ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவின் போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேலும் 11.7 பில்லியன் டொலர் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தவும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கவும் 4.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்படும். அத்துடன், இராணுவம், உளவுத்துறை மற்றும் பிற பாதுகாப்பு துறை சார்ந்த ஆதரவுகளுக்காக 2.7 பில்லியன் டொலர்கள் இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைவிட அடுத்த காலாண்டில் உக்ரைன் அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கு ஆதரவு வழங்க இதன் கீழ் 4.5 பில்லியன் டொலர்களும் ஒதுக்கப்படும். இதனைக் கொண்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிர்வாகம் அத்தியாவசிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கலாம். மோதலில் இருந்து தப்பிச் செல்லும் உக்ரேனியர்களுக்கு ஆதரவளிக்கலாம் மற்றும் பொதுமக்களுக்கு உதவவும் ஏனைய முக்கியமான செலவுகளை ஈடுகட்டவும் இந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என்று உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் இருந்து உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உதவியான 11.7 பில்லியன் புதிய அவசர கால இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கும் முடிவுக்கு பைடன் இந்த மாத தொடக்கத்தில் காங்கிரசின் ஒப்புதலைக் கோரினார். இதற்கே காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 7 மாதங்களாக ரஷ்யாவின் போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல பில்லியன் டொலர் ஆயுத, பொருளாதார உதவிகளை ஏற்கனவே வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.