பிலிப்பைன்ஸின் வடகிழக்கு பகுதியை சக்திவாய்ந்த நோரு புயல் (Super Typhoon Noru ) தாக்கிய நிலையில் புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிக்கு சென்ற மீட்புப் பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை அதிகாலை லூசோன் புயல் வடகிழக்கு பகுதியின் பிரதான தீவைக் கடந்து சென்றபோது, சூறைக் காற்றுடன், பலத்த மழை பெய்தது. இந்தப் புயல் மற்றும் மழையால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையிலேயே மீட்புப் பணிகளுக்காக விரைந்த ஐந்து மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தனர். தலைநகர் மணிலாவுக்கு அருகிலுள்ள புலக்கன் மாகாணத்தில் உள்ள சான் மிகுவல் நகராட்சியில் மீட்புப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றபோது அவர்கள் மீது சுமார் இடிந்து விழுந்ததாக சான் மிகுவல் பொலிஸ் உயரதிகாரி லெப்டினன்ட் கேணல் ரோமுவால்டோ ஆண்ட்ரெஸ் கூறினார்.
இதேவேளை, புயல் தாக்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட 75,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கனமழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படலாம், நிலச்சரிவுகள் ஏற்படுவதுடன், பயிர்களும் அழியலாம் என வானிலை நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.
இதுவேளை, புயல், மழை பாதிப்புகள் காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகா் மணிலா உள்ளிட்ட பல நகரங்களில் இன்று திங்கள்கிழமை பள்ளிகள், அரச அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மணிலா விமான நிலையத்திலிருந்து புறப்படும் 30-க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.