மியான்மர் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், ஆங் சான் சூகி ஆட்சிக் காலத்தின் போது அவருக்கு ஆலோசகராக இருந்த அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டா்னல் மற்றும் 3 முக்கிய அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ரகசியக் காப்பு மீறல் குற்றச்சாட்டை நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. அதையடுத்து, அவர்கள் அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மக்களால் தெரிவு செய்யப்பட்ட சூகியின் தலைமையிலான அரசாங்கத்தை இராணுவம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து இராணுவத்திற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டங்களை ஆயுத முனையில் இராணுவம் அடக்கியது. இதனால் நாட்டில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.
இராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகினர். பெருமளவானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்களால் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.
அத்துடன், இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மீது சர்வதேச சமூகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் சூகிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கேலிக்கூத்து எனக் கூறி சர்வதேச நாடுகள் பல நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.