைந்த முக்கியமான உள்கட்டமைப்புகளை சீர்படுத்த கனடாவுக்கு பல மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
புயல் தாக்கத்தில் இலட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பெருமளவு மரங்கள் சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பியோனா புயல் நேற்று முன்தினம் கிழக்கு கனடாவை பந்தாடியது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லாண்ட் ஆகிய மாகாணங்களும், பிரின்ஸ் எட்வர்ட் மற்றும் மாக்டலின் தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அங்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடற்கரையோரத்தில் இருந்த ஏராளமான வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. புயல், மழையை தொடர்ந்து பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் தகவல் தொடர்பு, சாலை போக்குவரத்து உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட இராணுவத்தை அனுப்பியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலும் புயல் பாதிப்பு காரணமாக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜப்பான் செல்ல இருந்த பயணத்தை அவர் இரத்து செய்துள்ளார்.
நியூபவுண்ட்லாண்ட் தென்மேற்கு முனையில் 4,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை கொண்ட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான போர்ட் ஆக்ஸ் பாஸ்க்ஸில் புயலின் போது 73 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் கடைசியாக அவரது குடியிருப்புக்குள் காணப்பட்டார். சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு அலை அவரது வீட்டை தாக்கியது. இதனால் அடித்தளத்தின் ஒரு பகுதியைக் சேதமடைந்தது என பொலிஸார் கூறினர்.
கடலோரக் காவல் படை மற்றும் உள்ளூர் மீட்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவரது உடலை கடலில் இருந்து மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நோவா ஸ்கோடியாவின் - போர்ட் ஆக்ஸ் பாஸ்க் நகரம் (Port aux Basques) புயல் தாக்கத்தின் பின்னர் ஒரு முழுமையான போர் மண்டலம் போன்று காட்சியளிப்பதாக அந்நகர மேயர் பிரையன் பட்டன் (Brian Button) கூறினார். இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் பல மில்லின் டொலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மேயர் பிரையன் பட்டன் கூறியுள்ளார்.
சேதமடைந்த எங்கள் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்களாகும் என போர்ட் ஆக்ஸ் பாஸ்க்ஸில் வசிக்கும் ரோசலின் ரோய் என்பவர் தெரிவித்துள்ளார்.
பியோனா சூறாவளி ஏற்படுத்திய சேதங்கள் குறித்த முழுமையான மதிப்பீடுகள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் கனடாவில் மிகப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக இரு இருக்கும் எனக் கருதப்படுகிறது.