உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை வெளியிடும் சாத்தியம் உள்ளதாக பிரிட்டன் உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ரஷியாவுடன் தங்கள் பகுதிகளை இணைப்பது தொடர்பாக ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இந்த நிலையில், ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை உரையாற்றவுள்ளார். இதன்போது ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உக்ரைன் மீதான போரில் அந்நாட்டில் சுமார் 20 வீதமாக பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும் அண்மைக் காலங்களில் உக்ரைன் படைகள் தீவிர பதிலடி கொடுத்து ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றன. போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவு புடின் மீதான அதிருத்தியை ரஷ்யாவில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் தனது ஆதரவை பெருக்கிக்கொள்ள புடின் முயல்வதாக அதிகாரிகள் கருதுகின்றனா்.
எனவே, நாடாளுமன்ற உரையின்போது ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை புடின் வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று பிரிட்டன் உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.