Saturday 12th of October 2024 02:21:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 3

இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 3


கடலில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டம் - நா.யோகேந்திரநாதன்

1953ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7ம் திகதி அப்போதைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் முன்வைக்கப்பட்டு 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டம் உலக வங்கியின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளின் சுமை அனைத்தையும் மக்கள் தலையில் சுமத்தும் வகையிலேயே அமைந்திருந்தது. மானியங்கள் ரத்துச் செய்யப்பட்டு வரிகள் உயர்த்தப்பட்டமையால் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதுடன், போக்குவரத்து, தபால் கட்டணங்களும் உயர்ந்தன.

ஏற்கனவே இதை எதிர்த்து ஜுலை 20ம் திகதி தலைநகரில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டபோதும் அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது.

எனவேதான் ஏற்கனவே தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி இதற்கமைய ஓகஸ்ட் 12ம் நாள் நாடு பரந்த பேரெழுச்சியுடன் ஹர்த்தால் ஆரம்பிக்கப்பட்டது. நாடு பரந்த அளவில் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என எங்கும் ஒரு கொந்தளிப்பு நிலை உருவாகியது. பொதுப் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வீதித் தடைகள் போடப்பட்ட நிலையில் பொலிஸார் கூட வெகு சிரமப்பபட்டே தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிலை நிலவியது.

கவர்னர் மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை, நாடாளுமன்றம் என்பன போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அமைச்சரவைக் கூட்டம் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த பிரித்தானிய போர்க் கப்பலில் றோயல் நேவியின் பாதுகாப்பில் நடத்தப்பட்டது.

அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் பிரறப்பிக்கப்படுவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இராணுவத்தைக் களமிறக்குவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

வீதிகளில் காணப்படுவோர் சுடப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர். அப்போதும் கூட கூட்டம் கலைய மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், மக்கள் அஞ்சி விடவில்லை. மாறாகப் போராட்டங்கள் கொழும்பிலும் வேறுபல நகரங்களிலும் தீவிரமாகப் பரவின. தமது தோழர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான நிலையில் ஆங்காங்கே ஆயுதப் படையினருக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன.

சகல அடக்கு முறைகளையும் மீறி ஹர்த்தால் போராட்டம் அடுத்த நாளும் முழு வீச்சுடன் தொடர்ந்தது. நாடு பரந்த அளவில் போராட்டங்கள் வெடித்தாலும் மேல் மாகாணம், தென்மாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கொழும்பில் அமைச்சர்களோ, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ வீதிக்கு வரப் பயப்படும் நிலை ஏற்பட்டிருந்தது. இப்படியான ஒரு கொந்தளிப்பான நிலையில்தான் பாராளுமன்றத்திலோ அலரி மாளிகையிலோ, கவர்னர் மாளிகையிலோ அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தமுடியாத நிலையில் அது துறைமுகத்தில் தரித்து நின்ற பிரித்தானிய போர்க் கப்பலில் நடத்தப்பட்டது.

அந்த அமைச்சரவைக் கூட்டத்தின்படி அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிகளில் குவிக்கப்பட்டனர். மேலும், கண்டவுடன் சுடும் “மார்ஷல் லோ” அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அவசர காலச்சட்டம் பிறப்பிக்கப்பட முன்பே 17ம் திகதி ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது குண்டாந்தடி, கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் பல மாணவர்களும் சில பொலிஸாரும் காயமடைகின்றனர். இச் செய்தி எங்கும்பரவ பல பகுதிகளிலுமுள்ள மாணவர்கள் போராட்டங்களில் குதிக்கின்றனர்.

திட்டமிட்டபடி 12ம் நாள் அதிகாலையிலேயே தொழிலாளர்கள், மாணவர்கள், அரச பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் இறங்குகின்றனர். அன்று மதியம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. கொச்சிக்கடையில் பொலிஸாருக்கும், தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இரு தொழிலாளர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். ஊரடங்குச் சட்டம், அவசர காலச் சட்டம் என்பவற்றை மீறி மேல் மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. இவற்றில். 12 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஆனால், உயிர்ப் பலிகள் மூலம் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியவில்லை. மாறாக அது மேலும் தீவிரமடைகிறது. மலையகத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். வடபகுதியிலும் தமிழரசுக் கட்சியின் தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறுகிறது. தெற்கில் பல இடங்களிலும் தண்டவாளங்கள் கழற்றப்பட்டு, பாலங்கள் தகர்க்கப்பட்டு, வீதிகளுக்குக் குறுக்கே மரங்கள் வீழ்த்தப்பட்டுப் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஓகஸ்ட் 15ம் திகதி டட்லி சேனநாயக்க தனது பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அப்போது உணவு மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சேர்.ஒலிவர் குணதிலக்கவிடம் பதவியை ஒப்படைக்கிறார். பதவியேற்றதுமே ஒலிவர், ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் கொண்டு வரப்பட்ட வரவு - செலவுத் திட்டம் இரத்துச் செய்யப்படுமென அறிவிக்கிறார்.

எனினும் 13ம் திகதியும் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் புரட்சிகர சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த பிலிப் குணவர்த்தன, லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பீட்டர் கெனமன் ஆகியோர் 24 மணி நேர ஹர்த்தால் வெற்றிபெற்று விட்டதாகவும் பிரதமர் பதவி விலகியதும் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியெனவும் ஒரு கூட்டறிக்கை விடுத்ததுடன் தொழிலாளர்களை வழமை பொல் வேலைக்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்டனர்.

மக்கள் தொடர்ந்து போராடத் தயாராயிருந்தபோதிலும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத் தலைவர் நா.சண்முகதாசனைவிட ஏனைய தலைவர்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தயாராயிருக்கவில்லை. அதுமட்டுமின்றி புரட்சி பற்றி அவர்கள் மேடைமேடையாக முழங்கினாலும் ஒரு ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்கக்கூடிய நிறுவன பலமோ புரட்சிகர அமைப்புகளோ அவர்களிடம் இருக்கவில்லை.

ஆனால் அவர்களின் மேடை முழக்கங்களை நம்பிய தொழிலாளர்களும் மக்களும் பொலிஸாருடனும் இராணுவத்தினருடனும் மோதலில் ஈடுபட்டனர்.

அதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் 500 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் வேலையிழக்கும் நிலையும் ஏற்பட்டது.

ஒலிவர் குணதிலக்க ஆட்சியைப் பொறுப்பேற்றதும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதுடன் அரிசி விலையை மீண்டும் 25 சதமாகக் குறைத்தார். போக்குவரத்துக் கட்டணங்கள், தபால் கட்டணங்கள் என்பனவும் குறைக்கப்பட்டதுடன் ஏனைய உயர்த்தப்பட்ட பாவனைப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டன.

சில நாட்களில் கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு தனது பதவியை விட்டு லண்டன் திரும்பிய நிலையில் 2 ஆவது எலிசபெத் மகாராணியால் சேர்.ஒலிவர் குணதிலக இலங்கையின் மகா தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து இலங்கையின் பிரதமராக முன்னாள் இராணுவ அதிகாரியும் டி.எஸ்.சேனநாயக்கவின் மருமகனுமான சேர்.ஜோன்.கொத்தலாவல பிரதமராகப் பதவியேற்றார்.

அவர் பிரதமரானதும் சீனாவுடன் அரிசி, இரப்பர் ஒப்பந்தத்தை மேற்கொண்டதுடன் அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தற்காலிகத் தீர்வை ஏற்படுத்தினார்.

1952 பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போது நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் முன்னெடுக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகை 300 மில்லியனாக அமைந்திருந்தது.

இதை நிவர்த்தி செய்ய இரண்டே இரண்டு மார்க்கங்கள் இருந்தன. ஒன்று - உலக வங்கியிடம் கடன் பெறுவது - மற்றது - இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, இரப்பர், தெங்கு என்பனவற்றுக்குப் புதிய சந்தைகளைத் தேடுவது.

அப்போது தம்புதெனிய நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த ஆர்.ஜி.சேனநாயக்க சீனாவுடனான ரப்பர் - அரிசி ஒப்பந்தம் பற்றி ஆலோசனையை முன் வைத்தார்.

ஆனால் அமெரிக்க தாசரான ஜே.ஆர். அதை நிராகரித்து உலக வங்கியிடம் கடன் கோரினார். எனவே உலக வங்கியின் நிபந்தனைகளுக்கமைய அரச செலவினங்களைக் குறைப்பது என்ற ரீதியில் அரசு வழங்கி வந்த மானியங்கள் வெட்டப்பட்டன. அவ்வகையிலேயே 25 சதம் விற்ற அரிசியின் விலை 70 சதமாக உயர்த்தப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு, காலை பால் என்பனவும் நிறுத்தப்பட்டன. சகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட மானியங்கள் குறைக்கப்பட்டு “ஆஸ்பத்திரி லெத்தர்” மூலம் அத்தேவை ஈடு செய்யப்பட்டது. ஏனைய பாவனைப் பொருட்கள், போக்குவரத்து, தபால் கட்டணங்கள் என்பவையும் விலையுயர்த்தப்படவே தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த ஹர்த்தால் போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியாகக் கிளர்ந்தெழுந்தது.

அந்த நிலையிலேயே பிரதமர் தன் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய நிலையும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் நிதியமைச்சர் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட்டது.

எனவே அடுத்துப் பிரதமராகப் பதவியேற்ற சேர்.ஜோன் கொத்தலாவல உலக வங்கியின் நிபந்தனைகளை ஏற்றக்கொண்டு நாட்டை நடத்தமுடியாது என்பதைப் புரிந்து கொண்டார். எனவே இரண்டாவது வழியான இலங்கை உற்பத்திகளுக்குப் புதி சந்தைகளைத் தேடும் வகையில் சீனாவுடன் “அரிசி - இறப்பர்” ஒப்பந்தத்தை மேற்கொண்டார். மேலும் இந்தியா, சீனா, நேபாளம், பர்மா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ”பாண்டுங்” அமைப்பிலும் இலங்கை இணைந்து கொண்டது. அதன் காரணமாக அந்த நாடுகளுடன் வர்த்தக வளர்ச்சியும் ஏற்பட்டது.

இவ்வாறு இலங்கை மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி ஒருவாறு சமாளிக்கப்பட்டது. சுமைகளுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களும், அவற்றின் விளைவுகளுமே கொத்தலாவல போன்ற அடிப்படை முதலாளித்துவ இராணுவவாதிகளைக் கூட நாட்டு நலனின் அடிப்படையில் சிந்திக்க வைத்தன.

ஆனால் 1953ல் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்கள் மறக்கவில்லை. 1956ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்து எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது.

எப்படியிருந்தபோதிலும் இலங்கையில் ஏற்பட்ட முதலாவது பொருளாதார நெருக்கடி, இலங்கை மீது வலிந்து திணிக்கப்பட்டதாகும். ஆனால் அதற்கெதிரான மக்கள் பேரெழுச்சி இலங்கையை அழிவுப் பாதையில் செல்ல விடாமல் தடுத்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதுமட்டுமின்றி 1956ல் ஒரு தேசிய அரசாங்கம் உருவாவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE