வடகொரியா அதன் கிழக்கு கடற்கரையில் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic missile)ஏவி சோதனை நடத்தியது. ஜூன் மாதத்திற்கு பின்னர் வட கொரியா மேற்கொண்ட மற்றொரு ஏவுகணை சோதனையாக இது அமைந்துள்ளதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் தென் கொரியாவிற்கு வந்துள்ள நிலையிலும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் இந்த வாரம் தென்கொரியா செல்ல இருக்கும் நிலையிலும் வடகொரியா நேற்று ஏவுகணையை ஏவி சோதித்தது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கடுமையான ஆத்திரமூட்டும் செயல் என தென்கொரியா தெரிவித்துள்ளது.
பியோங்யோங்கிற்கு வடக்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள டேச்சோனுக்கு அருகில் நேற்று உள்ளூர் நேரப்படி 07:00 மணிக்கு (23:00 GMT) ஒரு குறுகிய தூர ஏவுகணை ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாக தென் கொரியாவின் இராணுவம் கூறியது. 60 கிலோமீட்டர் உயரத்தில் சுமார் 600 கிலோமீறறர் வேகத்தில் இந்த ஏவுகணை பறந்ததாக அது தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எங்கள் இராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில் அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயற்பட்டு வருகிறோம் என தென்கொரிய அரசு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜப்பானின் கடலோர காவல்படையும் ஏவுகணை சோதனை இடம்பெற்றதை உறுதி செய்துள்ளதுடன், தங்கள் கடற்படைக் கப்பல்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்தது.
வடகொரியாவின் ஏவுகணை அதிகபட்சமாக சுமார் 50 கி மீ உயரத்தை எட்டியது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள நீர்நிலைகளில் அது விழுந்தது என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா தெரிவித்தார்.
அணுசக்தியால் இயங்கும் யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் (USS Ronald Reagan) அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் தென் கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்ததுள்ள நிலையிலும், அமெரிக்க துணை ஜனாதிபதி இந்த வாரம் தென்கொரியா வரவுள்ள நிலையிலும் வடகொரியா மேற்கொண்ட இந்த ஏவுகணை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.