தென்கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் சியோலில் இருந்து 168 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேஜியோனில் உள்ள வணிக வளாக கட்டத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
காலை 7:46 மணிக்கு (22:26 GMT) தீ பரவத் தொடங்கியது. இதையடுத்து வணிக வளாக ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள ஹோட்டலில் உள்ள வாடிக்கையாளர்கள் உட்பட 110 க்கும் மேற்பட்டவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மதியம் 3 மணியளவில் (06:00 GMT) தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, உயிரிழந்தவர்களின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டன.
தீயணைப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 90 வாகனங்கள் ஈடுபட்டதாக யுசியோங் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு அதிகாரி லீ சியுங்-ஹான் தெரிவித்தார்.
இறந்து கிடந்தவர்களில் ஆறு பேர் வணிக வளாக ஊழியர்கள் என்றும், மற்றொருவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
தீ விபத்து நேரிட்ட சமயத்தில் வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது எனவும் லீ சியுங்-ஹான் தெரிவித்தார்.