Monday 7th of October 2024 09:06:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 27 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 27 (நா.யோகேந்திரநாதன்)


அன்றைய பாடசாலை முடிந்த பின்பு விடுதிக்கு வந்த மதிவதனி உடுப்புகளை மாற்றிவிட்டுப் பகலுணவை முடித்து விட்டுத் அறைக்குத் திரும்பி வந்திருந்தாள். அவளின் கண்கள் தன் மேசையில் கடந்த இரவு படித்துவிட்டு வைத்த புத்தகத்ததைத் தேடின.

அவள் வழமையாகவே பகலுணவு முடித்ததும் தங்கள் விடுதியின் முற்றத்தில் நின்றிருந்த பாலை மரத்தின் நிழலில் கதிரையைப் போட்டுவிட்டு புத்தகங்கள் வாசிப்பதுண்டு. அவள் கல்வியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் விஜி அவளின் பிறந்த நாளன்று “சேகுவேரா” என்ற புத்தகத்தைப் பரிசளித்திருந்தாள். விஜியின் அன்பளிப்பு என்பதால் அதை அவள் முதலில் ஆவலுடன் படித்த போதிலும் போகப்போக அதற்குள் ஆழமான அர்த்தங்களை அவளால் தரிசிக்க முடிந்தது. அதை அவள் மீண்டும் மீண்டும் படித்க்கும்போது ஒவ்வொரு முறையும் புதுப்புது விஷயங்களையும் புதுப்புது அர்த்தங்களையும் அவளால் உணர்ந்து கொள்ளமுடிந்தது.

அவள் கடந்த இரவு படித்துவிட்டு மேசையில் வைத்த அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அவள் புத்தகத்தில் இரவு விட்ட இடத்திலிருந்து மீண்டும் படிக்கத் தொடங்கியபோது ஒரு விவசாயி காட்டிக் கொடுப்பவனாக மாறியமைக்காகத் தண்டிக்கப்பட்டதையும், அதற்கு சேகுவேரா கொடுத்த விளக்கத்தையும் வாசிக்கமுடிந்தது.

அவர், “ஒரு விவசாயி துரோகியாக மாறும்போது பல்லாயிரக் கணக்கான தொழிலாளர் விவசாயிகளின் வியர்வையும் இரத்தமும் சிந்திக் கட்டி வளர்க்கப்பட்ட போராட்டத்தைப் பணத்திற்காக எதிரியிடம் விற்கும் உதிரியாகிறான். தன் வர்க்கக் குணாம்சத்தை உதறிவிட்டு எதிரி்க்குச் சேவை செய்யும் அவன் தன்னைப் பெற்ற தாயையும் தான் பெற்ற பிள்ளைகளையும் கொல்லத் தயங்கமாட்டான். எனவே அவன் உலகில் உயிர் வாழும் தகுதியை இழந்து விட்டவன். எனவே அவனுக்கு வழங்கப்படும் தண்டனை இனி உருவாகக் கூடிய துரோகங்களையும் அது களையும் துவம்சம் செய்துவிடும்” எனத் தன் தோழர்களுக்கு விளக்கம் அளித்திருந்தார்.

மதிவதனி அப்படியே புத்தகத்தை மடியில் கவிழ்த்து வைத்துவிட்டு கச்சேரிப் பெரியவரையும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையின் நியாயப்பாட்டையும் ஒருமுறை நினைவில் கொண்டு வந்தாள். அதேவேளையில், இந்தப் புத்தகத்தின் வெளி அட்டையைக் கூடப் படித்திராத பொன்னா அந்தச் சம்பவம் தொடர்பாக மயிலுக்குக் கோபத்துடன் கொடுத்த விளக்கமும் மனதுக்குள் ஓடியது.

ஒரு மாபெரும் புரட்சிவாதியும் ஒரு அப்பாவி விவசாயப் பெண்ணும் ஒரு கருத்தை வெவ்வேறு மொழிகளில் என்ற போதிலும் ஆணித்தரமாக எடுத்துரைத்தமை மதிக்கு அளவிடமுடியாத ஆச்சரியத்தையும் பொன்னா மீது ஒரு உயர்ந்த அபிப்பிராயத்தையும் தோற்றுவித்தது.

அப்போதுதான், பொன்னா வெளி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். மாலை நேரங்களில் குளத்தின் அலைகரையில் யானைகள் கூட்டமாக வந்து நின்று மேய்வதாக மதிவதனி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாள். அவள் பொன்னாவிடம் தன்னைக் கூட்டிப் போய் யானை காட்டுமாறு அடிக்கடி கேட்பதுண்டு. அன்று மாடுகளை நேரத்துக்குச் சாய்த்துக்கொண்டு போய் பட்டியில் அடைத்துவிட்டு குளத்தடிக்குப் போக வருவதாகப் பொன்னா கூறியிருந்தாள்.

“வாங்கோ.... பொன்னா..... சொன்ன மாதிரியே வந்திட்டியள்”, என்ற மதி தான் இருந்த கதிரையை அவளை நோக்கி இழுத்து விட்டவாறே, “இருங்கோ பொன்னா.... நான் புத்தகத்தைக் கொண்டு போய் வைச்சிட்டு வெளிக்கிட்டுக் கொண்டு வாறன்”, என்றாள்.

“என்ன புத்தகம் ரீச்சர்?”

“அது.. எங்கடை போராளிகள் இருக்கினமல்லே... அவையைப் போலை வெளிநாட்டிலை கொடுமையளுக்கு எதிராகப் போராடுற புரட்சிக்காரரின்ரை தலைவர் ஒருதற்ரை” கதை.

“அப்ப..... அங்கையும் கண்ணிவெடி வைக்கிறதெல்லாம் நடக்குமே....?” என அப்பாவித்தனமாய் கேட்டாள் பொன்னா.

மதிவதனி மெல்லச் சிரித்தவாறே “போராட்டமெண்டால் கண்ணிவெடி வைக்கிறது மட்டுமில்லைப் பொன்னா! வேறையும் கனக்க இருக்கு” என்றுவிட்டு அறையை நோக்கிப் போனாள்.

பொன்னாவால் பெரிதாக ஒன்றையும் விளங்கிக்கொள்ள முடியா விட்டாலும் போராளிகள் அநீதிக்கு எதிராகப் போராடுபவர்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.

சட்டையுடன் நின்றிருந்த மதிவதனி அதை மாற்றி பஞ்சாபி அணிந்து கொண்டு வந்ததைபை் பார்த்த பொன்னா! ”என்ன ரீச்சர்! சட்டையோடையே வந்திருக்கலாமே! அது சின்னப்பிள்ளை மாதிரி உங்களுக்கு நல்ல வடிவு” என்றாள்.

“என்ன வடிவு? படிக்கிற பிள்ளையள் அவையின்ரை பெற்றார் சட்டையோடை கண்டால் சரியில்லைத்தானே!” என்ற மதி, “வாங்கோ... போவம்”, என்றுவிட்டு விறாந்தைப் படிகளில் இறங்கினாள்.

பிரதான வீதியிலிருந்து பிள்ளையார் கோவிலுக்குப் போகும் பாதையில் இறங்கிய பின்பு இரு புறமும் வானோக்கி வளர்ந்திருந்த மரங்கள் கிளைகளால் தங்களுக்குக்குக் குடை பிடிப்பதாகவே மதி உணர்ந்தாள். அவர்களைக் கண்டதும் குரங்குகள் பாய்ந்ததால் எழுந்த ஒலி மதிவதனியைத் திடுக்கிட வைத்தது.

பொன்னா மெல்லிய சிரிப்புடன், “என்ன ரீச்சர் பயந்து போனியளே? அது மந்தியள், ஒண்டும் செய்யாது. பாஞ்சு போய் கொஞ்சத் தூரத்திலையிருந்து எங்களையே பார்ப்பினம்”, என்றாள். பற்றைக்குள்ளிருந்து பாதைக்குப் பாய்ந்து வந்த முயலொன்று நின்று இரு முன் கால்களையும் தூக்கி அவர்களைப் பார்த்து விட்டு மறுபக்கம் பற்றைக்குள் ஓடியது.

“என்ன பொன்னா! வெள்ளை முயல் இஞ்சை இல்லையே?”

“இல்லை ரீச்சர்.... அது சீமை முயலெண்டு சொல்லுற வளர்ப்பு முயல். காட்டு முயல் இப்பிடி நரை நிறம்தான்” என விளக்கம் கொடுத்தாள்.

சிலர் தாங்கள் படித்தவர்கள்... அறிவாளிகள் எனப் பெருமை பேசினாலும் காடுகள், மிருகங்கள், பறவைகள் பற்றி இந்த மக்களுக்கு உள்ள அறிவின் ஒரு சிறு துளி கூட அவர்களுக்கு இல்லையென மதிவதனி நினைத்துக்கொண்டாள். அந்தச் சிறு ஊடுகாட்டைத் தாண்டி அவர்கள் கோவிலடியை அடைந்தபோது அது வெறிச்சோடித் தென்பட்டாலும் அரச மரம் தன் கிளைகளில் அமர்ந்து கலகலத்த குருவிகளின் இசைக்குத் தன் இலைகளின் சலசலப்பால் தாளம் போடுவது போலிருந்தது அந்த இடம். கோவில் வெளிப்புறத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த குடுவையில் காணப்பட்ட விபூதியை எடுத்து இருவரும் பக்தியுடன் நெற்றியில் பூசிக் கொண்டனர்.

கோவில் பொங்கலுக்காக குளக்கட்டுக்கும் கோவிலுக்குமிடையேயிருந்த பற்றைகளெல்லாம் வெட்டப்பட்டு விட்டதால் அங்கு நின்ற சில மரங்களுக்கிடையால் குளக்கட்டு நிமிர்ந்து நிற்பது தெரிந்து கொண்டிருந்தது. குளக்கட்டு மண் மழை பெய்யும் நேரம் கரைந்து விடாமலிருக்க வருடாவருடம் அதன் சரிவில் அடுக்கப்படும் புல்லுக் கற்றைகள் சூரிய ஒளிபட்டுப் பச்சை நிறத்தில் பளபளத்துக்கொண்டிருந்தன.

அங்கு காணப்பட்ட ஒற்றையடிப் பாதையில் நடந்து இருவரும் அணையில் ஏற ஆரம்பித்தனர்.

சரிவான கட்டில் மதிவதனிக்கு ஏறுவது சற்று சிரமமாகவே இருந்தது. அதைக் கவனித்த பொன்னா! “ரீச்சர்... பச்சைப் புல்லு கால் சறுக்கப் பாக்கும். என்ரை கையைப் பிடியுங்கோ!” எனக் கூறித் தன் கையை நீட்டினாள்.

“வேண்டாம் நான் சமாளிப்பன்!” என்றவாறே மதிவதனி ஒரு கையை முழங்காலில் ஊன்றியவாறே, சற்று முன் பக்கமாகக் குனிந்து ஏறினாள்.

இருவரும் கட்டில் ஏறியதுமே மதிவதனி, “பொன்னா .... அங்கை பாருங்கோ..... யானைகள்”, என்றாள் ஆச்சரியத்துடன் அவள் கட்டில் ஏறியதில் களைப்படைந்திருந்தாள்.

பொன்னா, “இருந்து பாப்பம் ரீச்சர்!” என்று கூற இருவரும் ஓரிடத்தில் அருகருகே அமர்ந்து கொண்டனர்.

யானைகள் காலால் நிலத்தில் உள்ள புற்களைத் தேய்த்து விட்டுத் தும்பிக்கையில் எடுத்து மண்ணை உதறிவிட்டு வாயில் வைத்து உண்பதை மதிவதனி மகிழ்வுடனும் வியப்புடனும் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென அவள், “யானையள் இஞ்சை வந்தால் என்ன செய்யுறது பொன்னா!” எனப் பயத்துடன் கேட்டாள்.

“நாங்கள் கட்டிலை...... அவை அவை கரையிலை தண்ணியையும் சேற்றையும் தாண்டி வராயினம்... மற்றது நாங்கள் எதிர்க்காத்து வளத்திலைதான் நிக்கிறம். நாங்கள் நிக்கிறது அவைக்குத் தெரியாது... தெரிஞ்சாலும் கிளையாய் நிக்கிற யானையள் ஆக்களுக்குக் கிட்ட வராதுகள்”.

அந்த நேரத்தில் ஒரு யானை தன் குட்டிக்குத் தன் தும்பிக்கையில் புல்லை எடுத்து வாயில் ஊட்டி விட்டதைப் பொன்னா கவனித்தாள். அன்றிரவு குலம் தன் கையால் சோறு ஊட்டி விட்ட சம்பவம் நினைவுக்கு வரவே அவள் மனம் பரவசத்தில் தோய்ந்தது.

குளத்தின் நீர் வற்றிய பகுதிகளில் நின்றிருந்த சிறு மரங்களில் பறந்தும் பின் வந்தமர்ந்து வேடிக்கை காட்டிய பறவைகள் மரங்களே வெண்ணிற ஆடைகளல் போர்த்தப்பட்டிருந்தது போன்ற ஒரு ரம்பியமான தோற்றத்தை ஏற்படுத்தின.

தொலை தூர மரங்களின் பின்னால் இறங்கிக் கொண்டிருந்த சூரியன் அவற்றை செவ்வாணம் பூசி அலங்கரித்துக் கொண்டிருந்தான்.

மதிவதனி ஒன்றுமே அனுபவித்திராத அந்த அழகில் ஒன்றிப் போயிருந்த நிலையில் அவள் மனம் இனிய நினைவுகளை நோக்கிச் சிறகடித்தது.

அந்தப் பறவைகள் மீது வைத்த கண் வாங்காமல் பாத்துக்கொண்டிருந்த அவள், அவை அமர்ந்திருந்த மரங்களுக்கிடையே இருவர் துப்பாக்கிகளுடன் பதுங்கி வருவதைக் கண்டு விட்டாள்.

அவள் பதட்டத்துடன் “பொன்னா... அங்கை பாருங்கோ, மரங்களுக்கிடையிலை ஆரோ வாறாங்கள்” என்றாள்.

பொன்னா அவள் காட்டிய திசையில் உற்றுப்பார்த்தாள். நீளக் காற்சட்டையுடன் பதுங்கிக் கொண்டு வந்த அவர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே அவர்கள் அந்த ஊரையோ பாவற்காய்க்குளம், பட்டிக்குடியிருப்பு ஆகிய அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்களோ அல்ல என்பதை அவள் உறுதி செய்து கொண்டாள்.

“ரீச்சர்! உது ஆரோ பிறத்தியான்கள்..... நாங்கள் போவம்” என்றவாறே மதியின் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

அவர்கள் குளக்கட்டிலிருந்து இறங்க எத்தனித்தபோது “படபடவெனத்” தொடர் வெடிகள் கேட்கவே பொன்னா திருப்பிப் பார்த்தாள்.

அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த யானைகள் பிளிறியவாறே காட்டை நோக்கி ஓடின.

ஏதோ ஒருவித ஆபத்து நெருங்குவதை உணர்ந்து பொன்னா, “இனி இஞ்சை நிக்கக்கூடாது. வீட்டை போய்ச் சேருவம்” என்றவாறே மதிவதனியின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE