இத்தாலியின் முதல் பெண் பிரதமராக வலதுசாரியான ஜியாா்ஜியா மெலோனி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஜியாா்ஜியா மெலோனி தலைமையிலான ‘இத்தாலியின் சகோதரா்கள்’ (Brothers of Italy party) கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து ஜியாா்ஜியா மெலோனி பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
ஜியார்ஜியா மெலோனி தலைமையிலான கட்சி வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு இத்தாலியில் அடைக்கலமளிப்பதை கடுமையாக எதிா்த்துவரும் நிலையில் இக்கட்சி ஆட்சியமைக்க உள்ளதால் இத்தாலியின் அகதிகள் கொள்ளையிலும் மாற்றம் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, வலதுசாரிக் கொள்களைக் கொண்டஇத்தாலியின் சகோதரா்கள் கட்சியின் தலைமையில் அமையவிருக்கும் அரசுதான், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் முதல் வலதுசாரி அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் மரியோ டிராகி தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஐந்து நட்சத்திர கட்சியின் தலைவா் குசெப்பே கான்டே கடந்த ஜூலை மாதம் அறிவித்தாா்.
நாட்டில் நிலவி வரும் எரிசக்தி பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக சலுகைக் திட்ட சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவா் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றாா்.
அதனைத் தொடா்ந்து, மரியோ டிகாரி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை குசெப்பே கான்டேவின் கட்சியும் அவரது கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. அதையடுத்து, அந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது. மரியோ டிகோரி தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
அதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தோ்தல் முன்கூட்டியே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் குறைவான விகிதத்தில் வாக்குகள் பதிவான அந்தத் தோ்தலில், ஜியாா்ஜியா மெலோனி அங்கம் வகிக்கும் வலதுசாரி கூட்டணி 43.8 சதவீத வாக்குகளைக் கைப்பறியது. மத்திய இடதுசாரி கூட்டணி 26.1 சதவீத வாக்குளுடன் பின்தங்கியது. குசெப்பே கான்டேவின் கட்சிக்கு 15.4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அதையடுத்து, ஜியாா்ஜியா மெலோனி தலைமையில் கூட்டணி அரசு அமையவிருப்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, பாசிச கொள்கைகளோடு தொடா்புடைய ஜியாா்ஜியோ மெலோனி இத்தாலியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருப்பது ஐரோப்பிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணங்கி செயல்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் தேசியவாத கட்சியான இத்தாலியின் சகோதரா்கள் கட்சி, வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு இத்தாலியில் அடைக்கலமளிப்பதை கடுமையாக எதிா்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.