அரச வருமானங்களை விழுங்கிய ஊழல் மோசடிகள் - நா.யோகேந்திரநாதன்
இலங்கையின் மூன்றாவது பொருளாதார நெருக்கடியில் எவ்வாறு இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளும், நாட்டுக்கு எவ்வித வருமானத்தையும் தராத துரித அபிவிருத்தி என்ற மாயையைத் தோற்றுவித்த பிரமாண்டமான திட்டங்களை முற்றிலும் வட்டிக்குக் கடன்பெற்றே உருவாக்கியமையும் எவ்வாறு பிரதான பங்கு வகித்தனவோ அதற்கு எவ்விதத்திலும் குறையாத அளவில் ஆட்சியாளர்களாலும், உயர்மட்ட அரச அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் என்பன பங்கு வகித்தன என்பது அப்பட்டமான உண்மையாகும்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கோப்குழு, “கோபா“ குழு என்பன நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டவை கூடத் திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டு மறைக்கப்பட்டன. ஆனால் இப்போது பல்வேறு தேசிய, சர்வதேச சக்திகளால் மேற்படி ஊழல் மோசடிகள் என்பனவும், அவற்றால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தாங்கள் அதிகாரத்தில் இருக்கும் காலங்களில் பெரும் மோசடிகளை மேற்கொண்டமையும் எதிர்த்தரப்பினர் அதிகாரத்தில் இருந்தபோது மேற்கொண்ட மோசடிகளை மறைத்து அவர்களை அவற்றிலிருந்து காப்பாற்றியமையும் அம்பலத்துக்கு வந்துள்ளன.1977ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தத் தொடங்கிய காலம் முதல் சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதியை அடிப்படையாகக் கொண்ட தங்கு நிலைப் பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. உதாரணமாக அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவிலிருந்து செத்தல் மிளகாய், வெங்காயம் என்பவற்றை இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர்.
இப்பொருட்கள் ஏற்கனவே வடக்கு, வடமத்திய மாகாணத்திலும் ராஜாங்கணை, கலவல்ல ஆகிய பிரதேசங்களிலும் முழு நாட்டுக்கும் தேவையான அளவு உற்பத்தி செய்யப்பட்டன. இறக்குமதிகளால் உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. இன்றுவரை மிளகாய், வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டே நாட்டின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி இதை இனவாத அடிப்படையில் செய்தாலும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் தரகுப் பணம் அவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகப்படத் தேவையில்லை.
1977ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரைச் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு வரவு செலவுத் திட்டங்களிலும் வருவாய் செலவினம் என்பவற்றுக்கிடையே பற்றாக்குறை நிலவி வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கடன்கள் மூலமே அவை ஈடு செய்யப்பட்டன.
2010ம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஷ் தரப்பினர் தங்கள் பிரசாரத்தின் மூலமந்திரமாக போர் வெற்றியை முன்னெடுத்துப் பெரும் வெற்றி பெற்றனர். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதுமே அரசாங்கப் பணத்தை தனி நபர்களின் நலன்களுக்காகச் சூறையாடும் கைங்கரியத்தை ஆரம்பித்து விட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கு வரியற்ற ஆடம்பர வாகனங்கள், இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்பட்டன. 2010 - 2015ம் காலப்பகுதியில் இந்த நடவடிக்கை மூலம் இழக்கப்பட்ட தேசிய வருமானம் 143 மில்லியன் ரூபாவாகும். ஆனால் மொரவக்க நீர்ப்பசனத் திட்டத்திற்கான மொத்தச் செலவினம் 48.14 மில்லியன் ரூபாவாகும். அதாவது இந்த வரியற்ற வாகனங்கள் வழங்கப்பட்டமையால் அரசாங்கத்துக்கு மூன்று அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். இப்படி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் தொகை 38,000 வரி இழப்புக்கு மேலதிகமாகக் காப்புறுதிக் கட்டணமாக 30,000 டொலரில் இறக்குமதிச் செலவாக 1.14 மில்லியன் டொலரும் அரசுக்குச் செலவாகியிருந்தன. அமைச்சர்களின் வாகனங்களின் சந்தைப் பெறுமதி 30,000 மில்லியன் ரூபாவாக இருந்தபோதிலும் அவை ஒவ்வொன்றும் 70,000 மில்லியன் ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.
இவ்வாறு ஆடம்பர வாகனங்கள் வழங்குவதில் ஆரம்பமான பொதுப் பணத்தைச் சூறையாடும் நடவடிக்கை அடுத்தடுத்து பல்வேறு துறைகளிலும் தொடர ஆரம்பித்தது.
அதேவேளையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியின் செலவினங்களை நோக்கினால் போரின் போதைவிட போரற்ற காலப்பகுதியிலேயே கூடுதல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது. 2006 -2009 காலப்பகுதியில் போர் இடம்பெற்ற போது 348 மில்லியன் டொலர் செலவானது. 2002 - 2006 காலப்பகுதி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்ற போதான செலவு 1056 மில். டொலராகும். அதேபோன்று 2006 - 2009 போர்க் காலத்தில் 1499 மில்லியன் டொலர் செலவினமும் போர் முடிந்த பின்பு 2009 - 2017 வரையான முப்படைகளுக்குமான செலவினமாக 1716 மில்லியன் டொலராகவும் ஏற்பட்டது.
போர் காலத்திலும் சரி, போர் அற்ற காலத்திலும்சரி ஆயுதங்கள், வாகனங்கள், போர்த் தளபாடங்கள், சீருடைகள், உணவு விநியோகம் போன்றவற்றில் தரகுப் பணம் மூலம் அமைச்சர்கள், படையதிகாரிகள் ஆகிய தரப்பினருக்கு தாராளமாகவே உற்பத்தி நிறுவனங்கள் பணத்தை வழங்குவார்கள். எல்லாம் செலவினமும் ஆயுத விலைகளிலேயே அடக்கப்படும். அந்தக் காரணங்களால் தேவையற்ற ஆயுதங்கள், இங்கு பாவனையில் உள்ள எறிகணைச் செலுத்திகளுக்கும் பொருத்தமற்ற குண்டுகள் என்பன பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டன.
அதேவேளையில் ரஷ்ய தூதுவராயிருந்த உதயங்க வீரதுங்கவால் கொள்முதல் செய்யப்பட்ட மிக் ரக விமானங்கள் தொடர்பான ஊழல் மிகப் பிரசித்தமானது. இவர் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெரிய தகப்பனாரின் மகனாவார். இவரின் கோடிக் கணக்கான டொலர் ஊழல் வெளிவந்து அது நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் தலைமறைவாகி விட்டார். இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ் அவருக்குச் சிவப்பு அறிவித்தல் விடுத்தபோதும் அவர் இதுவரைக் கைது செய்யப்படவில்லை. அவர் மோசடி செய்த பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவுமில்லை. இவ்விவகாரத்தில் 600 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு எயர் பஸ் நிறுவனத்திடமிருந்து 2.2 பில்லியன் டொலர் பெறுமதியான எயார் பஸ்கள் கொள்வனவு செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நீண்ட காலக் குத்தகைக்கு நான்கு விமானங்கள் கொள்முதல் செய்ய 3 இலட்சம் தரகுப் பணம் செலுத்த இணக்கம் காணப்பட்டது. இந்தப் பணம் ஏயர் லங்கா நிறுவன நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் பெயருக்கு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு, பின்பு அங்கிருந்து 3 வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு நல்லாட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய தெண்டப் பணமாக அமைச்சரவையின் அனுமதியின்றியே 115 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது.
இலங்கையில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான திட்டங்களுக்கு முதலீடு செய்யும் சீன மேச்சன்டிங் நிறுவனத்தால் பஷில் ராஜபக்ஷ்வின் ஒன்றுவிட்ட சகோதரியின் கணவரான திருக்குமரன் நடேசன் பேரில் 4,100 மில்லியன் டொலர் அனுப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் 5 மில்லியன் டொலர் மூலமாகவே அனுப்பப்பட்டது. இப்பணத்திலேயே பஷில் ராஜபக்ஷ் மல்வானையில் ஒரு காணியை வாங்கி அதில் ஒரு பிரமாண்டமாக மாளிகையை அமைத்தார். இது தொடர்பாக நல்லாட்சி காலத்தில் வழக்கு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷ் நிதியத்திற்குப் புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நகர அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 200 மில்லியன் பெறுமதியான காணி யோஷித ராஜபக்ஷ்வுக்குச் சொந்தமான கோல்டன் நெற் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் சி.எஸ்.எம். தொலைக்காட்சி அமைக்க பண சலவை செய்து நிதி பெறப்பட்டது. அத்துடன் றிபோடிர வனப் பகுதியில் யோஷிதவுக்கு காணிகள் பெறப்பட்டன.
தற்போது பண மோசடி தொடர்பாகச் சிறையில் இருக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ.யின் உளவாளியான சுபேரு என்ற நபர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராயிருந்தபோது இலங்கையில் பெயரை உயர்த்த 6.5 மில்லியன் டொலர் தனக்கு வழங்கியதாகத் தன் கணக்கறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குக் கடற்பரப்பில் 45 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட தங்கத்திலிருந்து 8 கிலோவும் இலங்கை வங்கியிலிருந்து 3 கிலோவுமாக 11 கிலோ தங்கம் வெலிசர படைமுகாமில் புத்தர் சிலையமைக்க வழங்கப்பட்டது. படையின் கட்டுப்பாட்டிலுள்ள அந்த முகாமிலிருந்து தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை காணாமற் போய் விட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழீழ வைப்பகத்துக்குச் சொந்தமான கோடிக் கணக்கான பெறுமதியுள்ள தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது 13 வருடங்கள் கழிந்த பின்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதேவேளையில் எயர் லங்கா நிறுவனத்தால் 2013ல் 34 பில்லியனும் 2014ல் 34 பில்லியனும் 2015ல் 17 பில்லியனும் நஷ்டம் ஏற்பட்டது.
கடற்பாதுகாப்புக்கென “அவன்காட்” நிறுவனம் உருவாக்கப்பட கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டது. இதன் வருமானத்தில் முதலில் 23 வீதமும் பின்பு 17 வீதமும் அரசாங்கத்துக்கு வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. அவ்வகையில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய வருமானததில் 11.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக கோத்தபாயவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அப்போது நீதியமைச்சராயிருந்த விஜயதாஸ ராஜபக்ஷ் தடுத்து விட்டார். அது மட்டுமின்றி இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் டில்ருக்ஷி டயசை மைத்திரிபால சிறிசேன பதவி விலகும்படி கேட்டுக் கொண்டார்.
2011ம் ஆண்டின் பின்பு விலை மனுக் கோராமல் பல திட்டங்கள் விருப்ப அடிப்படையில் வழங்கப்பட்டன. இதன்படி கிழக்கு ரயில் பாதை அபிவிருத்தி, மாத்தறை பெலியத்தை பகுதி நிர்மாணம், புத்தளம் நிலக்கரி மின் நிலையம் போன்றவை சில முக்கிய விடயங்களாகும்.
அவை திட்டமிட்டதிலும் பார்க்க 4.37 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருந்ததாகக் “கோபா” குழுவின் அறிக்கை தெரிவித்திருந்தது.
அதேபோன்று பி.எம்.வி. கார் இறக்குமதிக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு 3.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் மத்திய வங்கி பிணை முறிமோசடியில் 268 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார் எனவும் கூறப்படுகிறது.
அதேவேளையில் கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்பு மேற்கொண்ட சில தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் ஏற்கனவே நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியை உச்சத்துக்குக் கொண்டு வந்தன.
2019 வரிச் சீரமைப்பு என்ற பெயரில் பல இறக்குமதிப் பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன. அதன் காரணமாக திறைசேரி வருமானத்தில் 600 பில்லியன் ரூபா வீழ்ச்சியடைந்தது. குறிப்பாகச் சீனிக்கு ஒரு கிலோவுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபா வரி 25 சதமாக குறைக்கப்பட்டது. இதில் 16,800 கோடி வருமானம் இழக்கப்பட்டது. இதில் 9 பெரும் நிறுவனங்கள் அதிக இலாபம் சம்பாதித்தன. ஆனால் இந்த வரிக்குறைப்பால் பொது மக்கள் எந்த நன்மையும் பெறவில்லை.
இதேபோன்று செயற்கை உர இறக்குமதி திடீரென நிறுத்தப்பட்டது. நச்சுத் தன்மையற்ற சேதனப் பசளைப் பாவனையை ஊக்குவிக்கவே இந்தத் தடை எனக் கூறப்பட்டது. ஆனால் இரசாயனப் பசளை இறக்குமதிக்கு வருடம் 26 கோடி டொலர் அந்நியச் செலாவணி தேவைப்பட்டது. ஆனால் இத் தடை காரணமாக நெல் உற்பத்தியில் 25 வீதமும் தேயிலை 33 வீதமும் தெங்குப் பொருட்கள் 30 வீதமும் வீழ்ச்சியடைந்தன. இதனால் நெல் உற்பத்தியில் நட்டம் 425 மில். டொலரும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக 200 மில்லியன் டொலரும் இழப்பு ஏற்பட்டது. இத் தடை காரணமாக அரிசி உற்பத்தி வீழ்ச்சியடைந்தபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து செயற்கைப் பசளையில் உற்பத்தி செய்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
ஒருபுறம் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றால் சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை புத்திபூர்வமற்ற வரிக்குறைப்பு, உணவு உற்பத்தியின் மூலப் பொருளான பசளைக்குத் தடை போன்ற புத்திபூர்வமற்ற நடவடிக்கைகளால் மேலும் நெருக்கடிக்குள் தள்ளினர்.
எனவே இலங்கையின் இன, மதவாத ஒடுக்குமுறையில், அடிப்படைத் தேவைகளுக்கான உற்பத்திகளை உதாசீனம் செய்து பிரமாண்டமான திட்டங்களை கடன் வாங்கி மேற்கொண்டமை, கட்டற்ற முறையில் லஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் முறையற்ற நிர்வாகம் தான் தோன்றித்தனமான நடவடிக்கைகள் என்பன காரணமாக இலங்கையின் 3 ஆவது பொருளாதார நெருக்கடி ஆட்சியாளர்களால் வலிந்து உருவாக்கப்பட்டது என்பதை மறுத்துவிட முடியாது.
தொடரும்....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, இலங்கை