இந்திய அமைதிப் படையை வெளியேற்றுவதில் அரசு – புலிகள் ஐக்கியம்! - நா.யோகேந்திரநாதன்!
'எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் யுத்த நடவடிக்கையிலும் சரி இருவிதமான முரண்பாடுகளை எதிர்கொள்கிறோம். ஒன்று– எமக்கும் எதிரிகளுக்குமிடையேயுள்ள முரண்பாடு. இது பகை முரண்பாடாகும். அடுத்தது – எமது மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடு. இது சிநேகபூர்வமான முரண்பாடு.
எமக்கும் எதிரிக்குமிடையேயுள்ள பகை முரண்டுபாடானது ஒருவரை மற்றவர் வெற்றிகொள்வதன் மூலமோ அல்லது அழிக்கப்படுவதன் மூலமோ மட்டுமே தீர்க்கப்பட முடியும்.
ஆனால் எமக்கும் எதிரிக்குமிடையேயான பகை முரண்பாடு சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகச் சிநேகபூர்வமாக மாறிவிடக்கூடிய தேவைகளும் ஏற்பட்டு விடுவதுண்டு.அதாவது, எமக்கும் எமது எதிரிக்கும் பொது எதிரியாக இருக்கக்கூடிய ஒரு சக்தி இரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கைகளில் இறங்கும்போது எமக்கும் எமது எதிரிக்குமிடையேயான பகை முரண்பாடு ஒரு சிநேக பூர்வமான முரண்பாடாக மாற்றமடைகிறது. இது பொது எதிரியைத் தோற்கடிப்பதில் நாம் கையாள வேண்டிய ஒரு தந்திரோபாயத் தேவையாகும்.
இப்படியான புறச்சூழலைக் கையாள மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சிலர் நாம் எமது கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டதாக விமர்சிக்கின்றனர். அது தவறான கருத்தாகும். ஏனெனில் பொது எதிரியை தோற்கடிப்பதன் மூலம் நாம் ஒரே நேரத்தி ல் இரு தரப்பினருடன் போராடும் இக்கட்டான நிலையைத் தவிர்த்து விடுகிறோம். அது எமது கொள்கை முன்னெடுத்துச் செல்லவும், எமது எதிரியை தோற்கடித்து வெற்றி பெறவுமான வாய்ப்புகளை உருவாக்குகிறது'.
இது சீனா மீது ஜப்பான் படையெடுத்த போது மா ஓசெதுங் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் பரம வைரியான சியாங்கை சேக்கின் தலைமையிலான கொமிங்டாங் ஆட்சியாளர்களுடன் ஐக்கிய முன்னணி அமைத்து ஜப்பானுக்கு எதிரான போரில் இறங்கிய போது மா ஓசேதுங் கொள்கையிலிருந்து விலகி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தபோது அவர் வழங்கிய பதிலறிக்கையின் சாராம்சம்.
மிங் - சுங் வம்சங்களின் நிலப்பிரபுத்துவ ஆட்சியின் கீழ் வறுமையிலும் நோயிலும் இயற்கைப் பேரிடர்களாலும் துயரங்களையும் அழிவையும் சந்தித்த சீன தேசம், 'சன்யாட்சன்' தலைமையில் கொமிட்டாங் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி காரணமாக ஒரு ஜனநாயக நாடாக உருவாகியது. விவசாயிகள் மத்தியிலும் தொழிலாளர் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றிருந்த கம்யூனிஸ்டுகளையும் ஒன்றிணைத்து ஒரு புதிய ஜனநாயக நாடாகச் சீனாவைக் கட்டியெழுப்பினார்.
சன்யாட்சனின் இறப்பின் பின் கொமின்டாங் கட்சியின் தலைமையைக் கைப்பற்றிய சியாங்கை சேக் அமெரிக்கச் சார்பானவராக மாறி கம்யூனிஸ்ட்டுகளுக்கெதிரான போரைக் கட்டவிழ்த்து விட்டான்.
கிராமங்களை நோக்கிப் பின்வாங்கிய கம்யூனிஸ்டுகள் கியாங்சி மாகாணத்தில் தொழிலாளர், விவசாயிகளின் அரசியலதிகாரத்தை, நிலப்பிரபுக்களின் அரசியலதிகாரத்தை வீழ்த்தி தளப் பிரதேசங்களை அமைத்தனர்.
13 வருடங்கள் தொடர்ந்து கொமிண்டாங் படைகள் இப்பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கான பல படையெடுப்புகளை மேற்கொண்டபோதும் அவற்றையெல்லாம் சீன செஞ்சேனை முறியடித்தது. இறுதியில். கொமிண்டாங் மேற்கொண்ட ஒரு சுற்றிவளைப்பின்போது செஞ்சேனை சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு வடக்கை நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தது. தொடர்ந்து போர்களை நடத்தியவாறே 10,000 மைல்கள் நீண்ட பயணத்தை மேற்கொண்டு வட சீனாவை அடைந்தது.
இந்த நிலையில்தான் ஜப்பான் சீனா மீது படையெடுப்பை மேற்கொண்டது.
அந்த நிலையில்தான் பொது எதிரியான ஜப்பானுக்கு எதிரான போரை மேற்கொள்ள மா ஓசேதுங், பரம வைரியான சியாங்கை சேக்குடன் ஜப்பானுக்கெதிரான ஐக்கிய முன்னணியை அமைத்துப் போரைத் தொடர்ந்தார்.
காலகாலமாக தொழிலாளர், விவசாயிகளின் அரசியலதிகாரத்தை இல்லாமல் செய்ய பெரும் படை நடவடிக்கைகளை மேற்கொண்ட கொமிடாங்குடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைக் கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் எதிர்த்தனர்.
அவ்வேளையில்தான் பொது எதிரிக்கெதிரான ஒரு ஐக்கிய முன்னணி அமைப்பதன் தந்திரோபாயத் தேவைகள் பற்றி மா ஓசேதுங் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வழங்கிய விளக்கம்தான் இது.
இலங்கையிலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னணிச் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் அமைதிப்படை என்ற பேரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இந்தியா இறங்கியபோது அதே வகையிலான தந்திரோபாயத்தையே கையாண்டனர்.
சிங்கள பௌத்த தரப்பினால் இலங்கையின் வரலாற்று நூல் எனக் கொள்ளப்படும் மகாவம்சத்திலிருந்து அதன் பின்பு சிங்கள வரலாறு படைத்தவர்கள் வரை இந்திய எதிர்ப்பைச் சிங்கள மக்கள் மத்தியில் நிலை பெறச் செய்வதில் வெற்றி பெற்றிருந்தனர்.
அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த சேனன், குத்திகன் ஆகியோர் தென்னிந்தியாவிலிருந்து வந்த குதிரை வணிகர்கள் எனவும், அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளன் ஒரு சோழ இளவரன் எனவும் சிங்கள மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். பிற்காலத்தில் இடம்பெற்ற பாண்டிய, சோழப் படையெடுப்புகளும் இந்தியாவைச் சிங்களவர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பாளர்கள் என்ற கருத்தை வலுப்பெறச் செய்திருந்தன.
ஒரு சிங்களத் தேசியவாதியாக முன்னிலைப்படுத்திய ரணசிங்க பிரேமதாச இந்திய அமைதிப் படைகளை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டிதென்பது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.
அதேவேளையில் ஜே.வி.பி. பிரேமதாஸ ஆட்சிக்கெதிராகத் தங்கள் கிளர்ச்சியை விரிவுபடுத்திய போதும் அவர்களின் ஆரம்ப நடவடிக்கைகள் இந்திய எதிர்ப்புவாதத்தை மூலமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டன. எனவே ஜே.வி.பி. கிளர்ச்சி கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது அது ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்புவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பிரசாரத்துக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்பதையும் பிரேமதாச உணர்ந்திருந்தார்.
எனவேதான் ஒரு தீவிர இந்திய எதிர்ப்பாளன் எனக் காட்ட வேண்டிய தேவையும் அவருக்கிருந்தது.
எனவே அவர் ஒருபுறம் இந்தியப் படைகளைத் திருப்பி அழைக்கும்படி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்த வேளையில் மறுபுறம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், உட்படப் பல்வேறு உதவிகளை வழங்கி புலிகள் - இந்தியப் போரில் புலிகளைப் பலப்படுத்தினார்.
1980ம் ஆண்டு காலப்பகுதியில் தொடங்கி 1987ம் ஆண்டுவரை இலங்கையின் ஆட்சியாளர்கள் புலிகளையும் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் பூண்டோடு அழிக்கும் நோக்கத்துடன் போரைக் கட்டவிழ்த்து விட்டனர். அதேபோன்று விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்துடனான போரில் தீவிரமாக இறங்கியிருந்தனர்.
