போத்தலில் இருந்த மிகுதிச் சாராயத்தை சின்னக்குட்டி சம அளவில் பிரித்து மூன்று சுண்டு கோப்பைகளிலும் ஊற்றி விட்டு “அப்பு..... இப்ப துவங்கியிருக்கிற கலவரத்திலையும் எங்கடை சனம் கலைபட்டு வருமெண்டால் உப்பிடியே எங்கடை ஆக்கள் நெடுக கலைபடுகிறதெண்டால் இதுக்கு ஒரு முடிவு இல்லையே?” எனக் கேட்டான்.
மண்கிண்டி இடப்பெயர்வைப் பற்றிக் கதைத்தபோது, கொதி நிலையையடைந்த சரவணையப்பு, எழுபத்தேழு தேர்தல் முடிந்த பின்பு ஏற்பட்ட கலவரத்தையும் அதன் காரணமாகப் பண்ணைகளில் மலையக மக்கள் வந்து குடியேறியது பற்றியும் கதைகள் திசை திரும்பியபோது மெல்ல மெல்ல நிதானத்துக்குத் திரும்பியிருந்தார்.
சின்னக்குட்டியின் கேள்வியுடன் சாராயத்தை எடுத்து இரண்டு முடறு குடித்த சரவணையப்பு, “டேய் எனக்கு மண்கிண்டியிலை நடந்ததை நினைக்கேக்கை அடிவிழுந்த நெஞ்சிலையும் தழும்பு கிடக்கிற முதுகிலையும் இப்பவும் நோவெடுக்குதடா.... உந்தக் கலவரங்களிலை கலைக்கப்படுற எங்கடை சனத்துக்கு நோ இருக்காதே?” எனக் கேட்டார்.
“அப்பு.... அதுகளைப் பற்றி நாங்கள் மனதை உலைக்கத் தேவையில்லை..... முந்தி பொலிஸ்காரரும் ஆமிக்காரரும் அவங்கடை துணையோடை சிங்களவரும் எங்களை அடிச்சாங்கள், கொண்டாங்கள்! இப்ப எங்கடை பொடியள் ஆமியையே கொல்லத் துவங்கியிடாங்கள்..... இனியினி நாங்கள் ஓடுற கூட்டமில்லையப்பு.... வலுகெதியிலை கலைக்கிற கூட்டமாவம்” என்றான் சின்னக்குட்டி.“அது தான்ரா எனக்கும் வேணும்!” என்றார் சரவணை. அந்த வார்த்தைகள் வெளிவந்தபோது அவற்றில் எல்லையற்ற ஒரு ஆனந்தம் இழையோடியது.
பொன்னா கடப்புத் தடியைக் கழற்றி விட்டு உள்ளே வந்தபோது காசியர், “பிள்ளை! சாப்பாடுகளைக் கொண்டாவன்” என்றார்.
பொன்னா செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கைகழுவ அவர்களிடம் கொடுத்து விட்டுக் குசினிக்குள் போய் மூன்று பெரிய வட்டில்களிலும் சோத்தையும் கறிகளையும் போட்டாள்.
அவர்களும் எழுந்து கைகளைக் கழுவி விட்டு சாப்பிடத் தயாரானார்கள்.
“ஒரு போத்திலும் அதுக்கை முடிஞ்சிட்டுது, என்னண்ணை” என்றுவிட்டு சின்னக்குட்டி வாயில் நீரை விட்டுக் கொப்புளித்தான்.
காசியர் ஒரு மெல்லிய சிரிப்புடன் “அது கணக்காய்த் தான் முடிஞ்சது..... எங்களுக்குத்தான் கதையிலை நேரம் போனது தெரியேல்லை” என்றார்.
பொன்னா சாப்பாட்டுத் தட்டுகளைக் கொண்டுவந்து அவர்களிடம் கொடுக்கவே, அவர்களும் பாயில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
அவள் மிகவும் பக்குவமாகச் சாப்பாட்டைப் பரிமாறிக் கொண்டிருந்தபோதிலும் பொங்கிக் கொண்டிருந்த அவளின் மனம் இன்னும் அடங்கவில்லை. அதை இப்போது அவர்களிடம் சொன்னால் உடனடியாகவே துவக்கையும் தூக்கிக் கொண்டு சின்னக்குட்டி நாவலர் பண்ணைக்கு போய்விடுவான்.
செங்கண்ணன் குழுவிடம் இருக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகளின் முன்பு ஒவ்வொரு தோட்டாவாகப் போட்டுச் சுடும் தன் நாட்டுத் துவக்கால் எவ்வித பயனுமில்லையென்பதை யோசிக்கக் கூடிய ஆளல்ல சின்னக்குட்டி என்பதை அவள் அறிவாள். அவர்களிடம் நடந்த விடயங்களைச் சொல்வதால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை நினைத்துத் தன்னை அவள் அடக்கிக் கொண்டாள்.
அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் பொன்னா வெற்றிலைத் தட்டைக் கொண்டுபோய் அவர்கள் முன் வைத்தாள் காசியர் தன்னிடமிருந்த பட்டிக்குடியிருப்புப் புகையிலையை சுருட்ட ஆரம்பித்தார்.
நெருப்புக் கொள்ளியைக் கொண்டுபோய் அவரருகில் வைத்து விட்டு அடுக்களையை நோக்கிப் போனாள் பொன்னா?
காசியர், “நீ சாப்பிடுமோணை. நேரம் போட்டுது” என்றார்.
சாப்பாட்டைத் தட்டில் போட்டாலும் அவளால் சாப்பிட முடியவில்லை.
ஆனாலும், கிளி நாவல் பழக் கொட்டையை அவனின் முகத்தில் துப்பி அவனை அவமானப்படுத்தியதை நினைத்து அவள் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அங்கு நடந்த விடயம் சேனாதிக்குத் தெரிந்தாலும் அவன், சும்மா இருக்கமாட்டான். ஜீப்புக்குக் குறுக்கே மரக் குத்தியை உருட்டி விட்டு, மண் வெட்டிப் பிடியால் ஜீப்பையும் அதில் வருபவர்களையும் நொருக்கத் தன் “சுறுக்கன்” என்ற வேட்டை நாயுடன் புறப்பட்டு விடுவான். அப்படி நடக்குமானால் செங்கண்ணன் கூட்டத்தினர் தங்கள் துவக்குகளைச் சும்மா வைத்திருக்கமாட்டார்கள் என்பதை அவள் நன்கறிவாள்.
எனவே அவள் திருப்பித் திருப்பிக் கிளியிடம் அங்கு நடந்ததை வேறு யாருக்கும் சொல்லிவிட வேண்டாமென வற்புறுத்தியிருந்தாள்!.
சேனாதி குஞ்சாத்தையின் ஒரே மகன்..... அவனிடம் இயல்பாகவே முரட்டுத்தனமும், கண்மூடித்தனமான துணிவும் இருந்தபோதும் அவன் குலத்திலும் பொன்னாவிலும் உயிரையே வைத்திருந்தான்.
அந்த ஊரில் ஐந்தாம் வகுப்பு மட்டும் உள்ள ஒரே ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே இருந்தது. அங்குள்ள ஆண்களென்றாலென்ன பெண்களென்றாலென்ன ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பதில்லை.... ஆனால் சேனாதி தன் தகப்பன் வல்லியப்பருடன் கெஞ்சிக் கூத்தாடி குலத்தை நெடுங்கேணியில் விட்டு ஓ.எல்.மட்டும் படிக்க வைத்தான். பின்பு குலம் முள்ளியவளையில் போய் ஏ.எல்.படித்தாலும் அவனால் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாக முடியவில்லை.
முதலாவது தடவையிலே பல்கலைக்கழகத் தேர்வு செய்யப்படாத நிலையில் குலம் மாமன் காசியர், தமையன் சேனாதி ஆகியோருடன் சேர்ந்து கமவேலை, தோட்டவேலை என்பவற்றைச் செய்து வந்தாலும் மருதோடை தபால் நிலையத்துக்கு அடிக்கடிபோய் வர்த்தமானியைப் பார்த்து அரச பணிகளுக்கு விண்ணப்பம் அனுப்பத் தவறுவதில்லை. அவன் மனதில் தானொரு விதானையாக வரவேண்டுமென்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது. வாரமொரு முறை விதானையார் செல்லத்துரை அங்கு வரும்போது அவரின் வேலையில் பங்கு கொண்டு அவருக்கு உதவி செய்வதுண்டு.
குலம் நெடுங்கேணிக்குப் படிக்கப் போய் வந்த நிலையில் பொன்னாவும் ஐந்தாம் வகுப்பு முடித்த பின்பு தானும் படிக்கப் போவதாகக் காசியரிடம் அழுது குளறி, அடம் பிடித்து தன்னையும் நெடுங்கேணியில் சேர்க்க வைத்து விட்டாள். குலத்தின் சைக்கிள் பாரில் ஏறி முன்னுக்கிருந்து பள்ளிக்கூடம் போய் வந்ததை இப்போ நினைக்கும்போது ஒருவித வெட்கம் அவள் மனதில் படர்வதுண்டு.
“பெண்டுகளுக்கும் ஒரு படிப்பே?” என்ற குஞ்சாத்தையின் வசவுகளையும் அவள் வாங்கிக் கட்டுவதுண்டு. ஆனல் சேனாதி “நீ சும்மா இரணை!” என்று அவளை அடக்கி விடுவான். அந்த இனிய நினைவுகளுடன் சாப்பிட்டு முடித்த பொன்னா வெளியில் வந்து கைகளைக் கழுவினாள்.
சரவணையப்புவும் சின்னக் குட்டியும் புறப்பட்டுப் போய்விட்டனர். காசியரும் திண்ணையில் பாயைப் போட்டுப் படுத்தவர் சிறிது நேரத்தில் குறட்டை விட ஆரம்பித்து விட்டார்.
பொன்னா பருவமடைந்து சில மாதங்களிலேயே அவளின் தாய் மூன்று நாள் காய்ச்சலில் இறந்து விட்டாள். அவளின் சாவு காசியரை உடைய வைத்தாலும்கூட பொன்னாவை வளர்த்து வாழவைக்க வேண்டிய தனது பொறுப்பை உணர்ந்தவராகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டார்.
அவர் அவளைச் செல்லமாகவே வளர்த்து வந்தார். அவள் கேட்டதையும் அவர் மறுத்ததேயில்லை. அதன் காரணமாகவே அவள் நெடுங்கேணிக்குப் படிக்கப் போவதாகப் பிடிவாதம் பிடித்தபோது காசியர் மறுக்கவில்லை. அந்த ஊரிலேயே ஐந்தாம் வகுப்புக்கு மேல் படித்த ஒரே ஒரு பெண் அவள்தான்.
ஆனால் குலம் ஏ.எல். படிக்க முள்ளியவளைக்குப் போனபோது எட்டாம் வகுப்புடன் அவனின் படிப்பு முடிந்து விட்டது.
குஞ்சாத்தையும் அவள் மேல் ஆழமான பாசம் வைத்திருந்தாலும் குமர்ப் பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டுமென நினைப்பவள், பொன்னா பாடசாலைச் சீருடை அணிவது, தலையைப் பின்னிக் கட்டுவது போன்ற விடயங்கள் அவளுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், காசியர் எதுவும் சொன்னால் அவள் எதிர்த்துக் கதைக்கமாட்டாள்.
தான் விரும்பும் எல்லாவற்றையும் அனுமதிக்கும் அவர், தான் குலத்தை விரும்புவதை அறிந்தால், மிகவும் சந்தோசப்படுவார் என்றே நம்பினாள்.
எப்படியிருந்த போதிலும் நண்பகல் வயலிலும், அடுக்களைக்குள்ளும் நடந்த எதிர்பாராத சம்பவங்களைால் ஒருவித வெட்கம் கலந்த இன்ப உணர்வில் மிதந்து கொண்டிருந்த அவளின் மனம் செங்கண்ணனின் அடாவடித்தனத்தால் ஆத்திரமடைந்திருந்தது.
கடைசியில் அதைக் குலத்துக்காவது சொல்லவேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள். குலம் சேனாதியைப் போல அவசரப்பட்டு எந்த விடயத்திலும் இறங்கிவிடமாட்டான் என்பதால் அவனிடம் சொல்லி மனமாறவேண்டுமெனத் தீர்மானித்தாள்.
தொடரும்....
Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு