Saturday 12th of October 2024 01:08:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 6

இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 6


மூன்றாவது பொருளாதார நெருக்கடியில் வேரறுத்து தடுமாறும் அதிகார பீடங்கள் - நா.யோகேந்திரநாதன்!

இன்று நாட்டின் நகரங்கள் கிராமங்கள் என்ற பேதமின்றி சகல பகுதிகளிலும் ”கோத்தா! கோ ஹோம்”, “மைனா கோ ஹோம்” என்ற கோஷங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை என்பனவற்றின் முன்னாலான மறியல் போராட்டங்கள், வீதி மறியல் போராட்டங்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசையில் குழப்பங்கள், மாணவர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் என ஆட்சி பீடத்திற்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தை எட்டி முழு நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களைத் திசை திருப்ப ஆரம்பித்தில் தூக்கப்பட்ட பயங்கரவாத அடிப்படைவாத மாயைகள் பயனற்றுப் போக மக்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் நீண்டன. உயிர்கள் பலி கொள்ளப்பட்ட நிலையில் கூடப் போராட்டம் மேலும் உத்வேகம் பெற்றன.

பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்களின் ராஜினாமா புதிய அமைச்சரவை அமைப்பு எனப் பல்வேறு பம்மாத்துகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் எதுவுமே பலனளிக்கவில்லை. இறுதியில் சகல கட்சிகளையும் இணைத்து ஒரு இணக்கப்பாட்டு அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் ஏற்கனவே பொதுசன முன்னணி அரசில் அங்கம் வகித்துப் பின் வெளியேறியவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியோ, தேசிய மக்கள் சக்தியோ, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் முயற்சிகள் தொடருமெனக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறினால் மட்டுமே கூட்டரசாங்கத்தில் இணையமுடியுமென சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

ஆனால், மகாநாயக்க தேரர்களோ தங்களைச் சந்திக்க எந்தவொரு அரசியல்வாதிகளையும் அனுமதிக்கப் போவதில்லையெனத் தெரிவித்துவிட்டனர்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட ராஜபக்ஷ் குடும்பத்தினர் ஆட்சிப் பீடத்தை விட்டு வெளியேற வேண்டுமெனவும், இதுவரை இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக நியாயபூர்வமான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டுமெனவும் மோசடி செய்த சொத்துக்கள் மீளப் பெறவேண்டுமெனவும் கோரியே போராட்டங்கள் நாடு பரந்தளவில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சரவை ராஜினாமா மூலமோ, புதிய அமைச்சரவை மூலமோ பிரதமரின் ராஜினாமா மூலமோ இணக்கப்பாட்டு அரசொன்றை அமைப்பதன் மூலமோ போராட்டம் முடிவுக்கு வருமென எதிர்பார்க்கமுடியுமா? புதிய அமைச்சரவையென்றாலென்ன, புதிய இணக்கப்பாடு அரசு என்றாலென்ன ஜனாதிபதிக்கு அப்பால் செயற்படக்கூடியவையாயிருக்குமா? ராஜபக்ஷ் குடும்பத்தின் ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பன தொடர்பாகப் பக்கச் சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் நிர்வாகத்துறை, நீதித்துறை, நிதித்துறை என்பனவற்றின் நேர்மையான ஒத்துழைப்பை ஜனாதிபதி பெற்று நியாயங்கள் நிலைப்படுத்தப்படுமா? கோத்தபாயவினால் இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசு இயந்திரம் மேற்படி நடவடிக்கைகளை நேர்மையான முறையில் முன்கொண்டு செல்ல அனுமதிக்குமா?

எனவே அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு பல உயிர்கள் பலிகொள்ளப்பட்டு மேற்கொள்ளக்கூடிய ஒடுக்குமுறை நடவடிக்கை மூலம் மட்டுமே போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவரப்படமுடியும். அப்படியான நிலைமை அரசால் ஏற்படுத்தப்படும்போது தற்போது இடம்பெறும் மக்கள் போராட்டங்களின் வடிவம் மாற்றமடையலாம். அதனால் நாடு பெரும் இரத்தக் களரியை எதிர்கொள்ளவேண்டிய துரதிஷ்டவசமான நிலைமை தோன்றலாம்.

எனவே இன்றைய பொருளாதார நெருக்கடியை புத்திபூர்வமாகவும் நேர்மையாகவும் கைகயாளாவிட்டால் அப்படியொரு ஆபத்துக்கு இட்டுச் செல்லவும்கூடும். இந்த நிலையில் 1953ல் இலங்கையைக் குலுக்கிய முதலாவது பொருளாதார நெருக்கடி ஏன் ஏற்பட்டது? அது எப்படி வெற்றி கொள்ளப்பட்டது? என்பதைக் கவனத்தில் கொள்வது இன்றைய நிலைமைகளைப் புரிந்து கொள்ள உதவியாயமையக் கூடும்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதுமே ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தேயிலை, இரப்பபர் போன்ற பொருட்களைப் பிரதான ஏற்றுமதி வருமானமாகக் கொண்ட இலங்கையும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. எனவே இலங்கை உலக வங்கியிடம் கடனுக்கு வங்கியின் நிபந்தனைகளுக்கமைய அரச மானியங்கள் நிறுத்தப்பட்டன. அதனால் அரிசி உட்படப் பாவனைப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தப்பட்டது. போக்குவரத்து, தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன.

