தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் விஜய் பெயரில் இயங்கி வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுள்ளதாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை மையமாக கொண்டு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இத்தகவல் நடிகர் விஜய் தரப்பில் மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனுவை எஸ்.ஏ.சந்திரசேகர் தாக்கல் செய்திருக்கிறார். அதில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. கடந்த பிப்ரவரியில் நடந்த பொது கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 29க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.