ஆனால் இந்தியப் படைகளை வெளியேற்றுவது என்ற நோக்கத்தில் இரு தரப்பினரும் ஒரே கோட்டில் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான பகை முரண்பாடு சிநேகபூர்வ முரண்படாக மாற்றமடைய, இந்தியாவுக்கும் புலிகள், பிரேமதாச தரப்பினருக்குமிடையேயான பகை முரண்பாடு பிரதானமாகியது. எனவே ஜப்பானுக்கெதிரான போரில் கொமின்டாங்குக்கும் செஞ்சேனைக்குமிடையே எப்படி ஒரு ஜப்பானுக்கெதிரான ஐக்கிய முன்னணி உருவாகியதோ அவ்வாறே இலங்கையிலும் இந்தியாவை வெளியேற்றுவதில் புலிகளுக்கும் பிரேமதாசவுக்குமிடையே ஒரு ஐக்கியம் உருவானது.
அதேவேளையில் விடுதலைப் புலிகள் தங்கள் தமிழீழக் கோரிக்கையையோ பிரேமதாச தனது சிங்கள தேசியவாதக் கொள்கையையோ கைவிடவில்லை.
எனினும் இரு தரப்பினருக்குமிடையே சமாதானப் பேச்சுகள் ஆரம்பமாகின. புலிகள் பிரிவினைவாதத் தடைச் சட்டமான அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் நீக்கப்படவேண்டுமெனவும் மாகாண சபை கலைக்கப்பட்டு மீண்டும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் இரு நிபந்தனைகளை முன் வைத்தே பேச்சுகளை ஆரம்பித்தனர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில் அது சாத்தியமில்லை என்பதைப் பிரேமதாச தெரிந்திருந்தும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
ஏனெனில் இந்தியப் படையை வெளியேற்றப் புலிகளுக்கு எப்படிப் பிரேமதாசவின் உதவி தேவைப்பட்டதோ அவ்வாறே பிரேமதாசவுக்கும் புலிகளின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.
1988ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தியப் படைகளின் வெளியேற்றம் 1990 மார்ச்சின் நிறைவு பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டி.எல்.எவ்., ரேலோ ஆகிய இயக்கங்களும் இந்தியப் படையுடன் இணைந்து வெளியேறின. இந்திய அமைதிப் படையின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு இராணுவமும் உருக்குலைந்து போனது. தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்ட வரதராஜப் பெருமாளும் அவரின் அணியினரும் வெளியேறி விடவே வடக்குக் கிழக்க மாகாண சபையும் செயலிழந்து போய்விட்டது.
இந்திய இராணுவம் 1988 இறுதிப் பகுதியில் வெளியேற ஆரம்பித்தபோதே விடுதலைப் புலிகள் அந்த வெற்றிடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அதில் அவர்களுக்கும் சிரமம் எதுவும் இருக்கவில்லை. ஏனெனில் புலிகளின் பிரதான படையணிகள் மணலாற்றுக் காட்டில் இந்திய அமைதிப் படையுடன் போரிட்டுக் கொண்டிருந்த சம காலத்திலேயே இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் புலிகள் மக்கள் மத்தியில் நடமாடித் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அக்காலங்களில் மக்களே போராளிகளுக்கு உணவு போன்ற தேவைகளை வழங்கியதுடன் பாதுகாத்தும் வந்தனர்.
அதேவேளையில் வடக்குக் கிழக்கில் நிலை கொண்டிருந்த சிறுதொகையினரான இராணுவமும் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தனர். தெற்கில் ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் இலங்கை இராணுவத்தை வடக்கு கிழக்கு நோக்கி நகர்த்தவும் முடியவில்லை.
எனவே இந்திய இராணுவம் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் வடக்குக் கிழக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வந்து விட்டது.
எனினும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. மாகாண சபை கலைக்கப்படாமலே, செயலிழந்துவிட்ட நிலையில் 6வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு புலிகள் வலியுறுத்தினர். எனினும் பிரேமதாச அதற்கு மறுப்புத் தெரிவிக்காமலே பேச்சுகளை இழுத்தடித்து வந்தார். ஆனாலும் பேச்சுகள் காரணமாக பொருளாதாரத் தடை, பயணத் தடைகள் நீக்கப்பட்டு ஒரு சுமுகமான சூழல் ஏற்படுத்தப்பட்டது.
எப்படியிருந்தபோதிலும் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கிடையே உருவாக்கப்பட்ட ஐக்கியம் இந்தியப் படைகளை வெளியேற்றுதல் எல்லைக்குட்பட்டதே என்ற உண்மை ஒருசில மாதங்களிலேயே பகிரங்கமாக வெளிப்பட்டது.
தொடரும்.....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்