அதை எதிர்த்து நாடு பரந்தளவில் போராட்டங்கள் வெடித்தன. அதன் உச்சமாக ஆகஸ்ட் 12ம் திகதி 1953 ஆண்டு கொழும்பில் ஹர்த்தால் போராட்டம் வெடித்தது. அவை ஆட்சியையே அதிர வைத்தன. அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்றத்தில் நடத்த முடியாமல் கொழும்புத் துறைமுகத்திலுள்ள கப்பலில் நடத்தப்பட்டது. இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது. பிரதமர் பதவி விலகுகிறார். நிதியமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவரால் கொண்டுவரப்பட்ட வரவு - செலவுத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டு விலையேற்றப்பட்ட பொருட்கள் பழைய விலைக்குக் காண்டு வரப்படுகின்றது.

இவ்வாறு இலங்கையின் முதலாவது பொருளாதார நெருக்கடி மக்களின் உறுதியான போராட்டம் காரணமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், அடுத்த தேர்தலில் அரசாங்கத்தையே படுதோல்வியடைய வைக்கிறது. நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியை மக்கள் தலை மீது சுமத்தும் உலக வங்கியின் ஆலோசனைகள் வெற்றி பெறுவது சிரமம் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

இலங்கையின் முதலாவது பொருளாதார நெருக்கடி உலக வங்கியின் ஆலோசனையின்படி நடந்தமையால் இடம்பெற்றது. இரண்டாவது நெருக்கடி (1973 - 1977) உலக வங்கியின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஏற்படுத்தப்பட்டது.

1971ல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் உலக வங்கியிடம் நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் பெறுகிறது. உலக வங்கியின் நிபந்தனைகளில் ஒன்றான அரச செலவினங்களைக் குறைத்தல் என்ற அடிப்படையில் அரச மானியங்களை நிறுத்தும் ஆலோசனை நிறைவேற்றப்படாத நிலையில் உலக வங்கி கடன் வழங்குவதை 1973ல் நிறுத்தி விடுகிறது. அதாவது அரசாங்கத்தால் நெல், தேயிலை என்பவற்றுக்கு பசளை 40 வீத மானிய விலையில் வழங்கப்பட்டது.

எதிர்பாராத இத்தடையால் நாடு பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் அரசாங்கம் உலக வங்கியிடம் சரணடைந்து விடவில்லை.

ஆடம்பர வாகனங்கள் உட்படச் சகல ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டன. பசளை, கிருமி நாசினி என்பனவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டு உணவு உற்பத்தி ஊக்கவிக்கப்பட்டதுடன், அவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டு அவற்றுக்குச் சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. வெளிநாட்டு ஆடை இறக்குமதி நிறுத்தப்பட்டதால் இயந்திர நெசவாலைகளும் கைத்தறி நெசவு நிலையங்களும் உருவாகின. இயந்திர உதிரிப் பாக இறக்குமதி நிறுத்தப்பட்டதால், அவற்றை இங்கேயே உருவாக்கும் வகையில் கராஜ்கள், சிறுகைத்தொழில் நிலையங்களாக மாறின. அரசின் உறுதியான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கொள்கை மக்களின் ஒத்துழைப்பு, அணிசேரா நாடுகளின் ஆதரவு என்பன காரணமாக நாடு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி முன்சென்றது. நாட்டில் எற்பட்ட பொருளாதார நெருக்கடி மெல்ல மெல்ல மறைந்துபோக ஒரு சுபீட்சத்தை நோக்கி நாடு நடை போட்டது.

உலக வங்கியின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படாமலே இலங்கையின் இரண்டாவது பொருளாதார நெருக்கடி வெற்றி கொள்ளப்பட்டது.

தற்சமயம் இலங்கையின் மூன்றாவது பொருளாதார நெருக்கடி 2021ல் மெல்ல மெல்ல முனைப்புப் பெற ஆரம்பித்து தற்சமயம் உச்சம் பெற்று நிற்கிறது.

இலங்கையின் முதலாவது இரண்டாவது பொருளாதார நெருக்கடிகளின் போதும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்தினர். மக்களின் எதிர்ப்பலைகளைச் சமாளிக்க முடியாமல் ஆட்சியினர் திணறினர். போராட்டம் நடத்திய மக்கள் ஒரு சிலரின் உயிர்களும் பலி கொள்ளப்பட்டன. எனினும் இரு சந்தர்ப்பங்களிலும் அன்றைய ஆட்சியாளர்கள் வெவ்வேறு விதமாக அணுகி வெற்றி கண்டனர். எனினும் இரு தரப்பினரும் மக்களின் கோரிக்கை களிலிருந்து தூரம் போகாமலே நெருக்கடிகளை வெற்றி கண்டனர்.

அப்படியானால் அப்படியான வழிமுறைகள் மூலம் இன்றைய நெருக்கடியை வெற்றி கெள்ள முடியாதா என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கு விடை தேடுவதானால் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட காலப்பகுதியிலிருந்து இன்றுவரை ஒரு மீள் பயணம் செய்யவேண்டியுள்ளது.

போரை வெற்றி கொண்ட அரசியல் தலைவர் மஹிந்த ராஜக்ஷ்வும் படைத்துறைத் தலைவன் கோத்தபாய ராஜபக்ஷ்வுமாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தினர். ஒப்பற்ற நாயகர்களாக அவர்கள் ஏற்படுத்திய மாயை அவர்களை தட்டிக்கேட்க எவருமில்லையென்ற ஒரு நிலையை உருவாக்கியது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை வாழ்வாதார மேம்பாடு போன்றவற்றை உயர்த்தும் வகையிலான பொருளாதாரத் திட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்டன.

அபிவிருத்தி என்ற பெயரில் பெருந்தொகையில் கடன்பட்டு புதிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. நகரங்கள் பிரமாண்டமான கட்டிடங்களால் அலங்கரிக்கப்பட்டன. இவையெல்லாம் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எனக் கூறப்பட்டன. சீன நிதியுதவியில் கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கப்பட்டது. அது அந்நிய முதலீகளை உள்ளீர்ப்பதற்காக எனக் கூறப்பட்டது.

ஒட்டு மொத்தத்தில் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு ஒரு தங்குநிலைப் பொருளாதரத்தினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், நிர்மாணிக்கப்பட்ட துறைமுகமோ, விமான நிலையங்களோ எதிர்பார்த்த பலன்களில் ஒரு சிறு பகுதியைக் கூட வழங்கவில்லை. சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி என்பனவும் வெவ்வேறு சந்தர்பப்ங்களில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகளால் நலிவடைந்தன. ஆனால் அரச தரப்பினர் தரகுப் பணங்களாலும் பல விதமான மோசடிகளாலும் தமது சொந்த நலன்களை மேம்படுத்திக் கொண்டனர். அதேவேளையில் கடன் தவணைப் பணங்களும் வட்டியும் கட்டியேயாக வேண்டிய நிலை. அதாவது 2021ம் ஆண்டில் வருவாயைவிட செலவினம் மூன்று மடங்காக அதிகரித்திருந்தது.

அதேவேளையில் அரசின் புத்திபூர்வமற்ற நடவடிக்கைகளால் பாரம்பரிய உற்பத்திப் பொருட்களான தேயிலை, நெல், சோளம் போன்ற உள்ளூர் விவசாய உற்பத்திகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

எனவே எரிபொருள், சமையல் எரிவாயு மருந்துகள் என்பன மட்டுமின்றி உணவுப் பொருட்களும் இறக்குமதி செய்யும் நிலை நிலவியது.

வருவாயைவிட 3 மடங்கு செலவினம் உள்ள நிலையில் இறக்குமதிக்கு அந்நியச் செலவாணிக்கு எங்கு போவது?

எனவே அத்தியாவசியப் பொருட்கள் உட்படப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலைகளும் பல மடங்கால் உயர்த்தப்பட்டன. அதாவது முழுச்சுமையும் பொது மக்கள் தலையிலேயே சுமத்தப்பட்டன.

எனவே, மக்கள் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். ”கோத்தா கோ ஹோம்”, “மைனா கோ ஹோம்” என்ற கோஷங்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. ஆட்சியாளர்களோ, அதிகாரத்தை விட்டுப் போகத் தயாராயில்லை. தொடர்ந்து அதிகாரத்தைத் தக்க வைத்து பல்வேறு தந்திரங்களையும் கையாள்கிறார்கள்.

எனவே நாடு ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைந்துள்ளனர். அவர்களோ அரச செலவினங்களைக் குறைத்து வரிகளை அதிகரிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர்.

தற்சமயம் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு என்பனவற்றை எதிர்த்துப் போராடும் மக்களின் நிலை மேலும் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. மக்கள் போராட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

அதாவது இலங்கையின் மூன்றாவது பொருளாதார நெருக்கடி ஆட்சியாளர்களின் மூலவேரையே அறுத்து விடுமளவுக்கு கூர்மையடைந்து வருகிறது.

முன்னைய இரு நெருக்கடிகளும் எப்படி வெற்றி கொள்ளப்பட்டன என்பதிலிருந்து கற்றுக்கொண்டு துணிச்சலான நடவடிக்கைகள எடுக்கத் தவறினால் விமோசனம் என்பது கானல் நீராகவே போய்விடும் என்பது இதுவரை புரிந்து கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே இன்றைய துரதிஷ்டவசமான நிலை சுலபமாக வெற்றி கொள்ளப்படும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE