ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 (Nord Stream) எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டே எரிவாயு குழாய்களில் ரஷ்யா கசிவை ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் சேதம் ஏற்படுத்தப்பட்டமை திட்டமிட்ட "பயங்கரவாத தாக்குதல்". இது ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய "ஆக்கிரமிப்புச் செயல்" என உக்ரேன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கேலோ போடோலியாக் கூறினார்.
குளிர் காலத்திற்கு முன்னர் ஐரோப்பாவில் பீதியை ஏற்படுத்த ரஷ்யா விரும்புவதாகவும் தெரிவித்த அவர், உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை அதிகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தினார்.
கசிவுகள் வெளிப்படுவதற்கு முன்பு நீருக்கடியில் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டதாக நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவை வெடிப்புகள் என்பதில் சந்தேகமில்லை என்று சுவிடனின் தேசிய நில அதிர்வு மையத்தின் பிஜோர்ன் லண்ட் கூறினார்.
குழாயில் அழுத்தம் குறைவதாக நோர்ட் ஸ்ட்ரீம் 2 பராமரிப்பாளர்கள் திங்கள்கிழமை பிற்பகல் எச்சரித்தனர். இந்நிலையில் போர்ன்ஹோல்ம் தீவுக்கு அருகில் உள்ள பகுதியை கப்பல்கள் தவிர்க்க வேண்டும் என்று டெனிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கடலுக்கு அடியில் நோர்ட் ஸ்ட்ரீம் குழாயில் ஒரே நாளில் முன்னோடியில்லாத வெடிப்புகள் ஏற்பட்டு, சேதமடைந்துள்ளதாக பராமரிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
போர்ன்ஹோல்ம் தீவுக்கு அருகில் பால்டிக் கடலின் மேற்பரப்பில் எரிவாயு கசிவுகளை கட்டும் காட்சிகளை டென்மார்க்கின் பாதுகாப்புக் கட்டளையகம் வெளியிட்டுள்ளது. கடலில் 1 கி.மீ. வரை கசிவுகள் அடையாளம் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எரிவாயு குழாய்களில் ரஷ்யாவால் வேண்டுமென்றே சேதம் ஏற்படுத்தப்பட்டது என்ற கருத்தை ஏனைய ஐரோப்பிய தலைவர்களும் வெளியிட்டுள்ளனர்.
போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki) இது நாசவேலை என்று குற்றம் சாட்டினார். மேலும் இது உக்ரைன் போருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் ஒரே நேரத்தில் பல கசிவுகள் ஏற்பட்டுள்ளதென்பது தற்செயலாக இருக்காது. இது திட்டமிட்ட சதி என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்தார்.
அதே நேரத்தில் கடலுக்கு அடியில் எரிவாயு வலையமைப்பின் மீதான தாக்குதலை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை என ஜேர்மன் ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும் கூறினார்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக விதிக்கப்பட்ட ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக எரிவாயு விநியோகத்தை குறைப்பதைப் பொருளாதார ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் முன்பு குற்றம் சாட்டியது.
எனினும் ரஷ்யா இதை மறுக்கிறது. தங்கள் மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக எரிவாயு குழாய் உள்கட்டமைப்பை சரியாகப் பராமரிக்க இயலாதுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.