Thursday 16th of May 2024 10:30:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாகதீபம் திலீபன்!

காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாகதீபம் திலீபன்!


உலகத்திற்கு உண்ணாவிரதத்தினை சொல்லிக்கொடுத்தவர் காந்தியாகயிருக்கலாம்.ஆனால் அந்த காந்திதேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாகதீபம் திலீபன் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.

இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக எஸ்.சிவயோகநாதன் மற்றும் அருட்தந்தை ஜோசப்மேரி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நிகழ்வு இன்று நடைபெற்றது.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா கந்தையா ஜெகதாஸினால் நினைவுரையாற்றப்பட்டது. இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழின வரலாற்றில் தியாகதீபம் திலீபன் ஒப்பற்ற தியாகமாக உலக அகிம்சை அறப்போராட்டத்தினுடைய ஒரு உன்னதவடிவமாக திகழுகின்றார்..உலக வரலாற்றில் நீராகாரம் இல்லாமல் உண்ணா நோன்பிருந்து தன்னுடைய இன்னுயிரை ஈகம் செய்தவராக முதன்மையானவராக தியாக தீபம் திகழுகின்றார்.

1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டு தமிழர்களின் வாழ்வில் மிகப்பெரும் துன்பியல் நிகழ்வு கட்டவிழ்த்துவிடப்பட்டபோது இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கை மண்ணில் கால்பதித்து தமிழர் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையில் ஐந்து அம்சகோரிக்கையினை முன்வைத்து சாகும் வரையான போராட்டத்தினை ஆரம்பித்தார்.

இந்த போராட்டம் ஆரம்பிப்பதற்காக முக்கிய காரணம் அன்றைய பிராந்திய வல்லரசான இந்திய தேசமும் இலங்கை இனஒடுக்குமுறை அரசும் கூட்டுச்சேர்ந்து தமிழினத்திற்கு எதிராக மிகப்பெரும் சதிவலையினை பின்னியபோது,தமிழின அழிப்புக்கு தயாரானபோது அதனைச்செய்யவேண்டாம் என்று கோரி மென்முறையிலும் அகிம்சை ரீதியிலும் வேண்டுகோள் விடுத்து இந்த மிகப்பெரும் அகிம்சை போரை ஆரம்பித்தார்.

இந்த அகிம்சை போரை ஆரம்பித்தபோது உலகுக்கு நம்பிக்கையிருந்தது உலகுக்கு முதன்முதலில் அகிம்சையை,உண்ணாவிரதத்தினை அறிமுகப்படுத்தியவர் மகாத்மாகாந்தியடிகள்.காந்திதேசம் இந்த அகிம்சைக்கு,உண்ணாவிரதத்திற்கு மதிப்பளிக்கும் என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் காந்திதேசம் அதனை புறந்தள்ளி அகிம்சையினை கொச்சைப்படுத்த 12வது நாள் தியாகதீபம் தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.

அன்றைய காலத்தில் ஒரு பிராந்திய வல்லரசும் ஒரு அரசும் இணைந்து ஒரு இனத்திற்கு எதிராக செய்த கூட்டுச்சதியினை முறியடிப்பதற்காக மென்முறையில் அகிம்சை வழியில் தியாகதீபம் உண்ணாவிரதம் இருந்தார்.

உலகுக்கு உண்ணாவிரதத்தினை சொல்லிக்கொடுத்தவர் காந்தியடிகளாகயிருக்கலாம்.ஆனால் அந்த காந்திதேசத்திற்கே உண்ணாவிரதத்தின் மகிமையினை அதன் ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாக தீபம் திலீபன் அவர்களாகும். தியாக தீபம் திலீபன் அவர்களின் அகிம்சைபோராட்டத்திற்கு அன்றைய காலகட்டத்தில் உலகம்,இந்திய தேசம்,இலங்கை தேசம் செவிசாய்த்திருந்தால் அந்த நாளில் வரலாறுகள் வேறு விதமாகமாறியிருக்கும்.அழிவுகளும் துன்பங்களும் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அதனை காந்திதேசமும் இலங்கையும் புறந்தள்ளி தமிழர் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்த காரணத்தினாலேயே தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாகவும் நீடிக்க வழியேற்படுத்தியது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE