விண் கற்களின் ஆபத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்கும் நோக்கில் விண்கல்லை துல்லியமாக தாக்கி அவற்றின் பாதையை மாற்றுவாற்கான நாசாவின் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
பூமியை விண்கல் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் உலகின் முதல் சோதனை முயற்சியின்போது நாசாவின் டார்ட் விண்கலம் (NASA's DART spacecraft) ஹைப்பர்சொனிக் வேகத்தில் சென்று தொலைதூர சிறுகோள் மீது நேற்று வெற்றிகரமாக மோதியது.
டிமாா்பாஸ் விண்கல் தனது பாதையை மாற்றும் பட்சத்தில் வரும் காலங்களில் டார்ட் விண்கலம் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கல்லை விண்ணிலேயே துல்லியமாக தாக்கி அதன் பாதையை மாற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த விண்கற்களால் அன்றைய டைனோசர் அழிந்து மலைகள் வெடித்து சிதறியதுடன், சுனாமி போன்ற பேரழிவுகளை பூமி சந்தித்தது. அதுபோன்ற மற்றொரு சம்பவம் நடக்காமல் தடுக்க பல்வேறு சோதனைகளை இன்றைய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பூமிக்கு உடனடியாக எந்த விண்கல்லினாலும் ஆபத்து இல்லை என்றாலும், எதிா்காலத்தில் அத்தகைய அபாயம் ஏற்படும் நிலையில், அந்தக் கற்களிலிருந்து பூமியைக் காப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில் தற்போது அத்தகைய முயற்சியை சோதனை முறையில் நாசா மேற்கொண்டுள்ளது.
அதற்காக, விண்கல் ஒன்றின் மீது வேண்டுமென்றே மோதி அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதற்காக ‘டார்ட்’ என்ற செயற்கைக்கோள் ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ரொக்கெட் மூலம் கடந்த நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ‘டார்ட்’ விண்கலமானது பூமியிலிருந்து சுமார் 63 இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ள 2,500 அடி விட்டம் கொண்ட ‘டிடிமாஸ்’ என்ற விண்கல்லைச் சுற்றி வரும் ‘டிமாா்பாஸ்’ என்ற குட்டி நிலவு விண்கல்லைக் குறிவைத்து அந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது.
நாசாவின் திட்டத்தின்படி ரொக்கெட்டிலிருந்து பிரிந்த ‘டார்ட்’ விண்கலம் சரியான பாதையில் பயணம் செய்து டிமாா்பாஸ் விண்கல்லின் மையப்பகுதியை நேற்று துல்லியமாக தாக்கியுள்ளது.
இதன்மூலம், ‘டார்ட்’ திட்டத்தின் முதல்கட்டம் வெற்றியடைந்துள்ளது. மேலும், ஒருசில நாள்களில் டிமாா்பாஸ் விண்கல் தனது பாதையை மாற்றுமா என்பது தெரியவரும்.
டிமாா்பாஸ் விண்கல் தனது பாதையை மாற்றும் பட்சத்தில், வரும் காலங்களில் டார்ட் விண்கலம் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கல்லை விண்ணிலேயே துல்லியமாக தாக்கி அதன் பாதையை மாற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.