அமெரிக்காவை சமீபத்திய ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இயன் புயல் தாக்கத்தால் புளோரிடாவில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று புதன்கிழமை புளோரிடா கடலோரங்களில் 241 கி.மீ. வேகத்தில் பெரும் காற்று சூழன்றடித்தது. கடல் அலைகள் கரையோரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவற்றுடன் பலத்த மழையும் பெய்ததால் கடலோரப் பகுதிகள் முடங்கின.
மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவதையும் சில இடங்களில் வெள்ளம் ஏறக்குறைய வீடுகளின் கூரை மட்டத்துக்கு உயர்ந்துள்ளதையும் மரங்கள் காற்றில் வளைந்து ஆடுவதையும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் காண முடிந்தது.
புயல் நகர்வதால் மத்திய புளோரிடாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 2 மில்லியன் வீடுகள் மற்றும் வணிகங்கள் நிறுவனங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
புயல் பாதிப்புகளை ஈடுபட்ட உதவும் வகையில் புளோரிடாவில் பேரிடர் நிலையை பிரகடனப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் மாகாண அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதேவேளை, புளோரிடா கடற்கரையை நேற்று இயன் சூறாவளி நெருங்கியபோது படகொன்று மூழ்கியதில் அதிலிருந்த 20 கியூபா குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க எல்லைச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இயன் புயல் அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. புயலால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கியூபா முழுவதும் இருளில் மூழ்கியது.
இங்கு மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் அந்த நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் கடும் சேதம் அடைந்தன. இதன் எதிரொலியாக ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியது. இதனால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. 1.10 கோடி மக்கள் இருளில் தவிக்கின்றனர். மின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.