மஹாவம்சத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்தியல்! - நா.யோகேந்திரநாதன்!
'புத்தர் தமது மறைவுக்கு முன்பு இலங்கையின் பாதுகாப்பை சக்ராவிடம் ஒப்படைத்தார். புத்தருக்குத் தமது தத்துவம் இறுதியில் இலங்கையிலேயே ஸ்தாபிக்கப்படும் என்பது தெரிந்திருந்தது. புத்தரின் ஆணையை ஏற்றுக்கொண்ட சக்ரா விஷ்ணுவை அழைத்து இலங்கையின் பாதுகாப்பை அவரிடம் ஒப்படைத்தார். இக்கட்டுக் கதைகள் வரலாற்று உண்மைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு மதகுரு வரலாற்றாசிரியராகும்போது இதுதான் நடக்கிறது. மகாவம்சம் ஒரு மதகுருவால் எழுத்தப்பட்டது. கி.பி.6ம் நூற்றாண்டில் தாதுசேன மன்னன் ஆட்சியில் மஹாநாம தேரர் என்ற பௌத்த பிக்குவால் மஹாவம்சம் எழுதப்பட்டது. மஹாவம்சத்தின் பிரதிகள் அனைத்தும் எரித்தழிக்கப்படவேண்டும். ஏனெனில் சிங்கள பௌத்தர்களின் இன ரீதியான சிந்தனைக்கு அவைதான் பெரிதும் பொறுப்பானவை'.
இலங்கையின் சிங்கள பௌத்த புத்திஜீவிகளில் ஒருவரும் சிறந்த கல்விமானுமாகிய டாக்டர் ஈ.பி.டபிள்யூ.அதிகாரம் அவர்கள் 1983ம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்புக் கலவரம் பற்றி எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டிய விடயமாகும். இதே கருத்தை இலங்கையில் பிரதான தொல்லியலாளரான பரணவிதாரன அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இக்கூற்றுகளை நோக்கும்போது இனமோதலின் மூலக்கூறுகள் மகாவம்சத்தினூடாகவே உருவாக்கப்பட்டதென்ற முடிவுக்கு வரக்கூடும். இன மோதலின் அதாவது சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்தியலை வலுப்படுத்துவதில் 'மகா வம்சம்' ஒரு பிரதான பங்காற்றினாலும் அதற்கான அடிப்படைகள் ஏற்கனவே பரப்பப்பட ஆரம்பிக்கப்பட்டு விட்டன.பௌத்த மதம் பரவி நிலைபெற ஆரம்பித்த காலகட்டத்தில் சிங்கள மக்கள் மத்தியில் நிலவி வந்த கர்ணபரம்பரைக் கதைகள், மரபுசார் நம்பிக்கைகள், விகாரைகள், மன்னார்கள் பற்றிய கதைகள் என்பன பௌத்த பிக்குகளால் சேகரிக்கப்பட்டன. இவை மகாவிகாரையில் அட்டகதா மகாவம்சம் என்ற பேரில் தொகுக்கப்பட்டன. பின்பு கி.பி.4ம் நூற்றாண்டில் அட்டகதா மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு தீபவம்சம் எழுதப்பட்டது. இதுவும்கூட ஒரு ஒழுங்குக்கு உட்பட்டதாகவோ, தெளிவானதாகவோ இருக்கவில்லை.
இந்த நிலையில் பன்மொழிப்புலவரான மகாநாம தேரரால் கி.பி. 6ம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்டது. இது விஜயனின் இலங்கை வருகையில் தொடங்கி மகாசேனனின் ஆட்சிக் காலம் வரை ஒரு வரலாற்று நூலை ஒத்த ஒழுங்குடனும், காவியத் தன்மையுடனும் அமைந்துள்ளது. இது பல பொய்களையும் புனைகதைகளையும் நம்பமுடியாத கற்பனைகளையும் கொண்டிருந்தபோதும் இதுவே சிங்கள இனத்தின் வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.
இந்நூல் முழுவதிலும் தமிழர்களைப் படையெடுப்பாளர்களாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சிங்களவர்கள் தாய் நாட்டைக் காக்கப் போராடியவர்கள் எனவும் சித்தரிக்கப்படுகிறது.
மகாவம்சத்தின் பிரதான பகுதியாகவரும் எல்லாளன் துட்டகைமுனு போர் பற்றிய வரலாறு அப்பட்டமாக இனக்குரோதத்தையும் இன வெறுப்பையும் ஏற்படுத்தும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இரு அரசர்கள் நிலங்களைக் கைப்பற்ற ஒருவருடன் ஒருவர் நடத்திய போரை இந்நூல் இனங்களுக்கிடையேயான போராக வர்ணிக்கிறது.
ஆனால் எல்லாளனின் படைகளில் சிங்களத் தளபதிகளும் சிங்களவரும் காமினியின் படைகளில் தமிழ்த் தளபதிகளும் தமிழர்களும் போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியிருப்பினும் சிங்கள – தமிழ் விரோதத்தைக் கட்டி வளர்ப்பதிலும் மக்கள் மயப்படுத்துவதிலும் மகாவம்சம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.
அதன் தாக்கம் இலங்கையின் வரலாற்றுக்காலம் முழுவதுமே இன முரண்பாடுகளின் வரலாறுகளாகவும் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதென்ற அடிப்படையில் ஏனைய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இலங்கை இராசதானிகளின் வரலாற்றில் ஒரு மன்னன் இறக்கும்போது அவனுக்கு உரிய வாரிசு இல்லாவிடில் இந்தியாவிலிருந்து அரச குலத்தைச் சேர்ந்தவனை அழைத்துவந்து மன்னனாக முடிசூட்டும் வழமையும் இருந்தது. அதேவேளையில் அவனை அழைத்து வந்த நிலப்பிரபுக்களே அவனுக்கு எதிராகச் சதிகளையும் கொலை முயற்சிகளையும் மேற்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
கண்டி அரசை ஆட்சி செய்த நாயக்க வம்ச அரசர்களுக்கு அதேநிலை ஏற்பட்டதை அறியமுடியும். இலங்கையின் கடைசி மன்னனான கீர்த்தி ஸ்ரீவிக்கிரமராஜசிங்களை வீழ்த்த சிங்களப் பிரபுக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து மேற்கொண்ட சதி காரணமாக இலங்கை தனது சுதந்திரத்தை அந்நியரிடம் பறி கொடுத்தது என்பதை மறந்துவிட முடியாது.
இவ்வாறு மகாவம்ச சிந்தனையின் மேலாதிக்கம் காரணமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவு முரண்பாடுகளும் மோதல்களும் அவநம்பிக்கை மிக்கதாகவுமே நிலவி வந்தது. தேவை ஏற்படும்போது தமிழர்களின் உதவியைப் பெறுவதும், பின்பு மோதுவதும் வரலாறு முழுவதுமே காணப்படக்கூடிய விடயங்களாயிருந்தன.
சிங்கள மேலாண்மை என்ற அடிப்படையிலான மகாவம்ச சிந்தனை அநகாரிக தர்மபால காலத்தில் நிறுவனமயப்பட்டது என்பது ஒரு முக்கிய பாய்ச்சலாகும். ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி, நகர்ப்புற வர்த்தகம் என்பவற்றில் முஸ்லிம்களும் இந்திய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகித்தனர். அவற்றைக் கைப்பற்ற கரையோரச் சிங்களவர் மகாவம்ச சிங்கள மேலாண்மைச் சிந்தனையைப் பயன்படுத்தினர். அதன் விளைவே 1815 கொழும்பு சிங்கள முஸ்லிம் கலவரம்.
அநகாரிக தர்மபால அடிச்சுவட்டில் உருவான டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான இலங்கை தேசிய காங்கிரஸ் இலங்கையில் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் மிக லாவகமாகவும் புத்திசாதுரியத்துடனும் அரசியல் ரீதியாகச் செயற்பட்டனர்.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்குச் சிறிது காலம் முன்பிருந்து நீண்டகாலம் இலங்கையில் அரசியல் என்பது தமிழ், சிங்கள மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திலேயே இருந்தது. சிங்களத் தலைமைகள் ஒட்டுமொத்த இலங்கையையும் தங்களின் ஆதிக்கத்தில் கொண்டுவரும் வண்ணம் காய்களை நகர்த்திய வேளையில் தமிழ்த் தலைமைகள் அவ்வாதிக்கத்தில் தாங்களும் வலுவான பங்காளிகளாக விளங்க விரும்பினர்.
இப்படியான தமிழ்த் தலைமைகளின் நோக்கங்களை எவ்வாறு கெட்டித்தனமாக சிங்களத் தலைவர்கள் முறியடித்தார்கள் என்பதை நாம் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம்.
சிங்களவர் மத்தியில் இரு அரசியல் போக்குகள் காணப்பட்டன. ஒன்று ஏகாதிபத்திய சார்பு அரசியல் அடுத்தது தேசிய அரசியல். தமிழர் மத்தியில் தமிழரசுக் கட்சியின் ஆரம்பம் ஒரு தேசிய எழுச்சியாகத் தொடங்கிய போதும், காலப்போக்கில் அதுவும் ஏகாதிபத்திய சார்பு அரசியலுடன் சமரசம் செய்து கொண்டது.
அதன் காரணமாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட அரசியல் ஐ.தே.கட்சியுடன் ஒரு சமரச அரசியலாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்ட அரசியலாகவும் நகர்ந்தது.
இவ்வாறான தமிழ்த் தலைமைகளின் போலித்தனமான அரசியல் காரணமாக மக்கள் அவர்களில் நம்பிக்கையிழக்கும் நிலைமையும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவையும் ஏற்படும் நிலையை உருவாக்கியது.
கடந்த 99 அத்தியாயங்களிலும் எங்கிருந்து இன மோதல் தொடங்கி எப்படியெல்லாம் விரிவடைந்து இந்தியாவுடன் மோதும் நிலைமை வரை விரிவடைந்ததைப் பார்த்தோம். இக்காலப்பகுதி போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளுமாகவே நகர்ந்தபோதிலும் அதில் அரசியலே மேலோங்கி நின்றது.
ஆனால் இனிவரும் காலம் போரும், பேச்சுகளும் உள்ளடங்கியதாக இருந்தபோதும் இப்பேச்சுகள் போரின் ஒரு பகுதியாகவே இடம்பெற்றதுடன், பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியையோ அல்லது முடிவையோ தீர்மானிப்பது ஆயுத பலமாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
100 அத்தியாயங்களும் கடந்த காலம் எவ்வாறு ஒரு உள்நாட்டுப் போருக்கு அத்திவாரமாக அமைந்து என்பதை போதியளவு சான்றுகளுடன் முன் வைத்துள்ளோம். 'எங்கிருந்து தொடங்கியது இன மோதல்' என்ற தேடலுடன் கடந்த பல வாரங்களில் மேற்கொண்ட பயணத்தை நிறைவு செய்து விடைபெறுகிறோம்.
முற்றும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்