பிரமாண்டமான முதலீட்டுத் திட்டங்களும் அக்கறைப்படுத்தப்படாத அடிப்படை அபிவிருத்திகளும் - நா.யோகேந்திரநாதன்!
இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறைகளில் பிரதானமானவையாக தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, தேயிலை ஏற்றுமதி, கடல் உணவு ஏற்றுமதி, வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் அனுப்பும் பணம் என்பனவே விளங்கி வந்தன. எனினும் இலங்கை ஆட்சியாளர்களின் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக இந்தத் துறைகளிலான வருமானம் படிப்படியாக வீழ்ச்சி காண ஆரம்பித்தது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஒப்புக்கொண்ட விடயங்களை நிறைவேற்றத் தவறியமை காரணமாக ஜீ.பி.எஸ். பிளஸ் சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் நிறுத்தப்பட்டது. அதேபோன்று கடலுணவு இறக்குமதியும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி, கடலுணவு ஏற்றுமதி என்பவற்றால் கிடைக்கப்பெறும் அந்நியச் செலாவணியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. கொரோனா, ஏப்ரல் 21 தாக்குதல் என்பன காரணமாகச் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டது. தேயிலைத் தோட்டங்கள் தனி நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படாமையால் தேயிலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதுடன் தேயிலையின் தரமும் குறைய ஆரம்பித்தது. இலங்கையின் நாணயப் பெறுமதி குறைவடைந்த நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மத்திய வங்கி மூலம் அனுப்பாமல் உண்டியல் மூலமே பணத்தை நாட்டுக்கு அனுப்பினர். இப்பணம் போதைவஸ்து வியாபாரிகளாலேயே பயன்படுத்தப்பட்டது.
எனவே இலங்கையின் வருவாய் வீழ்ச்சியடைந்துவந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் காணப்பட்ட பற்றாக்குறைகள் வெளிநாட்டுக் கடன்கள் மூலமே ஈடு செய்யப்பட்டன. அவ்வகையில் 2000ம் ஆண்டில் 9.2 பில்லியன் டொலராக விளங்கிய இலங்கையின் கடன் நிலுவை 2015ல் 49.3 பில். டொலராக உயர்ந்தது. 2022ல் அது 56.3 பில்லியன் டொலராக உயர்ந்தது.இந்த நிலையில் நலிவடைந்த ஏற்றுமதித் துறைகளைச் சீர்செய்யும் நடவடிக்கைகள் என்பனவற்றில் போதிய கவனம் செலுத்தப்படாமல் பிரமாண்டமான திட்டங்களில் முதலீடு செய்வதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தளன் விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், பிரமாண்டமான அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன சீனாவின் கடனுதவியில் மேற்கொள்ளப்பட்டன. இவை அந்நிய முதலீட்டாளர்களைக் கவரும் வகையிலேயே அமைக்கப்படுவதாகவும் இவற்றால் உல்லாசப் பிரயாணிகள் வருவது அதிகரிக்குமெனவும் கூறப்பட்டது. ஆனால் எதுவுமே இடம் பெறவில்லை. அம்பாந்தோட்டையில் கைத்தொழில் பூங்கா அமைப்பதற்கு சீனாவுக்கு 15,000 ஏக்கர் வழங்கப்பட்டது. அதன் மூலம் துறைமுகம், விமான நிலையம் என்பன கணிசமான வருமானம் ஈட்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை தொழில் பூங்கா அமைக்கப்படவில்லை.
அதேவேளையில் தேசிய விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க உரப் பசளைக்கு வருடாவருடம் மானியமாக 26 கோடி டொலர் வழங்கப்பட்டு வந்தது. அரச செலவினங்களைக் குறைப்பது என்ற பேரில் இரசாயனப் பசளை தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக நெல் உற்பத்தியில் 25 வீதமும் தேயிலை உற்பத்தியில் 33 வீதமும் தெங்குப் பொருள் உற்பத்தியில் 30 வீதமும் வீழ்ச்சியடைந்தன. அதனால் அரிசி இறக்குமதி செய்யவேண்டி வந்ததுடன் தேயிலையால் வரும் வருமானமும் வீழ்ச்சியடைந்தது.
எனவே இலங்கையின் நாளாந்த செலவினம் 1200 கோடி ரூபாவாக உள்ளபோது வருமானமாக 400 கோடி ரூபா மட்டுமே பெறப்படுகிறது.
எனவே வருவாயும் செலவினமும் ஒன்றையொன்று நெருங்க முடியாத நிலையில் இலங்கை கடும் நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேவேளையில் 2015 - 2019 காலத்தில் ஆட்சியிலிருந்த மைத்திரி - ரணில் ஆட்சியில் சீனாவின் அம்பாந்தோட்டை தொடர்பான கடன் தவணை, வட்டி என்பன கட்டுப்படாத நிலையில் அதன் 99 வீத பங்குகளை சீனாவுக்கே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கொழும்பு துறைமுக நகரப் பணிகளை நிறுத்தி வைத்தனர். எனவே ஏற்கனவே சீனாவால் செய்யப்பட்ட செலவையும் நஷ்ட ஈட்டையும் கட்ட முடியாத நிலையில் துறைமுக நகரத்தின் கட்டுப்பாடு சீனாவுக்கே வழங்கப்பட்டது. இப்போ துறைமுக நகரம் இலங்கை நாடாளுமன்றத்தாலோ அதன் நிதி நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியாலோ கட்டுப்படுத்தும் உரிமை இல்லாமல் செய்யப்பட்டு விட்டது. மேலும் அதன் நிதி நடவடிக்கைகள் சீன நாணயமான “யுவான்” மூலமே மேற்கொள்ளப்படும். அதில் அங்கு இலங்கையர் யாருமே நேரடியாக முதலீடு செய்யமுடியாது. அப்படி உள்நாட்டவர்கள் முதலீடு செய்வதானால் வெளிநாட்டவர் மூலமாகவே மேற்கொள்ளமுடியும்.
இன்று இந்தப் பிரமாண்டமான இரு திட்டங்களால் இலங்கைக்கு எவ்வித பயனுமில்லை.
அதேபோன்று மத்தள விமான நிலையமும் இந்தியாவுக்குக் கையளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் “மிலேனியம் சவால்” உடன்படிக்கை மூலம் திருகோணமலையையும் அதைச்சுற்றியுள்ள பெரும் பகுதியையும் கொழும்பு - திருமலை போக்குவரத்தையும் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் கொண்டு வரமுயற்சிகள் ஆரம்பமாகின. ஆனால் அது சிங்கள மக்களின் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டது. எனினும் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் 40 வீத பங்குகள் அமெரிக்காவுக்கு ஒப்படைக்கவும் இலங்கையின் எரிவாயு விநியோகத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவும் அமைச்சரவையின் அனுமதியின்றியே ஒப்பந்தம் எழுதப்பட்டு விட்டது.
மேலும் திருமலை எண்ணெய்க் குதங்கள் 49 வீதம் இந்திய ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு விட்டது.
இவ்வாறு இலங்கையின் பிரமாண்டமான திட்டங்களால் அந்நிய நாட்டு முதலீடுகள் வந்து குவியவில்லை. சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான இந்து சமுத்திர மேலாதிக்கப் போட்டியின் பயன்படு கருவிகளாகவே அவை ஒவ்வொரு தரப்பாலும் நோக்கப்படுகின்றன.
இலங்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுகம், துறைமுக நகரம் என்பவற்றில் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதன் மூலம் சீனா தன் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவே செயற்பட்டு வருகிறது. அவ்வாறே மேற்கு நாடுகள் இந்தோ -பசுபிக் ஒப்பந்தம் மூலம் இப்பிராந்தியத்தில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த முனைகின்றன.
போர் காலத்திலும் சரி, போர் முடிந்த பின்பும் சரி இலங்கை மேற்குலகின் பக்கம் சாயப் போவதுபோல் காட்டி சீனாவிடமும் சீனா பக்கம் சாய்வது போல் காட்டி மேற்குலகிடமும் உதவிகளைப் பெற்றது. இது இலங்கையின் ராஜதந்திரம் என்றே கருதப்பட்டது. ஆனால் இந்த உதவிகள் உலக வல்லாதிக்க சக்திகளால் போடப்பட்ட பூட்டுகள் என்பதை இலங்கைத் தரப்பால் உடனடியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இந்தப் பிரமாண்டமான திட்டங்கள் வெற்றி பெறுவதும் பயனின்றிக் கிடப்பில் போடப்படுவதும் வல்லரசுகளின் தேவைகளைப் பொறுத்தே மேற்கொள்ளப்படும். தங்குநிலை பொருளாதாரத்தின் முக்கிய நாணயக் கயிறு அவர்களின் கையிலேயே இருக்கும்.
எனவேதான் தற்சமயம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருகை படுமோசமாக வீழ்ச்சியடைந்த நிலையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகச் செலவினத்தில் பெரும் உயர்வு ஏற்பட்டு விட்டது.
எனவேதான் தற்சமயம் இலங்கை அரசு தலைநிமிர முடியாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.
இவ்வாறான ஒரு தங்கு நிலைப் பொருளாதாரத் திட்டங்கள் பலமான அடித்தளம் இல்லாத ஒரு நாட்டில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளமுடியாதளவுக்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் அரசியல் ஞானமோ, பொருளாதார அறிவோ இல்லாதவர்களா என்ற கேள்வி எழலாம்.
முதலாவது தேர்தலை இலக்கு வைக்கும் அரசியல் பொருளாதாரச் செயற்பாடுகள், சிறுபான்மை இன மக்கள் மீது போர் உட்படப் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் மேற்கொண்டு தாங்கள் பெரும்பான்மை இனத்தைப் பாதுகாக்க வந்த வீர நாயகர்கள் என்ற எண்ணக் கருவை மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிய வைத்தல்.
இரண்டாவது துறைமுகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டு மைதானம், துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்புத் துறைமுகத்திலிருந்து களனிப் பாலம்வரை மேம்பாலமாகச் செல்லும் வீதி, பிரமாண்டமான கட்டிடங்களாலும் காப்பற் வீதிகளாலும் நிறைக்கப்படும் நகரங்கள் போன்ற பெரும் திட்டங்கள், நாடு வேகமாக அபிவிருத்தி அடைந்து முன்னேறி வருகிறது என்ற கருத்தை சாதாரண மக்கள் மனதில் ஆழப்பதித்து விடும். விவசாயத்தில் மற்றும் சிறு தொழில்கள், சுய தொழில்கள் என்பனவற்றில் ஏற்படும் முன்னேற்றம் இப்படியான கவர்ச்சியான காட்சிப்படுத்தல்களை உருவாக்கப் போதில்லை.
மூன்றாவது, இப்பிரமாண்டமான திட்டங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படும்போது சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சட்டபூர்வமாகவும் சட்ட பூர்வமற்ற முறையிலும் கணிசமான தரகுப் பணம் வழங்கப்படும். அதேபோன்று உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்கள், வாகனங்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்கள் இறக்குமதியின் போதும் தரகுப் பணங்கள் பல்வேறு மட்டங்களிலும் பரிமாறப்படும்.
போர் உட்பட்ட இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள், பிரமாண்டமான அபிவிருத்தித் திட்டங்கள், திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் என்ற மூன்றும் பெரும் லாபம் தருபவையாக உள்ள அதேவேளையில், பேர் புகழையும் தேடிக் கொடுப்பனவாக உள்ளன.
தேர்தல் மூலம் அரசியல் அதிகாரம் உருவாக்கப்படும் நாட்டில் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் வீரநாயகர்கள் என்ற ஒரு தோற்றப்பாடும் மக்களின் அபிவிருத்திக்கு உழைப்பவர்கள் என்ற மாயையும் உருவாக்கப்படவேண்டும். அது மட்டுமின்றி தேர்தல் செலவுகளுக்கு நிறையப் பணமும் வேண்டும்.
போர் இடம்பெறும் காலங்களில் ஆயுதங்கள், போர்த் தளபாடங்கள் என்பனவற்றின் கொள்முதல் மூலம் பெறும் தரகுப் பணம், பிரமாண்டமான திட்டங்கள் மூலம் கொள்ளையடிக்கப்படும் பெருந்தொகை, சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களையும் வங்கிக் கணக்குகளையும் அதிகரிப்பது மட்டுமின்றி தேர்தல்களிலும் காசை வாரியிறைத்து வெற்றியை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மேற்கொண்ட வழிமுறைகள் மூலம் தங்களுக்கென ஒரு செல்வாக்கையும் பணத்தையும் தேடிக்கொண்ட ஆட்சியாளர்கள் தாமே என்றும் வெற்றி வீரர்கள் எனக் கருதிக் கொண்டிருந்த நிலையில்தான் இன்றைய நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.
எனவே இலங்கையைக் உலுக்கும் இந்த மூன்றாவது பொருளாதார நெருக்கடி இலங்கையின் ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக வலிந்து தேடியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அவர்கள் உருவாக்கிய இன்றைய நெருக்கடி நிலை அவர்களுடைய கழுத்தை நோக்கியே திரும்பியுள்ளதை நாம் அவதானிக்கமுடியும். அதன்காரணமாக எழுச்சி பெற்ற மக்கள் போராட்டங்கள் அவர்களின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தொடரும்....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா