மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான், சின்ன பண்டிவிரிச்சான் கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக கடந்த வெள்ளிக்கிழமை (23.09.2022) சின்னப்பண்டிவிரிச்சானில் தனி நபர் ஒருவரின் காணிக்கு பின்னால் 54 வயது மதிக்கதக்க வாவா என்று அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் ஸ்டான்லி என்ற நபர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மேலும் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வயல் வெளியின் அருகில் இருக்கும் வீட்டு காணிகளுக்குள் யானை புகுந்து பெறுமதிமிக்க மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தின் நடுப்பகுதி காணிகளுக்குள் யானை உட் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்ற நிலையில் மக்கள் அச்சத்தில் வீதிக்கு வந்துள்ளனர்.
எனினும் தற்போது வரை (இன்று இரவு) மடு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உடன் இணைந்து அப்பகுதி இளைஞர்கள் யானையை காட்டுக்குள் துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இக் கிராமங்களில் யானைகள் தொல்லை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதால் யானை வேலி போன்றவற்றை அமைத்தும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களாகிய தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அக்கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்