அமெரிக்கா - புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயன் சூறாவளி தாக்கங்களால் இதுவரை குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இயன் சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவை சமீபத்திய ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இயன் புயல் தாக்கத்தால் புளோரிடாவில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இயன் சூறாவளி தாக்கம் இன்று குறையாத நிலையில் இதன் தாக்கத்தால் புளோரிடாவில் சுமார் 2.2 மில்லியன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.
பல இடங்களில் பெரு வெள்ளம் பாய்கிறது. சிலர் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒர்லாண்டோ நகரில் வீடு வீடாகச் சென்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை தேசிய காவலர்கள் மீட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் 10 பேரும் தென்மேற்கு சார்லோட் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்தப் பகுதி கடுமையான காற்றால் மோசமாக பாதிக்கப்பட்டது.
பல பகுதிகளில் உக்கிர காற்று சுமார் 12 மணி நேரங்கள் நீடித்தது. அது மிருகத்தனமானது என புளோரிடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் புயல் பாதிப்புகளை ஈடுகட்ட உதவும் வகையில் புளோரிடாவில் பேரிடர் நிலையை பிரகடனப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் மாகாண அதிகாரிகள் கோரியுள்ளனர்.