Saturday 20th of April 2024 08:28:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
வசந்த முதலிகே உள்ளிட்டவர்களுக்கு சிறை; அமைச்சரின் மகனுக்கு பொலிஸ் பிணை - இரா.சாணக்கியன்!

வசந்த முதலிகே உள்ளிட்டவர்களுக்கு சிறை; அமைச்சரின் மகனுக்கு பொலிஸ் பிணை - இரா.சாணக்கியன்!


நாட்டுக்காக வீதியிலிறங்கி போராடியதற்காக வசந்த முதலிகே போன்றவர்கள் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டு 90நாட்களுக்கு மேலாக சிறையில் வைத்திருக்கமுயற்சிக்கும் அரசாங்கம் அமைச்சர் மகன் அரசவாகனத்தினை பயன்படுத்தி தனது காதலிக்கு காதல் கடிதம் வழங்கியதாக கூறி இளைஞனை குண்டர்களுடன் சென்று தாக்கியுள்ளார். அவருக்கு பொலிஸ் பிணை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த நாட்டினுடைய நிலைமை.

என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரி இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியினரும், சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப்பெறும்போராட்டம் இரண்டாது நாளாகவும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் இன்றைய தினம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரிக்கை விடுத்து கையெழுத்துப்பெறும்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோன் தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஒழுங்கமைப்பிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டதுடன் ஏறாவூர் நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

மட்டக்களப்பின் ஏறாவூர் என்றால் ஆயிரம் ரூபா தாளில் வரும் யானையினை வழங்கியவர் வாழும் பகுதியென தெற்கில் உள்ள மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட 20வது திருத்த சட்டத்திற்கு பிற்பாடு விலைபோன அமைச்சர் வாழும் பிரதேசமா ஏறாவூர் என்று கேள்வியெழுந்துள்ளது. இது ஏறாவூரில் வாழும் அனைத்து மக்களுக்குமான அவமானம். இதேபோன்று அவருடன் இணைந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று பாடசாலைகளில் மாணவர்கள் உணவு இல்லாமல் மயங்கிவிழும் நிலையில் இந்த மாவட்டத்தினை சோந்த மூன்று பேர் சென்று தமது புழைப்புக்காக அமைச்சுகளை எடுத்துக்கொண்டது இந்த மாவட்டத்திற்கான அவமானமாகும்.

நிதியே இல்லாத ஒரு நாட்டில் வீதி அபிவிருத்திக்கு ஒரு அமைச்சர், வர்த்தகர்கள் இந்த நாட்டிலிருந்து ஓடிஒளிந்து கொண்டிருக்கும் காலத்தில் வர்த்தகத்திற்கு ஒரு அமைச்சர். எமது சுற்றுச்சூழலை மீண்டும் அழிப்பதற்கு ஒரு அமைச்சர்.

முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்து முஸ்லிம்களை கொடுமைப்படுத்திய இந்த ராஜபக்ஸக்களை பாதுகாப்பதற்கு ஐநா மனித உரிமைகள் சபைவரைக்கும் செல்வதற்கு இவர்கள் தயாராகயிருக்கின்றார்கள். ராஜபக்ஸக்கள் செய்த அநியாயங்களை நாங்கள் சென்று ஐநா மனித உரிமை சபையில் கூறும்போது அவர்கள் அநியாயம் செய்யவில்லையென சொல்வதற்கும் ஓரு கூட்டம் மட்டக்களப்பில் இருக்கின்றது.

இன்று உயர்தரப்பரீட்சையெழுதவுள்ளவர்கள் தமது பரீட்சையினை மூன்று மாதங்களுக்கு பிற்போட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். உயர்தரப்பரீட்சை முடிவுகள் மிகவும் பிந்தி வெளியிடப்பட்டமையும் ஒரு காரணமாகும். இது தொடர்பில் உயர்தரம் எழுதும் மாணவி ஒருவர் கடையில் கலாநிதி வாங்கிய இராஜாங்க அமைச்சர் சுரேன்ராகவனிடம் கோரிக்கை விடுத்தபோது நாட்டில் போராட்டங்கள் நடந்தால் நீங்கள் கற்காததற்கு உங்கள் தாய்தந்தையர்களின் பிழையென கூறியுள்ளார். இவ்வாறான மோசமான கருத்துகளை வெளியிட்ட இராஜாங்க அமைச்சரை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாட்டுக்காக வீதியிலிறங்கி போராடியதற்காக வசந்த முதலிகே போன்றவர்கள் பயங்கரவாதிகள் என கைதுசெய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் வைத்திருக்கமுயற்சிக்கும் அரசாங்கம் அமைச்சர் பிரசன்ன ரணவீரவினுடைய மகன் அரசவாகனத்தினை பயன்படுத்தி தனது காதலிக்கு காதல் கடிதம் வழங்கியதாக கூறி இளைஞனை குண்டர்களுடன் சென்று தாக்கியுள்ளார். அவருக்கு பொலிஸ் பிணை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த நாட்டினுடைய நிலைமை.

நாட்டு மக்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடுப்புச்சட்டம். அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படுபவர்களுக்கு உழைப்புக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றது. இதற்காக தனது சொந்த சமூகத்தினை காட்டிக்கொடுப்போர் பாராளுமன்றத்தில் இந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE