யாழ். மருத்துவமனைப் படுகொலைகள்! - நா.யோகேந்திரநாதன்!
'புரட்சியாளர்கள் வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்களா? இரத்த வெறி பிடித்தவர்களா? உயிர்களின் மதிப்பை உணராதவர்களா?
மனித உயிர்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு புனிதமானதெனக் கருதுபவர்கள் நாங்கள். அதுமட்டுமல்ல மனித குல விடுதலைக்காக வெகுவிரiவில் நாங்கள் எங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வுள்ளோம். மனச் சாட்சியின் உறுத்தல் கொஞ்சம் கூட இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய இராணுவத்தின் கூலிப்படைகள் போன்றவர்களல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம்'.
08.04.1929 அன்று வங்கத்தை இரண்டாகப் பிரிக்கும் 'ரௌலட்' சட்டம் முன் வைக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் விவாதிக்கப்பட்டிருந்தபோது இந்திய விடுதலை வீரர்களான பகத்சிங், பி.கே.தத் ஆகியோர் வெடிகுண்டுகளை வீசி விட்டு, தங்கள் நோக்கங்களை விளக்கிய துண்டுப் பிரசுரங்களை வீசினர். அங்கு விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது கொடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொண்ட சேர்.ஜோன்.சைமன் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதும், அவரோ அல்லது எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ எவ்வித பாதிப்புக்கு உட்படாத வகையில் குண்டு மண்டபத்தில் மத்தியில் வீசப்பட்டது. பகத் சிங்கும் அவரது தோழர் தந்தும் வெடிகுண்டை வீசிய பின்பு அந்நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கிவிட்டு எவ்வித எதிர்ப்புமின்றியே கைதானார்கள். அது தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் எவ்வித உயிர்ச் சேதமும் இடம்பெறாத வகையில் குண்டு வீசியதைப் பற்றி விளக்கமளித்து வழங்கிய வாக்குமூலத்தின் ஒரு பகுதியே இது.புரட்சிவாதிகளைப் பயங்கரவாதிகளெனவும் வன்முறைகளின் மீது காதல் கொண்ட இரத்த வெறியர்களெனவும் அதிகார பீடங்களும் ஒடுக்குமுறையாளர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் புரட்சிவாதிகள் தங்களையும் பொது மக்களையும் வேட்டையாடும் இராணுவத்தினருக்கு எதிராகவே போராடுகின்றனர். இராணுவத்தின் ஆயுத வன்முறைகளை ஆயுதப் போராட்டம் மூலம் எதிர்கொள்கின்றனர்.
ஆனால் கொலை செய்யவென்றே பயிற்றுவிக்கப்பட்டு துப்பாக்கிகள் வழங்கப்பட்ட இராணுவத்தினர் போராளிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு அப்பாவிப் பொது மக்களையும் வேட்டையாடுகின்றனர். பொது மக்கள் மீது இவ்வாறான பயங்கரங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பொதுமக்கள் போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதையோ, அவர்களை மறைத்து வைப்பதையோ தடுத்து நிறுத்த முடியுமெனவும், பொதுமக்களே போராளிகளைக் காட்டிக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், நிலைமைகளோ எதிர்விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. இராணுவத்தினரின் கொலை வெறியாட்டமும் கொடுமைகளும் தமக்கு உண்மையான பாதுகாப்புக் கவசம் போராளிகள் என அவை மக்களை உணர வைக்கின்றன.
பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஒப்பற்ற வீரர்களின் தியாகத்தால் உருவான சுதந்திர இந்தியாவின் இராணுவமும் ஏனைய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை இராணுவங்களுக்கு எவ்விதத்திலும் குறைந்ததாக இருக்கவில்லை.
சிங்கள இராணுவத்தின் கொடுமைகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றவெனக் கூறிக் கொண்டு வந்த இந்திய அமைதிப்படையும் பெருங் கொலை வெறியாட்டத்தை நடத்தியது.
தின்னைவேலியில் மக்கள் மீது டாங்கிகளை ஏற்றி நசுக்கிக் கொன்றமையில் தொடங்கி நடத்திய கொலை வெறியாட்டத்தின் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.
21.10.1987 அன்று இந்திய அமைதிப் படையினர் குருநகரில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்துள்ளதாகக் கூறி ஒரு பெரும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அதிகாலையில் எறிகணை வீச்சுடன் ஆரம்பமான நடவடிக்கை விமானக் குண்டு வீச்சுகளுடனும் உலங்கு வானூர்தித் தாக்குதல்களுடனும் அன்று பகல் முழுவதும் தொடர்கிறது.
அன்று இரவு முன்னிரவுப் பொழுதில் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையின் எட்டாம் இலக்க விடுதி மீது ஒரு எறிகணை விழுந்து வெடிக்கிறது. விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் உயிரிழக்க இன்னும் பலர் படுகாயங்களுக்குள்ளாகின்றனர். உடனடியாகவே தாதியர்களும், பணியாளர்களும் காயமடைந்தவர்களை அவசரமவசரமாக அகற்றி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
அதேவேளையில் சாந்தி தியேட்டர் பாதையால் மருத்துமனை நோக்கி ஒரு இராணுவ அணி முன்னேறுவதாகப் பரவிய செய்தியை அடுத்து நடமாடக் கூடிய நிலையிலிருந்த நோயாளிகள் பலரும் பராமரிப்புக்காக வந்து நின்ற பொது மக்களும் வெளியேறுகின்றனர்.
இரவு பதினொரு மணியளவில் கோட்டையிலிருந்து மருத்துவமனை நோக்கி பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அதில் ஒன்று வெளிநோயாளர் பிரிவில் விழுந்து வெடிக்கிறது. இரவு 1.30 மணியளவில் 8ம் இலக்க நோயாளர் விடுதியில் ஒரு எறிகணை விழுந்து வெடிக்கிறது. அதில் 7 நோயாளிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்படப் பலர் காயமடைகின்றனர்.
இந்த நிலையில்தான் மருத்துமனைப் பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோரில் ஒரு பகுதியினர் மருத்துவமனையின் பின் கதவால் வெளியேறுகின்றனர். அதேவேளையில் 4.00 மணியளவில் மருத்துவமனையின் முன்பகுதியூடாகப் புகுந்த படையினர் எல்லோரையும் அங்கேயே இருக்கும்படி எச்சரிக்கின்றனர். படையினர் வந்ததைக் கண்டதும் பல பணியாளர்கள் மேற்பார்வையாளர் அறையில் புகுந்து கொள்கின்றனர். அந்த அறைக்குள் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஓவசியர், அம்புலன்ஸ் சாரதி உட்படப் பலர் உயிரிழக்கின்றனர். மேலும் ஒரு சிப்பாய் அதற்குள் ஒரு கைக்குண்டை வீசுகிறான்.
இக்கொலை வெறியாட்டம் இடம்பெற்றபோது என்ன செய்வதென்று தெரியாத நோயாளர்களும், தாதியர் உட்பட்ட பணியாளர்களும் எக்ஸ் கதிர் அறைக்குள் புகுந்து கொள்கின்றனர். அந்த அறை நிரம்பி வழிந்த நிலையில் அங்கு வந்த சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், அறைக்குள் கைக்குண்டையும் வீசுகின்றனர். பெரும்பாலானோர் கொல்லப்பட ஒருசிலர் படுகாயமடைகின்றனர். சடலங்களும், காயமடைந் தவர்களும் அங்கேயே விடப்படுகின்றனர்.
அடுத்த நாள் 22.10.1987 காலை 8.30 மணியளவில் மருத்துவர் சிவபாதசுந்தரமும் 3 தாதியர்களும் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு வருகின்றனர். டொக்டர், 'நாங்கள் மருத்துவர்கள்' எனக் கூறிக் கொண்டு கையுயர்த்தி வந்த போதிலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. மருத்துவர் சிவபாதசுந்தரம் அவ்விடத்திலேயே உயிரிழக்க, 3 தாதியரும் படுகாயமடைகின்றனர். முற்பகல். 11.00 மணியளவில் கொலை வெறியாட்டம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. 10 பணியாளர்கள், டொக்டர், கணேசரத்தினம் உட்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்படுகின்றனர். அன்று மாலை சகல சடலங்களும் எரியூட்டப்படுகின்றன.
அதில் மருத்துவர்கள், தாதியர், பணியாளர்கள், நோயாளர்கள் என 70 இற்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். ஏராளமானோர் படுகாயமடைகின்றனர். அப்படுகொலைகள் தொடர்பாக இந்திய அமைதிப் படையின் நடவடிக்கையை பொறுப்பதிகாரி திபேந்திர சிங் புலிகள் மருத்துவமனைக்குள்ளிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், அந்த மோதலில் அகப்பட்டே பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்திருந்தார்.
இக்கொடூர நடவடிக்கை தீபாவளிப் பண்டிகையன்றே மேற்கொள்ளப்பட்டதெனக் கூறப்பட்டது. தமிழ் மக்கள் புத்தாடை உடுத்திப் பலகாரங்கள் பரிமாறி, தீபமேற்றி மகிழ்வாகக் கொண்டாடப்படும் பண்டிகையன்றே யாழ். மருத்துவமனையில் பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டு இரத்தாறு ஓடவிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வானொலி இந்திய அமைதிப் படை புலிகளின் குருநகர் முகாமைச் சுற்றி வளைத்ததாகவும் படையினரைப் பின்புறமாகத் தாக்க வந்த நிலையில் போராளிகள், படையினரின் எதிர்த்தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாமல் பின்வாங்கி மருத்துவமனைக்குள் புகுந்து பதுங்கியிருந்து படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவம் அந்த மோதலினிடையே அகப்பட்ட மருத்துவர்களும் தாதியரும் பணியாளர்களும் இறந்ததாகச் செய்தி வெளியிட்டது.
ஆனால், 21ம் நாள் பகல் முழுவதும் குருநகர் பக்கம் வெடிச்சத்தங்களும் எறிகணை வீச்சுகளும், உலங்கு வானூர்தி தாக்குதல்களும் இடம்பெற்றன. ஆனால் அங்கு புலிகளின் முகாம் ஒன்று இயங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லையெனவும் எதிர்த்தாக்குதல் எதுவும் தென்படவில்லையெனவும் அப்பகுதியிலிருந்து தப்பி வந்த மக்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால் மக்களின் குடியிருப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகின. மக்கள் ஏற்கனவே அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், 22ம் திகதியும் அப்பகுதியில் வெடிச்சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தன.
23.11.21987 அன்று புலிகள் குருநகரை விட்டு சாவகச்சேரி கிராமங்களை நோக்கிப் பின்வாங்கி விட்டதாக இந்திய அமைதிப் படையினர் அறிவிக்கின்றனர்.
அதேவேளை யாழ்ப்பாண நகரிலிருந்தும் சுற்றிவர இருந்த ஊர்களிலிருந்தும் மக்கள் சாவகச்சேரி நோக்கி வெளியேறி விட்டனர். கோப்பாய், இருபாலை, தின்னைவேலி, கொக்குவில், உரும்பிராய் போன்ற ஊர்களின் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கோவில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.
25.10.1987 அன்று 'ஒப்பரேஷன் பவன்' படை நடவடிக்கை முடிவுக்கு வந்து விட்டதாகவும் புலிகள் விரட்டப்பட்டு விட்டதாகவும் பொது மக்களை வீடுகளுக்குச் செல்லும்படியும் இந்திய அமைதிப் படை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறது.
ஆர்.ஐ.எஸ். காஹியோன் தலைமையில் 50,000 படையினர் இந்நடவடிக்கையில் இறங்கியதாகவும் 274 படையினர் உயிரிழந்ததாகவும் 600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. அதேவேளையில் 600 புலிகள் கொல்லப்பட்டதாகவும் 200 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் உட்படப் பொது மக்களே என்பதே உண்மையாகும். கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட புலிகளின் எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்டதே.
எப்படியிருந்தபோதிலும் 3 வாரங்கள் இடம்பெற்ற 'ஒப்பரேஷன் பவன்' நடவடிக்கையும் அதன் போது மேற்கொள்ளப்பட்ட தின்னைவேலிப் படுகொலையும், மருத்துவமனைப் படுகொலைகளும் 'மனச்சாட்சியின் உறுத்தல் எதுவுமின்றிக் கொலை செய்யவே பயிற்றுவிக்கப்பட்ட இராணுவம்' என்ற பகத்சிங் அவர்களின் கூற்றை மீண்டும் ஒருமுறை இந்திய அமைதிப் படையும் நிரூபித்தது.
தொடரும்....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்