Thursday 2nd of May 2024 01:44:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
பொருளாதார நெருக்கடியால் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் இணைக்கும் பெற்றோர் - வடக்கில் அவலம்

பொருளாதார நெருக்கடியால் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் இணைக்கும் பெற்றோர் - வடக்கில் அவலம்


பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தால் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் அவதிப்படும் வட பெற்றோர் தமது குழந்தைகளை சிறுவர் இல்லங்களில் இணைக்கும் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளன.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் மட்டும் 246 சிறுவர்கள் பெற்றோரால் வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன.

வடக்கில் உள்ள சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்கு பொருளாதார நெருக்கடியே நேரடி மற்றும் மறைமுக காரணியாக உள்ளது என வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் இராஜேந்திரம் குருபரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி சவால்கள் காரணமாக மாகாண வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதனால் இவ்வாறு இல்லங்களில் அனுமதிக்கப்படும் சிறுவர்களை பராமரிக்க சிறுவர் இல்லங்களிடம் போதுமான நிதி இல்லை எனவும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக தாய்மார்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் வேலை இழக்கும் போது, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அதனால் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர் என இராஜேந்திரம் குருபரன் கூறினார்.

தேசிய மாற்று பராமரிப்புக் கொள்கையின் கீழ் குழந்தைகளை அவர்களது குடும்பங்களால் பராமரிக்க முடியாத போது அவர்களுக்கு ஆதரவளித்து வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் பராமரிக்கிறது. இக்கொள்கை சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

கருவூலத்தின் மூலம் வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துக்கு மாகாண நிதியில் இருந்து ஒதுக்கீடு பொதுவாக வழங்கப்படும். ஆனால் திடீர் பொருளாதார நெருக்கடி இந்த நடைமுறையை பாதித்து, நிதி கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் மாகாண நிதியை பயன்படுத்துகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்போதைய புள்ளி விவரத் தரவுகளின் படி வடக்கில் பதிவு செய்யப்பட்ட 37 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் 1,529 சிறுவர்கள் உள்ளனர். இவர்களில் 689 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE