Saturday 12th of October 2024 12:28:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 7

இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 7


வலிந்து உருவாக்கப்பட்ட மூன்றாவது நெருக்கடி நிலைமை - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையின் முதலாவது பொருளாதார நெருக்கடி 1953ல் சர்வதேச அளவில் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, இறப்பர் ஆகியவற்றின் விலைகள் வீழ்த்தப்பட்டு, அரிசி விலை உயர்த்தப்பட்டதாலும் அதனால் ஏற்பட்ட சுமைகளை உலக வங்கியின் ஆலோசனைகளுக்கமைய மக்கள் தலையில் சுமத்தியதாலும் ஏற்பட்டது.

1973 - 1977 காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இலங்கை அரசாங்கம் உலக வங்கியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் வங்கி திடீரென நிதியுதவிகளை நிறுத்தியதால் உருவானது.

ஆனால் தற்சமயம் முகம் கொடுக்கப்படும் மூன்றாவது பொருளாதார நெருக்கடி இலங்கையின் ஆட்சியாளர்களாலேயே வலிந்து உருவாக்கப்பட்டதெனக் கருதப்படுகிறது. அதற்கான சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்பு நாட்டு மக்களை ஐக்கியப்படுத்தி நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்குப் பதிலாகத் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் பொருளாதார அடிப்படையிலான இன ஒதுக்கல் பாணி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இரண்டாவது அபிவிருத்தி என்ற பெயரில் உலகப் பொருளாதார வலைப்பின்னலில் தங்கி நிற்கும் வகையிலான பிரமாண்டமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில் குறைந்த பட்ச தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையக் கூடிய பாரம்பரிய உற்பத்திகளை மேம்படுத்தும் பொருளாதார வழிவகைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. அதனால் உணவுத் தேவைகளுக்குக்கூட இறக்குமதிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மூன்றாவது பெருந்தொகையான முதலீட்டில் பிரமாண்டமான திட்டங்கள் வெளிநாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்டபோது அவைக்கென பெறப்படும் கடன்களை அவற்றின் வருவாயிலிருந்து கட்டக்கூடிய வகையிலான முன்னேற்பாடான திட்டங்களை வகுக்காமை. ஆனால் கடன் தவணைகளையும் வட்டியையும் கட்ட மேலும் மேலும் கடன் பெறும் நிலை உருவாகியது. அதனால் கடன் தவணைப் பணமும் வட்டியும் வருடாவருடம் அதிகரித்து வந்தமையால் தேசிய வருமானத்தின் பெரும் பகுதி அதற்கென ஒதுக்கவேண்டிய தேவை எழுந்தது. பிரமாண்டமான திட்டங்களோ எதிர்பார்த்த பலனைத் தராத வெள்ளை யானைகளாகி விட்டன.

ஆனால் அரச தரப்பினரோ தமது நலன்களை முதன்மைப்படுத்தியும் நகர்வுகளை புத்திபூர்வமாகக் கையாளத் தவறியும் மேற்கொண்ட திட்டங்களால் ஏற்பட்ட தோல்வியை மறைத்து வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர். அதாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம், கொரோனா தொற்று, ரஷ்யா - உக்ரேன் யுத்தம் என்பவற்றையே காரணமென அவர்கள் கூறி வருகின்றனர்.

இவற்றால் பொருளாதாரப் பாதி்ப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இவைதான் முழுமையான காரணங்களெனச் சொல்லிவிடமுடியாது.

ஆனால் அப்படியான பிரதானமான காரணங்கள் போரின் பின்னான இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள், அபிவிருத்தி என்ற பேரில் மேற்கொண்ட பிரமாண்டமான திட்டங்கள், சக்திக்கு மீறிய கடன்களைப் பெற்றமை என்பனவாகும்.

1996 - 2002 காலப்பகுதியில் இடம்பெற்ற போரில் பாதுகாப்புச் செலவினம் 345 மில்லியன் டொலராகவும், 2006 - 2009 காலப்பகுதியில் 1499 மில்லியன் டொலராகவும் மொத்தம் 2192 மில். டொலராகவும் அமைந்திருந்தது. ஆனால் 2002- 2006 சமாதானப் பேச்சுகள் இடம்பெற்றபோது 1056 மில்லியன் டொலரும் போர் முடிந்த பின்பு 1716 மில்லியன் டொலராகவும் அதாவது 3275 மில் டொலராகவும் அமைந்திருந்தது. அதாவது போர்க் காலத்தைவிட போர் இல்லாத காலங்களில் பாதுகாப்புக்கென கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்தச் செலவினம் 2½ இலட்சம் டொலராக இருக்கும்போது அதில் பாதுகாப்புக்கு 50 லட்சம் கோடி அதாவது 1/5 பங்கு ஒதுக்கப்பட்டது.

அதாவது கல்வி, சுகாதாரம், சமூக சேவை என்பவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட இன ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்கான பாதுகாப்புச் செலவினத்துக்குப் பல மடங்கு ஒதுக்கப்பட்டது.

அதேவேளையில் தேசிய உற்பத்தியில் கணிசமான பங்கை வகிக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் மக்களின் தொழில் வளம் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டது.

போர் காலத்தில் பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, எரிபொருள் தடை என்பவற்றின் மூலம் வடக்குக் கிழக்கு மக்களின் இயல்பான பொருளாதார உற்பத்தித்திறன் சீர்குலைக்கப்பட்டது. அதேவேளையில் போர் முடிந்த பின்பும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்களின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது.

இலங்கையின் கடலுணவுத் தேவையில் 40 வீதத்தை வடபகுதி மீன்பிடியே நிறைவு செய்தது. மேலும் சுண்டிக்குளம் இறால், முல்லைத்தீவு, நாவாந்துறை, மன்னார் ஆகியவற்றின் கடலட்டைத் தொழில் என்பன கணிசமான அந்நியச் செலாவணி வருமானத்தை வழங்கியது. ஆனால் போர் முடிந்த பின்பும் வடக்கின் பிரதான மீன்பிடி மையங்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதன் காரணமாக வடக்கின் கடல் தொடர்பான தேசிய உற்பத்தி்யில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டது.

வெங்காயம், மிளகாய், மரவள்ளி, மரக்கறி வகைகள் போன்ற உப உணவுப் பொருட்கள், முந்திரிகைப் பழம், புகையிலை என்பனவற்றின் உற்பத்தி மையமாக வலிகாமம் வடக்கே விளங்கியது. மீள் குடியேற்றம் அனுமதிக்கப்படாத நிலையிலும் பயன்தரும் விளை நிலங்களில் படைமுகாம்கள் அமைக்கப்பட்ட நிலையிலும் அத்தகைய தேசிய உற்பத்திகளும் நலிவடைய இறக்குமதி செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

அதுமட்டுமின்றி கைத்தொழில் உற்பத்தியில் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை, மாவிட்டபுரம் அலுமினிய தொழிற்சாலை, நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலை, தின்னைவேலி வல்லை, பண்டத்தரிப்பு, தெல்லிப்பளையில் இயந்திர நெசவாலைகள், ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயன ஆலை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை என்பன சிறந்து விளங்கின. போரின் பின்பும்கூட அவை சீர் செய்யப்பட்டு, உற்பத்திப் பெருக்கத்தில் ஈடுபட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

ஆனால் சீமெந்து, ஓடு, உப்பு, குளோரின், புடவை வகைகள் இறக்குமதி செய்வதற்குக் கணிசமான அந்நியச் செலாவணி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறே கிழக்கின் கடதாசித் தொழிற்சாலை இயங்காத நிலையில் அதுகூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோன்று கிழக்கிலுள்ள பெரியளவு மேய்ச்சல் தரவைகள் சிங்களவர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில் கிழக்கின் பாலுற்பத்தி கணிசமானளவு வீழ்ச்சியடைந்து விட்டது. இவ்வாறு வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கணிசமான விளை நிலங்கள் வனவளத் திணைக்களத்தால் உரிமை கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ் மக்களின் பாரம்பரிய வயல் நிலங்கள், மகாவலி அதிகார சபையால் கைப்பற்றப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு தமிழ் மக்கள் மீது இன ஒடுக்குமுறை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வடக்குக் கிழக்கில் நெல்லு, உப உணவுப் பொருட்கள், பழவகைகள், கடலுணவு என்பவற்றின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தின. இவை நாட்டின் ஒட்டுமொத்த விவசாய, மீன்பிடி, கைத்தொழில் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தின. இவ்வாறான தேவைகளை நிறைவேற்ற அந்நியச் செலாவணியே தேவைப்பட்டது.

அதேபோன்று காலங்காலமாக இலங்கையின் உள்ளூர் வர்த்தகங்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் என்பவற்றில் முஸ்லிம்கள் முன்னணியில் உள்ளனர். முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராகச் சிங்கள இனவெறியாளரால் நடத்தப்படும் கலவரங்களும் அழிவு நடவடிக்கைகளும் இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

இவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மூலம் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்க மேற்கொள்ளும் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வருவாயையே பாதித்தன.

எனவே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

ஒரு காலத்தில் இலங்கையின் தேசிய வருமானத்தி்ல் 60 வீதத்தைத் தேயிலை ஏற்றுமதியே பெற்றுத் தந்தது. ஆனால் தொடர்ந்து மலையக மக்கள் மீது இழைக்கப்பட்டு வந்த அநீதிகள் அந்த உற்பத்தியைச் சரிபாதிக்கும் குறைவாக வீழ்த்தி விட்டன என்பது முக்கிய விடயமாகும்.

1959ம் ஆண்டில் தேயிலை உற்பத்தியால் 59.6 வீத அந்நியச் செலாவணி கிடைத்தது. தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்ட பின்பு தோட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. 1992ல் கூட்டு ஒப்பந்தமுறை அமுலுக்கு வந்தபின்பு தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கமோ சம்பள நிர்ணய சபையோ தலையிடமுடியாத நிலையில் ஊதிய உயர்வு தோட்ட உட்கட்டமைப்பு முதலியன பொருட்படுத்தப்படாதவையாக மாறின. இந்த நிலைமையில் தேயிலையின் அந்நியச் செலாவணி வருமானம் 1976ல் 43.6 வீதமாகக் குறைந்தது.

போதிய வருமானமின்மை, இனக்கலவரங்கள் என்பன காரணமாக ஆண்கள் தோட்டங்களைவிட்டு வெளியேறி கொழும்பு போன்ற நகரங்களுக்கு கடைச் சிப்பந்திகள் கூலித் தொழில் போன்றவற்றை நோக்கிப் போக ஆரம்பித்தனர். பெண்கள் ஆடைத் தொழிற்சாலை, வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் வேலை போன்றவற்றுக்குப் போக ஆரம்பித்தனர். இனக்கலவரங்கள் காரணமாக ஏராளமான தோட்டத்தொழிலாளர்கள் வடக்கு கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்.

இதனால் தேயிலை உற்பத்தி்யில் பெரும் வீழ்ச்சி ஏற்பட தேயிலையால் வரும் அந்நியச் செலாவணி 1990ல் 24.9 வீதமாகக் குறைவடைந்தது. தற்சமயம் இது மேலும் மேலும் குறைவடைந்து இலங்கையின் நான்காவது அந்நியச் செலாவணி பெறும் உற்பத்தியாகத் தேயிலை குறைவடைந்துவிட்டது.

அதாவது போர் முடிந்த பின்பும்கூட அரசாங்கம் பாதுகாப்புச் செலவினத்துக்குக் கூடுதல் நிதியை ஒதுக்கிய அதேவேளையில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் வகையில் இனவாத அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஏற்கனவே சிறந்து விளங்கிய தேசிய உற்பத்திகள் அரசாங்கத்தின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் காரணமாகச் சீரழிக்கப்பட்டன.

போர் முடிவுக்கு வந்த பின்பும் பிரதான தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தினாலும் மகாவலி அபிவிருத்திச் சபை, வனவளத்திணைக்களம் என்பவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் மேய்ச்சல் தரவைகள் சிங்களவரால் கைப்பற்றப்பட்டதாலும் வடக்குக் கிழக்கு மக்களின் விவசாய மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறே முக்கிய மீன்பிடி மையங்கள் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வடக்கின் கடலுணவு உற்பத்தியும் நலிவடைந்தது.

எனவே இவற்றை இறக்குமதி செய்ய பெருமளவு அந்நியச் செலவாணி தேவைப்பட்டது.

மேலும் தேயிலை தோட்டங்கள் மீதான அக்கறையின்மையால் தேயிலையால் கிடைக்கும் வெளிநாட்டு வருமானமும் குறைவடைந்தது.

எல்லாவற்றிலும் மேலாக இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக இலங்கை அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதால் ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதுடன், ஆடை ஏற்றுமதியில் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி.சலுகை இடை நிறுத்தப்பட்டது.

எனவே இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறுவதற்கு இன அடிப்படையில் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மீது மேற்கொண்டுவரும் இன ஒடுக்குமுறை அடிப்படையிலான பொருளாதார ஒடுக்குமுறைகள் முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE