கனடா வரலாற்றில் மிகக் கடுமையான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் பியோனா சூறாவளி கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கியதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கடந்த வார இறுதியில் பியோனா சூறாவளி கரையை கடந்த போது நோவா ஸ்கோடியாவின் - போர்ட் ஆக்ஸ் பாஸ்க் நகரம் (Port aux Basques) கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தப் பகுதிக்கு நேற்று சென்ற பிரதமர் ட்ரூடோ, புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும், அங்கு உதவி மற்றும் மீட்புப் பணிகளில் முன்னின்று செயற்பட்டுவரும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களையும் சந்தித்தார்.
இந்த விஜயத்தின் போது பிரதமருடன் மாகாண அதிகாரிகள், அமைச்சர்கள் குடி ஹட்சிங்ஸ் மற்றும் சீமஸ் ஓ'ரீகன் ஜூனியர் ஆகியோர் உடனிருந்தனர்.
பியோனா சூறாவளி கடந்த வாரம் கிழக்கு கனடாவை பந்தாடியது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லாண்ட் ஆகிய மாகாணங்களும், பிரின்ஸ் எட்வர்ட் மற்றும் மாக்டலின் தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சேதமடைந்த முக்கியமான உள்கட்டமைப்புகளை சீர்படுத்த கனடாவுக்கு பல மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் தாக்கத்தில் இலட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் பெருமளவான இடங்களில் மின் கட்டமைப்புகள் சீர் செய்யப்பட்டு, மீள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோடியாவின் - போர்ட் ஆக்ஸ் பாஸ்க் நகரம் (Port aux Basques) புயல் தாக்கத்தின் பின்னர் ஒரு முழுமையான போர் மண்டலம் போன்று காட்சியளிப்பதாக அந்நகர மேயர் பிரையன் பட்டன் (Brian Button) கூறினார். இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இங்கு மட்டும் பல மில்லின் டொலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மேயர் பிரையன் பட்டன் கூறியுள்ளார்.
சேதமடைந்த எங்கள் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்களாகும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.