Thursday 21st of November 2024 03:09:22 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 8 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 8 (நா.யோகேந்திரநாதன்)


நீண்ட தூரம் தொடர்ந்து நடந்தமையால் ஏற்பட்ட களைப்பு, பசி, தாகம் என்பனவற்றின் காரணமாக குலத்தின் கை, கால்கள் சோர ஆரம்பித்து விட்டன. எங்காவது விழுந்து படுத்துவிட வேண்டும் போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. எப்படியாவது இந்தக் காட்டை விட்டு வெளியேறித்தானாக வேண்டிய நிலையில் அவன் இடையிடையே நின்று சில நிமிடங்கள் ஓய்வெடுப்பதும் பின்பு நடப்பதுமாகத் தன் பயணத்தை தொடர்ந்தான். எப்படியும் அவன் நடந்து கொண்டிருந்த அழிந்தும் அழியாததுமாகத் தென்பட்ட அந்த வண்டில் பாதை எங்காவது ஓரிடத்தில் வீதியில் ஏறும் என்ற நம்பிகை அவனுக்கிருந்தது.

எனினும் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு மேற்கொண்டு, நடப்பதாக முடிவெடுத்து ஒரு மர நிழலில் படுத்துக்கொண்டான்.

உலங்கு வானூர்தி வட்டமிடத் தொடங்கியபோது ஓடிப்போய் பற்றைக்குள் பதுங்கிக் கொண்ட குலம் அது காட்டை நோக்கிச் சுட்டபோது அவன் எங்கே தனக்கும் சூடுபட்டு விடுமோ என அஞ்சினான். ஆனால், அது சற்றுத் தூரத்திலேயே வேட்டுகளை மீண்டும் மீண்டும் தீர்த்துக் கொண்டிருந்தது. அவன் அந்த இடத்தில் போராளிகள் நகர்ந்து கொண்டிருக்க வேண்டுமெனவும் அவர்களை நோக்கியே உலங்கு வானூர்தி சுடுகிறதெனவும் ஊகித்துக்கொண்டான்.

ஏறக்குறையப் பத்து, பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து, வேட்டுகளைத் தீர்த்த பின்பு அது அந்த இடத்தை விட்டு அகன்று விட்டதைக் குலம் சத்தங்களிலிருந்து புரிந்து கொண்டான். அது பிறகும் திரும்பி வரக்கூடுமென்ற பயத்தில் அவன் மேலும் சிறிது நேரம் பற்றைக்குள் இருந்து விட்டு வெளியே வந்தான்.

போராளிகளை நோக்கித்தான் உலங்கு வானூர்தி சுட்டிருந்தால் அந்த இடத்தில் ஒரு பாதை இருக்கக் கூடுமெனக் குலம் கருதினான்.

எனவே காதுகளைக் கூர்மையாக வைத்துக் கொண்டே ஏதாவது சத்தம் வருகிறதா என அவதானித்தவாறே அந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பற்றைகளை விலக்கி நடக்கும்போது திசை மாறிவிடக்கூடிய ஆபத்து உண்டாதலால். இடையிடையே மரக்கொப்புகள் வழியே தெரிந்து சூரியனைப் பார்த்தவாறே பாதையைத் தீர்மானித்து நடந்து கொண்டிருந்தான்.

அந்தப் பகுதியில் எங்கும் போராளிகள் யாரையும் காணாவிட்டாலும் அவன் கண்ணில் பாதி அழிவுற்ற ஒரு வண்டில் பாதை கண்ணில்பட்டது.

அந்த வண்டில் பாதையில் இறங்கிய அவன் நின்று சுற்றும்முற்றும் பார்த்தான். மூன்று வெட்டப்பட்ட பெரும் மரங்களின் அடிப்பாகங்கள் கண்ணில் தென்பட்டன. எனவே அது ஒரு காலத்தில் கள்ளமரம் ஏற்றிய வண்டில் பாதைதான் என்பதைப் புரிந்து கொண்டான்.

ஒருவிதமான நம்பிக்கையுடன் அப்பாதையில் வடமேற்குத் திசையாக நடக்க ஆரம்பித்தான்.

போகப்போகக் காட்டின் அடர்த்தி அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த மதிய நேரத்திலும் அந்தப் பாதையில் நிலவில் நடப்பது போலிருந்தது. மரங்கள் சூரிய ஒளியை வடிகட்டியே கீழே விட்டன. நிலத்தில் மரச் சருகுகளை விட பற்றைகளோ, செடிகளோ, புல்பூண்டுகளோ எதுவும் காணப்படவில்லை. அவனின் மனதில் ஒருவித பயம் தோன்றினாலும் வண்டில் பாதையை உன்னிப்பாகக் கவனித்து நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருந்தான்.

ஓரிடத்தில் அவன் நடந்து கொண்டிருந்தபோது அவனின் காலடியில் நிலம் அசைவது போலிருந்தது. உடனடியாக உன்னிப் பாய்ந்து சில அடிகள் தூரம் அப்பால் போய் நின்றான்.

பின்புதான் தனது கால்கள்பட்ட இடத்தில் சருகுகளுக்குக் கீழால் வெங்கணாந்தி பாம்பொன்று நகர்வதை அவனால் தெரிந்து கொள்ளமுடிந்தது.

ஒரு புலுட்டை மானையோ, முயலையோ அப்படியே விழுங்கிவிடுமளவுக்கு அது பிரமாண்டமானது. அது வாலைக் கிளப்பி அடித்திருந்தால் தான் பெரும் ஆபத்தில் மாட்டுப்பட்டிருக்கவேண்டி வந்திருக்கும் என்பதை நினைத்தபோது நெஞ்சு படபடவென அடித்தது. அது ஒரு மானைப் பாதி விழுங்கிவிட்டு மானின் கொம்பு அழுகி விழும் வரையும் நீருக்குள் அமுக்கி வைத்திருந்து விட்டுப் பின்பு மிகுதியை உண்ணுமெனக் கேள்விப்பட்டிருக்கிறான். காடுகளுக்குள் இப்படியான ஆபத்துகள் சகஜம்தான் என நினைத்தவனாகத் தொடர்ந்து நடக்கத் தொடங்கினான்.

இவ்வாறு கண்ணிவெடிச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஓடிக் காட்டுக்குள் புகுந்து தான் படுத்திருந்த இடம்வரை வருவதற்குப் பட்டபாடுகளை நினைத்துப் பார்த்துக்கொண்ட அவன், இனி மனம் சோருவது படுமுட்டாள்தனமென முடிவு செய்து கொண்டான்.

கண்களை விழித்துப்பார்த்த அவனின் மேல் உச்சிக்கு வந்திருந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்குமிடையால் அரிவெய்யிலை அள்ளிச் சிதறிக்கொண்டிருந்தது. அவ்விடத்தில் காட்டின் அடர்த்தி சற்றுக் குறைவாயிருந்தபடியால் வெய்யிலின் கடுமை தெரிய ஆரம்பித்திருந்தது.

ஒரு பக்கமாகச் சாய்ந்து நிலத்தில் கையை ஊன்றி எழுந்திருக்க முயன்றபோது மரங்களுக்கு மேலால் ஒரு ஒற்றைப் பனைமரத்தின் வட்டுத் தெரிந்தது. அவனின் மூளையில் ஒரு மின்னல் வெட்டவே படுத்த இடத்திலிருந்து துள்ளியெழுந்தான்.

தான் பனையாலடிக்கு அண்மையில்தான் நிற்பதாகக் கருதினான். ஏனெனில் நிலத்தில் நிற்கும் ஒரு பனை மரங்களுக்கு மேலால் இவ்வளவு உயரத்தில் தெரிந்திருக்கமுடியாது.

ஒரு பெரிய ஆலமரத்தின் கொப்புகள் பிரியும் இடத்தில் ஒரு பனை முளைத்து வளர்ந்திருந்ததை அவன் சின்னக்குட்டியுடன் வேட்டைக்கு வரும்போது கண்டிருக்கிறான்.

வேட்டைக்காரரும் மரங்கள் தடிகள் வெட்டுவோரும் அந்த இடத்துக்குப் பனையாலடியென பெயர் வைத்து விட்டனர். அந்த இடத்துக்குப் போனால் தன்னால் வழி தவறாமல் சின்னக்குட்டியின் வாடியைச் சென்றடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வண்டில் பாதையில் நடக்கத் தொடங்கினான். பனையாலடியால் வரும் பழைய வண்டில் பாதை இதுவாக இருக்கும் என்பது அவனின் ஊகம்.

அவன் பனையாலடிக்கு முன்பு வேட்டைக்குச் சின்னக்குட்டியுடன் வந்தது இரவில்தான் என்றாலும்கூட அவனால் அந்த இடத்தைச் சரியாக அடையாளம் காணமுடிந்தது.

அவன் அங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகப் பார்த்தபோது சிறிது தூரத்தில் மரங்களுக்கு அப்பால் வானத்தில் தெரிந்த வெளி தனிக்கல்லு வயல் வெளிக்கு மேலுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளமுடிந்தது.

அப்படியே அந்த வண்டில் பாதையால் போனால் கயிறு பிடித்து அளந்தவை போன்று வரிசையாக நிற்கும் காயா மரக்காடு வருமென்பதும் அதைத் தாண்டிப் போக வரும் அறுத்தோடியால் இறங்கிப் போக வலது பக்கத்தில் ஒரு சிறிய மோட்டை வருமென்பதும் அதற்கு எதிராக இடது பக்கமாக இறங்கிப் போகும் ஒற்றையடிப் பாதையால் போக சின்னக்குட்டியின் வாடி வருமென்பதும் அவனின் நினைவில் வந்தது. உடல் நடுப்பகல் வெயிலில் வியர்வையால் குளித்து விட்ட போதிலும் களைப்பையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடக்கத் தொடங்கினான்.

அவன் சின்னக்குட்டியின் வாடியை அடைந்தபோது அங்கு எவரும் காணப்படவில்லை.

உள்ளே சென்று பானையைத் திறந்து பார்த்தான். பானையிலிருந்த நீரை அங்கிருந்த சிறிய குண்டான் ஒன்றில் ஊற்றி மடமடவெனக் குடிக்க ஆரம்பித்தான். ஒரு நீண்ட ஏவறை அவனிலிருந்து வெளிவந்தது.

அடுப்பில் பானையில் நீர் கொதித்துக்கொண்டிருந்ததால் சின்னக்குட்டி கிட்டடியில் தான் எங்கோ நிற்பான் என நினைத்து அவன் வரும்வரை ஓய்வெடுக்க முடிவு செய்தான்.

அங்கிருந்த அட்டாளையில் ஏறிப்படுத்தவன் சில வினாடிகளில் நன்றாகத் தூங்கி விட்டான்.

சிறிது நேரத்தில் ஒரு பாவட்டை வரிச்சுக் கட்டைத் தோளில் சுமந்தவாறு வந்த சின்னக்குட்டி அட்டாளையில் யாரோ படுத்திருப்பதைக் கண்டு விட்டு “ஆர்ரா அவன்?” எனக் கேட்டவாறு கட்டை நிலத்தில் போட்டு விட்டுக் கையில் இருந்த வெட்டுக் கத்தியுடன் குலத்துக்கருகில் சென்றான்.

அவன் குலம் படுத்திருப்பதைக் கண்டதும் ஆச்சரியத்துடன் “குலம்.... டேய் தம்பி!” என்றழைத்தவாறே அவனைத் தட்டியெழுப்பினான்.

திடுக்கிட்டு எழும்பிய குலத்தைப் பார்த்து “என்னடா.... உன்னை முள்ளியவளை போட்டுதெண்டு குஞ்சாத்தை சொன்னா.... நீ இஞ்சை படுத்திருக்கிறாய்” எனக் கேட்டான் சின்னக்குட்டி.

“ஓம்.... மாமா அங்கையெண்டு தான் போனனான்...” என்று விட்டு நிறுத்திய குலம் பின்பு தான் கண்ணி வெடி இடம்பெற்ற இடத்தில் மாட்டுப்பட்டதையும் தப்பியோடிக் காட்டில் புகுந்து வந்த கதையையும் சுருக்கமாகச் சொன்னான்.

அவனின் கதையைக் கேட்ட சின்னக்குட்டி அவனின் நிலைமையைப் புரிந்து கொண்டவனாக, எதுவும் பேசாமல் சென்று இறப்பில் தொங்கிய உறியில் கிடந்த றொட்டியையும் பச்சடியையும் ஒரு தட்டில் போட்டுக் கொண்டு அவனிடம் கொடுத்தான்.

அவனும் பசியில் மளமளவென்று கைகழுவ வேண்டுமென்ற எண்ணமேயின்றிச் சாப்பிடத் தொடங்கினான்.

சின்னக்குட்டி வாடியருகே ஒரு சேனை வைத்திருந்தான். அதில் பிடுங்கிய கொச்சி மிளகாயையும் வல்லாரையையும் அம்மியில் அரைத்து அதற்கு எலுமிச்சம் புளியை விட்டு அவன் செய்த பச்சடியும் கோதுமை மா றொட்டியும் குலத்துக்குத் தேவாமிர்தமாயிருந்தது.

சின்னக்குட்டி, “ஆமிக்காரறருக்குக் கன சேதமே?” எனக் குலத்திடம் கேட்டான்.

குலம், “ஓம்.... மாமா.... பதினெட்டு இருபது பேர் செத்திருப்பங்கள் போலை கிடக்குது!” என்றான்.

“வேணும்! அவங்களுக்கு இன்னும் வேணும்!” என்று விட்டு பல்லை பொறுமினான் சின்னக்குட்டி. அவனின் குரலில் அளவற்ற கோபம் பொங்கியது.

பின்பு சின்னக்குட்டி, “காலமை நாவலர் பண்ணையிலை இருக்கிற முனியாண்டியைக் கண்டனான். அவன் கொழும்பு, கண்டி எண்டு சிங்களப் பக்கமெல்லாம் தமிழரை வெட்டியும் சுட்டும் கொண்டு தள்ளுறாங்களாம். வீடு வாசல் கடை கண்ணியெல்லாத்தையும் கொள்ளையடிச்சுப் போட்டு எரிக்கிறாங்களாம். பெம்பிளையளைக் கெடுக்கிறதோடை குழந்தையளையும் உயிரோடை எரிக்கிறாங்களாம். மறியல் வீட்டுக்கை வைச்சே ஐம்பது அறுபது தமிழ் பொடியளை அடிச்சுக் கொலை செய்து போட்டாங்களாம்! ஏராளமான சனம் தப்பியோடி வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உடுத்த துணியோடை போகுதுகளாம்,” என்றெல்லாம் அவன் சொன்னான் எனக் கொதிப்புடன் சொன்னான்.

குலம் சாப்பிடுவதை அப்படியே நிறுத்திவிட்டு “உப்பிடியெல்லாம் நடக்க ஆமி பொலிஸ் என்ன செய்தவங்களாம்?” எனக் கேட்டான்.

“அவங்களோ..... அவங்களும் சேர்ந்து தான்....!” என்றான் சின்னக்குட்டி.

குலம் எதுவும் பேசவில்லை. ஆனால், அவனால் மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. அவன் தட்டை வைத்துவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவினான்.

போராளிகள் செய்வதில் உள்ள நியாயம் மெல்ல மெல்ல குலத்தின் மனதை நிறைத்தது.

“போன லெக்சன் முடிய ஒரு பெரிய வெறியாட்டம். பிறகு சின்ன லெக்சன் நடக்கேக்கை எங்கண்ட யாழ்ப்பாணம் நூல் நிலையத்தைக் கொளுத்தி யாழ்ப்பாணத்தையும் எரிச்சாங்கள். இப்ப பிறகு ஒரு பலியெடுப்பு. எப்பிடியே அடிக்கடி அவங்கள் நடத்தினால் இதின்ரை முடிவு என்ன மாமா?” என குலம் ஒருவித பதைப்புடன் கேட்டான்.

“இனியோ.... வேட்டையை விட்டிட்டு நாங்களும் பொடியளோடை சேர்ந்து துவக்கைத் தூக்க வேண்டியதுதான்....,” என்றான் சின்னக்குட்டி உறுதியான குரலில்.

சின்னக்குட்டியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் குலத்தின் மனதில் பெரும் பூகம்பமாக வெடித்தன.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE