பாதுகாப்பு அதிகாரிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை அவசர உயர்மட்டக் கூட்டத்துக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் லூஹான்ஸ்க், கொ்சான், ஜபோரிஷியா, டொனட்ஸ் ஆகிய நான்கு பிராந்தியங்களை உத்தியோகபூர்வமாக ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளும் அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று வெளியிடவுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள இந்தப் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட சா்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் உக்ரைன் பிராந்தியங்களை இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகள் அறிவித்துள்ளன.
இவ்வாறான நிலையிலேயே பாதுகாப்பு அதிகாரிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை அவசர உயர்மட்டக் கூட்டத்துக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.