மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் மீண்டெழும் முயற்சிகளும் - நா.யோகேந்திரநாதன்
1953ம் ஆண்டு உலக வங்கியின் கட்டளைகளை நிறைவேற்றிய நிலையில் முதலாவது நெருக்கடி ஏற்பட்டதும், மக்களின் எழுச்சியை அடுத்து அவை திரும்பப் பெறப்பட்ட நிலையில், அந்த நெருக்கடி தணிக்கப்பட்டது. அதேபோன்று 1972 - 1973 காலப்பகுதியில் உலக வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்ததால் பெரும் நெருக்கடி உருவாக்கப்பட்ட போதிலும் தன்னிறைவுப் பொருளாதார முயற்சிகள் மூலம் அது வெற்றி கொள்ளப்பட்டது.
தற்சமயம் ஏற்பட்டுள்ள மூன்றாவது நெருக்கடி ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நிலையில் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் முன்னைய அனுபவங்களின் பாடங்களிலிருந்து கற்ற அவற்றின்படி முன்னெடுக்கப்படுகின்றனவா அல்லது காலாவதியான பழைய பாதையிலேயே கையாளப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.சீனாவிடம் அளவுக்கதிகமாகக் கடன்பட்டதால் நாடு கடன் பொறியில் சிக்கி விட்டதெனக் கூறப்பட்ட நிலையில் சீனாவிடமிருந்து மெல்ல மெல்ல விலகும் நிலையில் மேற்குலகின் பக்கம் சாயும் நிலையும் ஏற்படுத்தப்படுவதாக ஒரு தோற்றப்பாடு எழுந்தது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் இலங்கை சீனாவிடம் 10 வீதமும் இந்தியாவிடம் 10 வீதமும் கடன்பட்டதுடன் அவற்றைவிட ஜப்பானிடம் கூடுதலாக நேரடியாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாகவும் கடன்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சீனா கடன்பொறியில் சிக்க வைத்துவிட்டது என்பது ஒரு உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிரசாரம் என்றே கருதவேண்டியுள்ளது.
ஆனால் சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா என எந்த ஒரு நாடும் வேறு ஒரு நாட்டுக்குக் கடன் வழங்குகிறது என்றால் அதற்குள் தங்கள் நலன் சார்ந்த உள்நோக்கங்களும் இருக்கத்தான் செய்யும். இவ்வாறே உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களும் கடன் வழங்கும்போது போடும் நிபந்தனைகள் கடன் வாங்கும் நாட்டை உலக மயமாக்கல் வலைப்பின்னலுக்குள் பிணைத்து அது அதிலிருந்து மீள முடியாதவாறு அதன் பொருளாதாரக் கட்டமைப்பை சர்வதேசத்துடனான தங்கு நிலைப் பொருளாதாரம் ஆக்கும் நோக்கம் கொண்டவையாகும். எனவே வளர்ந்து வரும் நாடுகள் குறைந்தபட்சம் உணவு, உடை பொன்ற பிரதான விடயங்களிலாவது தன்னிறைவைப் பேணிக்கொள்ளும் வகையில் தங்கள் பொருளாதாரக் கட்டமைப்பை வகுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே இலங்கையும் தேர்தல் வெற்றி என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு போர் வெற்றி நாயகர்களாக நாட்டைக் காப்பாற்றிய வீரர்களாகத் தம்மைக் காண்பிப்பதிலும், நாட்டை பெரும் கட்டிடங்கள், பெரும் நெடுஞ்சாலைகள், பயனளிக்காத துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அலங்காரப் பாணியிலான திட்டங்களை அபிவிருத்தி என்ற பேரில் மேற்கொள்வதிலும் லஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகங்கள் என்பன மூலம் நாட்டைச் சூறையாடுவதிலும் அக்கறை காட்டி இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எமது நாட்டில் செங்கம்பளம் விரிக்கப்பட்டது.
எனவே நாம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதானால் அவற்றின் மூல காரணங்களைக் கண்டு பிடித்து அவற்றை முழுமையாக அகற்றி ஒரு புதிய சுயசார்புத் தன்னிறைவு கொண்ட ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் எமது நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கான அறிகுறிகள் சிறிது கூடத் தென்படவில்லை. இன்று ஆட்சியிலிருப்பவர்களும் சரி, இனி ஆட்சிக்கு வருபவர்களும் சரி கடன் வாங்கி கடன் கொடுப்பது, மற்றும் நாளாந்த தேவைகளை நிறைவு செய்வது என்ற வழியையே பின்பற்றி வருகின்றனர்.
இலங்கை இந்து சமுத்திரத்தில ஒரு அரசியல், இராணுவ, பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது என்ற வகையில் அந்தச் சாதகத் தன்மை கடந்த காலத்தில வேறு நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது.
எனவே ஒருபுறம் சர்வதேசத்துடன் வர்த்தகப் பொருளாதார உறவுகளை தந்திரோபாய ரீதியில் பேணிக் கொண்டும், மறுபுறத்தில் தேசிய தன்னிறைவுப் பொருளாதாரத்தை இயன்றளவு எமது சொந்த மூல வளங்களையும் மனித உழைப்பையும் பயன்படுத்தி ஒரு ஸ்திரமான நாட்டைக் கட்டியெழுப்பும் பாதையில் பயணிக்க வேண்டும். ஆரம்பத்தில் அது வெகு சிரமமாகவே இருக்கும். சர்வதேசம் வெகு இலகுவாக சுயசார்புப் பொருளாதாரத்தை நோக்கி வளர விடப் போவதில்லை. இந்த இடத்தில்தான் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மீதான சர்வதேசப் போட்டியை நாம் தந்திரோபாய அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதற்கு நாம் முன்னைய தவறுகளின் மூலகாரணங்களிலிருந்து முற்றாக வெளிவரவேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவுமே தென்படவில்லை.
முதலில் இன ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் வகையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதும் தொடரும் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. இன்னும் நில ஆக்கிரமிப்பு, இயல்பான பாரம்பரிய தொழில்களை முறியடிக்கும் நடவடிக்கைகள் என்பன தொடரத்தான் செய்கின்றன.
உதாரணமாக சம்பூர் தமிழ் மக்களும் மூதூர் முஸ்லிம் மக்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்கள். சம்பூர் இரு போகங்கள் நெல் விளையும் ஒரு சிறந்த விவசாயப் பிரதேசமாகும். அதுமட்டுமின்றி சம்பூர் கடல் 18 திட்டுக்களைக் கொண்டது. இது பெருமளவில் மீன்கள் இனப் பெருக்கம் செய்யும் இடமாகும். இங்கு நிலக்கரியால் இயங்கும் அனல் மின்நிலையம் அமைக்கவும் இயந்திர உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலை அமைக்கவும் அரசாங்கத்தால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த அனல் மின்நிலையம் வெளியேற்றும் நீரால் கடல்வளம் முற்றாகச் சிதைக்கப்படும் நிலையும் நிலக்கரி தூசியால் விவசாயம் அழிந்து போகும் நிலையும் ஏற்படும். எனவே மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது.
அதுமட்டுமின்றி அங்கு நிறுவப்படும் தொழிற்சாலையில் பணியாற்ற 20,000 சிங்களவரைக் குடியேற்றி அப்பகுதியைச் சிங்கள மயமாக்கும் திட்டமும் வகுக்கப்பட்டிருந்தது. தற்சமயம் மீண்டும் அங்கு காற்றாலை மின்சார உற்பத்தி மேற்கொள்ள இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதேபோல் புத்தளத்தில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், மற்றும் றால் பண்ணைகள் என்பனவற்றால் அப்பகுதி மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுபோன்று வடக்கில் சீனாவின் கடல் அட்டை வளர்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டதுடன் தீவுப் பகுதிகளில் காற்றாலை மின்சார நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. அதேபோன்று மணலாறு, முல்லைத்தீவு பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்கள் மகாவலி அபிவிருத்தி சபையால் கைப்பற்றப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று வலி. வடக்கில் இராணுவம் நிலை கொண்டு வலி.வடக்கின் விவசாய உற்பத்திக்கும், கடல்வள உற்பத்திக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது திட்டமிட்ட வகையில் தமி்ழ், முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதுடன், நாட்டுக்கு தமிழ், முஸ்லிம் மக்களால் கிடைக்கும் உற்பத்திப் பங்களிப்பு இல்லாமற் செய்யப்படுகிறது.
இலங்கை எதிர்கொள்ளும் கடும் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் இன அடிப்படையிலான பொருளாதார உற்பத்தித் தடைகள் தொடர்கின்றன. அதனால் மனித உழைப்பு வீணடிக்கப்படுவதுடன், அவர்களும் வறுமை நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.
அதேபோன்று பில்லியன் கணக்கான டொலர் செலவில் அமைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டைத் துறைமுகம் என்பன அத்திட்டங்களை மேற்கொள்ளக் கடனுதவி வழங்கிய சீனாவின் ஆதிக்கத்துக்கே தற்சமயம் போய்விட்டது. மாத்தளன் நிலையமும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.
இவற்றால் இலங்கைக்கு எவ்வித பொருளாதார நலன்களும் இல்லை. இவ்வாறு தென்பகுதி, கட்டுநாயக்க நெடுஞ்சாலைகளும் அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும்வகையில் பயன்படுத்தப்படவில்லை.
இன்றைய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்கட்டுமானப் பணிகளை நிறுத்தப் போவதாகவும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைவிட ஏனைய விடயங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
விவசாயத் தேவைகளாக பசளை, கிருமிநாசினிகள் இறக்குமதி, நீர்ப்பாசனத்திட்டங்களின் அபிவிருத்தி, மின்சார உற்பத்தி போன்ற உட்கட்டுமானங்களுக்கான நிதியைக் குறைத்தல் அல்லது ரத்துச் செய்தல் எவ்வளவு ஆபத்தானதென்பது புரிந்து கொள்ளப்படவேண்டும். தேசிய உற்பத்திகளுக்கான உட்கட்டுமானங்களை அலட்சியப்படுத்தல் என்பது மீண்டும் முட்டாள்த்தனத்தில் கால் வைக்கும் நிகழ்ச்சியாகும்.
நாட்டில் ராஜபக்ஷ் குடும்பம் உட்பட்ட அரசியல்வாதிகள் உயர் அரச அதிகாரங்கள் மேற்கொண்ட ஊழல், மோசடி என்பனவற்றில் மொத்தத் தொகையும் மீளப் பெறப்பட்டால் நாட்டின் கடன்கள் அனைத்தையும் தீர்ப்பதுடன் புதிய அபிவிருத்திகளையும் மேற்கொள்ளமுடியுமெனக் கூறப்படுகிறது. அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. மாறாக ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் காப்பாற்றுவதிலேயே அக்கறை காட்டி வருகின்றனர்.
மேலும் இறக்குமதியாளர்களும், உள்ளூர் வர்த்தக முதலைகளும் பொருட்களைப் பதுக்கித் தட்டுப்பாடு ஏற்பட வைத்து பின் விலைகளைக் கூட்டிக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். அரசாங்கமும் அவர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகிறது.
அதாவது இந்த நாட்டை மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய இன அடிப்படையிலான பொருளாதார ஒடுக்குமுறையை மாற்றுதல் நாட்டுக்குத் தேவையான அபிவிருத்திகளை முன்னெடுத்தல், லஞ்ச ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றைக் களைதல் போன்ற விடயங்களில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
ஏற்கனவே ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களென்றாலென்ன, இப்போது இருப்பவர்களென்றாலென்ன, இனி அதிகாரத்துக்கு வரக்கூடியவர்களென்றாலென்ன அனைவருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே.
இவர்கள் அனைவரும் கண்காட்சிகளை நடத்தி மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்களேயன்றி தேசத்தினதோ மக்களினதோ நலன்களுக்கு உழைப்பவர்களல்ல.
எனவே நாம் குறிப்பிட்ட மூன்று விடயங்களிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படாதவரை பொருளாதார மீட்சி என்பது சாத்தியமாகுமெனத் தோன்றவில்லை.
தொடரும்....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா