இந்தியாவில் செயற்பட்டு வரும் பி.எப்.ஐ. இஸ்லாமிய அமைப்புக்கு (Popular Front of India - PFI) 5 ஆண்டுகள் தடை விதித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சு இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இந்த அமைப்புடன் தொடர்புடைய கம்பஸ் ப்ரண்ட் ஒப் இந்தியா (campus friends of india), ரிஹாப் இந்தியா பவுண்டேசன் (Rehab India Foundation – RIF) ஆகிய அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒபரேஷன் ஒக்டோபஸ் (peration octopus) என்ற செயற்றிட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பி.எப்.ஐ. அமைப்பை முடக்க வேண்டும், அதை தடை செய்ய வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக நிர்வாகிகள், அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேச அரசுகள் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நேரடியாக பரிந்துரையும் செய்தன.
2006இல் இந்த அமைப்பு கேரளாவில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த அமைப்பின் வங்கி கணக்குகளை சட்ட அமலாக்கத்துறை முடக்கியது.
தற்போது டெல்லியை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது 1993ல் கேரளாவில் தேசிய அபிவிருத்தி முன்னணி என்ற அமைப்பு இஸ்லாமியர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மற்றும் மற்ற இஸ்லாமிய அமைப்புகள் சில இணைந்துதான் 2006இல் பி.எப்.ஐ. அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கடலோர மாநிலங்களில் இந்த அமைப்பு வலுவாக இருந்து வருகிறது. 2 வருடங்களுக்கு முன் இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ரவூப் செரீப் கைது செய்யப்பட்டார். அவரின் வாங்கி கணக்கில் பல கோடி முதலீடு செய்யப்பட்டதாக அமுலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.
அத்துடன், நீதிமன்றில் அமுலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இந்த அமைப்பின் பல்வேறு கணக்குகளில் கணக்கில் வராத 100 கோடிக்கும் அதிகமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என்று கூறியது.
இந்தியாவில் நடந்த பல போராட்டங்கள், டெல்லி கலவரம் ஆகியவற்றில் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.அதோடு கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் போராட்டத்திற்கும் இந்த அமைப்பின் மாணவர் பிரிவுதான் காரணம் என்று கர்நாடக பாஜகவினர் மூலம் புகார் வைக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2014இல் இருந்து பல்வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. 2014க்கு பின் இந்த அமைப்பை சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகளுக்கு பல கோடி முதலீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை அமுலாக்கத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது.
பி.எப்.ஐ. மிகவும் ஆபத்தான இயக்கம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஒபரேஷன் ஒக்டோபஸ் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. அதன்படி மொத்தம் 270 பேர் இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இவர்கள் கலவரத்தை உருவாக்கியதாகவும், சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆட்களை சேர்த்ததாகவும் இந்த அமைப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 22-ஆம் திகதி முதல் 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. இயக்க நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 93 இடங்களில் மாநில அரசின் ஒத்துழைப்புடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல்களின் போது அந்த இயக்கத்தின் 106 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நேற்று 8 மாநிலங்களில் பி.எப்.ஐ. நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் திடீர் தேடுதல் நடத்தப்பட்டது. 8 மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் 60; அஸ்ஸாமில் 8; மகாராஷ்டிராவில் 6 பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் 30; உத்தரப்பிரதேசத்தில் 10; மத்திய பிரதேசத்தில் 21 பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்பே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பிற்கு எதிராக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கனவே இந்த அமைப்பு மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம், சட்ட விரோத கூட்டம் சேர்த்தல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 19 வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில்தான் பி.எப்.ஐ. அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வெளிப்படையாக சமூக சேவை அமைப்பு போல செயல்பட்டாலும், உள்ளே அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை செய்து வருகிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். முக்கியமாக குறிப்பிட்ட சமுதாய மக்களை ஓரம்கட்டி, அவர்களை தப்பான திசைக்கு கொண்டு செல்கிறார்கள். இவர்கள் நீதிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள், என்று கூறி இந்த அமைப்பிற்கு இந்தியா தடை விதித்துள்ளது.