Thursday 23rd of May 2024 01:56:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வழித்தடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வழித்தடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு


ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் சதிச் செயல் மூலம் சேதமாக்கப்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில் எரிவாயு குழாய் செல்லும் வழிகளில் பாதுகாப்பை அதிகரிக்கப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 (Nord Stream) எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் திட்டமிட்மே எரிவாயு குழாய்களில் கசிவை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை குற்றஞ்சாட்டியுள்ளன. எனினும் ரஷ்யா மீது நேரடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.

இதேவேளை, எரிவாயு குழாய்களில் திட்டதிட்டு சேதம் ஏற்படுத்தியதாக ரஷ்யா மீது முன்வைக்கப்படும் மறைமுகக் குற்றச்சாட்டுக்கள் முட்டாள்தனமானது என ரஷ்யா நிராகரித்துள்ளது. பதிலான அமெரிக்கா இவ்வாறான சதிச் செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லையா? என ரஷ்யா கேள்வி எழுப்பியுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் மேற்கு நாடுகளை பழிவாங்கும் வகையில் ரஷ்யா எரிவாயு விநியோகத்தை ஆயுதமாக பயன்படுத்தியதாக ரஷ்யா முன்பு குற்றம் சாட்டப்பட்டது.

நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்களில் கசிவுகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டம் கைவிடப்பட்டது. செப்டம்பரில், பராமரிப்பு தேவை என்று கூறி, நோர்ட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு விநியோகத்தையும் ரஷ்யா இடைநிறுத்தியது.

ஆனால் இரண்டு குழாய் வழிகளிலும் இன்னும் வாயு நிரம்பியுள்ளது. குழாய்களில் சேதம் ஏற்பட்டதால் எரிவாயு கசிந்து கடல் மேற்பரப்பில் ஒரு கிலோமீற்றர் அகலத்தில் குமிழ்களாகப் பரவியுள்ளது.

குழாய்களில் எஞ்சியிருக்கும் எரிவாயு முழுமையாக வெளியேறும் வரை கசிவுகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என டேனிஷ் எரிசக்தி அமைச்சர் டான் ஜோர்கென்சன் தெரிவித்துள்ளார். எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டமை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிக சாத்தியமான பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, ரஷ்யா திட்டமிட்டே இந்த நாச வேலையைச் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் முட்டாள்தனமான மற்றும் அபத்தமானது என ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

கசிவுகள் குறித்து தாம் மிகவும் கவலையடைவதாகத் தெரிவித்த பெஸ்கோவ், வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் கூறினார்.

இதேவேளை, எரிவாயு குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதை அடுத்து குழாய் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க தனது இராணுவத்தை நிலைநிறுத்த நோர்வே முடிவு செய்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக மார்க்கங்களில் அதிகளவில் இராணுவம் நிலைநிறுத்தப்படும் என நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் (Jonas Gahr Storee) தெரிவித்துள்ளார்.

எரிவாயு குழாய் சேதமடைந்த பகுதிக்கு மிக நெருக்கமான நாடான டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சருடன் குழாய்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்ததாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

இதேபோன்று ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியை அமெரிக்கா தொடரும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார்.

நட்பு நாடுகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க கடற்படை தயாராக இருப்பதாக செய்தித் ஜேக் சல்லிவன் தொடர்பாளர் தெரிவித்தார்.

நோர்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் வழித்தடம்- சென் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ரஷ்ய கடற்கரையிலிருந்து வடகிழக்கு ஜேர்மனி வரை பால்டிக் கடலின் கீழ் 1,200 கிமீ நீளமுள்ள இரண்டு இணையான கிளைகளைக் கொண்டுள்ளது.

இந்தக் குழாய்களில் சேதமடைந்த பகுதிகளை மாற்ற வேண்டியிருக்கும் என்பதால், பழுதுபார்ப்பு பணிகளுக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதேபோன்று வேறு குழாய்களில் சேதம் ஏற்பட்டு அவற்றை சரி செய்ய ஒன்பது மாதங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: டென்மார்க், நோர்வே, அமெரிக்காபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE