Wednesday 24th of April 2024 08:45:44 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 12 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 12 (நா.யோகேந்திரநாதன்)


இன்னும் ஆவணிச் சதுர்த்திக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் அந்த ஊரவர்கள் குளக்கரை பிள்ளையார் கோவிலின் வருடாந்தப் பொங்கலுக்கு ஆயத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தனர். எல்லோருமாகக் கோவில் சுற்றாடலில் உள்ள பற்றைகளை வெட்டிக் கொழுத்தியும் புற்களைச் செதுக்கியும் தேவையான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

பொங்கலன்று அங்கு காப்புக் கடைகள், மணிக் கடைகள், பாத்திரக் கடைகள் என ஏராளமான கடைகள் வருமாதலால் அவை அமைப்பதற்கும் இடங்களைச் சுத்தப்படுத்தவும் வேண்டியிருந்தது.

நாகராசா இந்த முறை தவில் கச்சேரிக்குப் பதிலாக இசைக் கோஷ்டியைக் கொண்டு வரப்போவதாகக் கூறியிருந்தான். சேனாதியும் ஒலி பெருக்கி ஏற்பாடுகளைத் தங்கள் குடும்பத்தின் செலவில் செய்துதர ஒப்புக்கொண்டிருந்தான்.

ஒதியமலையில் பிறந்து வளர்ந்த நாகராசா பட்டிக்குடியிருப்பில் திருமணம் செய்திருந்தான். பட்டிக்குடியிருப்பில் உள்ள சில குடும்பங்களுக்கு யாழ்ப்பாணம் கம்பர் மலையைச் சேர்ந்த சிலருடன் நெருக்கமான தொடர்புகள் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு தொட்டு கம்பர் மலையைச் சேர்ந்த சிலர் வருடாவருடம் அங்கு வந்து வெங்காயம், புகையிலை என்பவற்றைப் பயிர் செய்து விட்டு “சீசன்“ முடியச் சென்றுவிடுவதுண்டு. குளத்து நீர். குளக்கட்டுப் பொருக்கு என்பன காரணமாக அவை நல்ல விளைச்சலைக் கொடுத்தன. காலப்போக்கில் அப்பகுதி மக்களும் அப்பயிர்ச் செய்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அந்த ஊரவர்கள் முன்பெல்லாம் கொச்சி மிளகாய், மரவள்ளி, மரக்கறிகள் என்பவற்றைச் சேனைச் செய்கையாகவே பயிரிடுவதுண்டு.

நாகராசா திருமணம் செய்த பின்பு பட்டிக்குடியிருப்பில் வெங்காயம், மிளகாய், புகையிலை என்பவற்றைப் பயிர் செய்யத் தொடங்கி விட்டான். 1975 - 1977 காலப்பகுதியிலே அவன் உழவு யந்திரம் எடுக்குமளவுக்கு முன்னேறி விட்டான். அவன் வருடாவருடம் யாழ்ப்பாணத்திலிருந்து பொங்கலுக்கு பேர் பெற்ற தவில் குழுவினரைக் கொண்டு வருவதுண்டு. அந்த வருடம் ஒரு புகழ்பெற்ற இசைக் கோஷ்டியைக்கொண்டு வரமுடிவெடுத்தான்.

சனிக்கிழமையன்ற நாகராசாவின் உழவு யந்திரம், அங்கு நின்ற ஐந்தாறு மாட்டு வண்டில்கள் எல்லாம் நெடுங்கேணிக்குப் புறப்பட்டு விட்டன. பொங்கல் பானைகள், சர்க்கரை, முந்திரி வத்தல், ஏலக்காய் போன்ற பொருட்களை வாங்கவும், புதிய உடுப்புகளை எடுக்கவும், உழவு யந்திரத்திலும் வண்டில்களிலும் கூடுதலாகப் பெண்களே நிறைந்திருந்தனர்.

குலம் காசியரின் வண்டிலில் பக்கக் கட்டைகளில் ஒரே அளவான விண்ணாங்குத் தடிகளைக்கட்டி அவற்றின் மேல் பகுதியில் குறுக்காகப் பாவட்டை வரிச்சுகளைப் பிணைத்து அவற்றின் மேல் பனையோலைப் பாய்களைப் போட்டு கூடாரம் அமைத்திரு்தான்.

குலம் சாரதி ஆசனப் பலகையிலிருந்து வண்டிலை விட உள்ளே குஞ்சாத்தையும் கண்ணகைப் பாட்டியும் பாறுவதிக் கிழவியும் அமர்ந்திருந்தனர். பொன்னா வண்டிலின் பின்புறத்தில் கால்களைத் தொங்கவிட்டாறு, ஒரு கையால் பக்கத் தட்டியைப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கமாக அமர்ந்திருந்தாள்.

பொன்னாவுக்குக் குலத்தின் பின்னாலிருந்து அவனுடன் கதைக்க வேண்டும் போலிருந்தாலும், பாறுவதி கிழவியின் நொட்டை நொடுக்குக்கும் குஞ்சாத்தையின் உறுக்கல்களுக்கும் அஞ்சித் தன் ஆசையை அடக்கிக் கொண்டாள்.

வண்டில் மருதோடை வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது, பின்புறமாகத் தூரத்தில் அந்தப் பச்சை ஜீப் வருவதைப் பொன்னா கண்டு விட்டாள்.

அது வண்டிலுக்கருகில் வந்ததும் வேகத்தைக் குறைத்தபோது, சாரதி ஆசனத்தில் செங்கண்ணன் இருப்பதைப் பொன்னா கண்டு விட்டாள். அவள் தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள். மரக்கிளையிலிருந்து ஒரு செங்குரங்கு அவளைப் பார்த்துப் பல்லைக்காட்டி விட்டுத் தன் தலையைச் சொறிந்து கொண்டது.

“ஹோண்” சத்தம் கேட்கவே பொன்னா மீண்டும் வீதியைப் பார்த்தாள். அவனும் பொன்னாவைப் பார்த்து பல்லைக் காட்டியவறே, கதவுக்கு வெளியே கையை நீட்டி ஆட்டிக் காட்டிவிட்டு வண்டிலை விலத்திக் கொண்டு போனான்.

அதைக் கண்டுவிட்டு குஞ்சாத்தை அதட்டும் குரலில், “ஆரடியவன்? உன்னைப் பார்த்துக் கையைக் காட்டுறான்” எனக் கேட்டாள்.

“ஆரோ இயக்கமாமணை. நெடுகவும் உவனுக்கு என்னைக் காணுற இடமெல்லாம் சொறிச் சேட்டை” என்றாள் பொன்னா ஒரு விதமான பயத்துடன்.

“இடம் குடுத்தால் மடம் கட்டுவராம் மயிலர்? உன்னிலை ஒரு இளக்காரம் காணாமல் உப்பிடி முப்பத்திரண்டு பல்லையும் காட்டுவனே?”

“ஐயோ குஞ்சாத்தை? ஆலடி வைரவராணை நான் அவனைத் திரும்பிக் கூடிப் பார்க்கிறேல்லையணை....!” என்றாள் பொன்னா தளதளத்த குரலில்.

“எடியேய்.... நீ பாத்தியோ இல்லையோ இளகின இரும்பைக் கண்டால்தானே கருமான் எழும்பி எழும்பி அடிப்பானாம்”.

பொன்னா எதுவுமே பேசவில்லை. தான் இளகிய இரும்பா என உள்ளூர அவள் தன்னைத் தானே கேட்டுப் பார்த்தபோது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

குஞ்சாத்தையின் வசவுகளும் பொன்னாவின் அழுகையையும் குலத்தை ஆத்திரமடையச் செய்தன. ஓங்கித் துவரம் கேட்டியால் இரண்டு மாடுகளுக்கும் ஒவ்வொன்று போட்டான். அவை ஓடிய ஓடத்தில் வண்டில் சில்லு பள்ளம் திட்டி பாராமல் ஏறி இறங்கி வண்டிலைக் குலுக்கி மேலும் கீழும் ஆட்டியது.

“எடேய்..... வண்டிலை மெதுவாய் விடடா. நாரிப் பூட்டு தெறிக்கப் போகுது.....” எனக் கத்தினாள் குஞ்சாத்தை.

“நாரியிலை நொந்ததுக்கு உந்தக் கத்துக் கத்திறாய்! உன்ரை ஏறுமாறான கதையளிலை பொன்னாவுக்கு எப்பிடி மனம் நோகுமெண்டு யோசிச்சனியே?...” எனக் குஞ்சாத்தையின் மீது எரிந்து விழ வேண்டும்போல தோன்றினாலும் சிரமப்பட்டு அவன் அதை அடக்கிக் கொண்டான். அவர்கள் தங்களுக்கு மூத்தவர்களை எதிர்த்துக் கதைத்துப் பழக்கமில்லை.

அவன் எதுவும் சொல்லாமலே குஞ்சாத்தை சற்று இறங்கி வந்து “இப்ப நான் என்ன சொல்லிப் போட்டனெண்டு முட்டைக் கண்ணீர் வடிக்கிறாய்? முள்ளிலை சீலை பட்டாலும் சீலையிலை முள்ளுப் பட்டாலும் கிழியிறது சீலை தானடி. நாங்கள் பெம்பிளையள் தான் கவனமாய் நடக்கவேணும்....” என்று விட்டு பொன்னாவின் தலையைத் தடவினாள்.

குஞ்சாத்தை எவ்வளவு கடுமையான வார்த்தைகளைக் கொட்டினாலும் அது தன் மீது அவள் கொண்ட அக்கறையாலும் அன்பாலும் தான் என்பதைப் பொன்னா எதரிந்து வைத்திருந்த படியால் அவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“நான் ஒருநாளும் பிழை விடமாட்டனணை?....” என்ற பொன்னாவின் குரலி்ல், தளதளப்பிலும் ஒரு உறுதி தொனித்தது.

சந்தையடியில் ஒரு மர நிழலில் வண்டில் நிறுத்தப்பட பெண்கள் எல்லோரும் ஒவ்வொருவராக இறங்கினர். குலம் தாங்கு தடிகளைக் கீழே இறக்கி வண்டிலை அதில் நிறுத்தி விட்டு, மாடுகளை நுகத்திலிருந்து கழற்றி அவற்றின் பிடிகயிறுகளை வண்டில் சில்லில் கட்டினான். வண்டில் உருளாமல் சில்லுகளுக்குக் கற்களை எடுத்து முண்டு கொடுத்துவிட்டு, வண்டிலின் அச்சுக் குத்தியின் கீழ் தொங்கவிட்டிருந்த சாக்கிற்குள் கிடந்த வைக்கோலை எடுத்து மாடுகளுக்குப் போட்டு விட்டான் அவன்.

பொன்னா அவனருகில் வந்து “நீ.... வரேல்லையே மச்சன்?...” எனக் கேட்டாள்.

“நீ போட்டு வா.... உதிலை பக்கத்திலை தான் விதாணையார் வீடு. நான் போய்ப் பொங்கல் நாளை அறிவிச்சுப் போட்டு வந்து இதிலை நிக்கிறன்...” என்றான் குலம்.

“கெதியாய் வந்து நில்.... உடுப்பெடுக்க கடைக்குப் போகவேணும்”, என்று விட்டுப் பொன்னாவும் மற்றப் பெண்களுடன் சந்தைக்குள் போனாள்.

குலம் விதானையார் வீட்டின் வெளி இரும்புப் படலையைத் திறந்து உள்ளே போய்! “ஐயா என அழைத்தான்.

“ஐயா ..... நிக்கிறாரே?”

“இல்லைத் தம்பி. பொலிஸ் இன்ஸ்பெக்டர் அவசரமாக வரச் சொல்லி கந்தோருக்கு டெலிபொன் பண்ணினவராம்? அதுதான் ஒட்டிசுட்டான் போயிட்டார்...”

அந்தப் பிரதேசம் “அன் பொலிஸ் ஏரியா” என்ற பொலிஸ் நிர்வாகம் இல்லாத பகுதி. பொலிஸ் நிலையத்தின் வேலைகளையெல்லாம் விதானையாரே பார்ப்பார். அதன் காரணமாக விதானையார் அடிக்கடி பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்பனவற்றுக்குப் போக வேண்டிவரும். உதவி அரசாங்க அதிபருக்கு ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அதிகாரங்கள் உண்டு.

“ஏனம்மா .... ஊரிலை ஏதும் சண்டை சச்சரவு நடந்ததோ?”

“அப்படியொண்டுமில்லை! இன்ஸ்பெக்டர் தான் அவசரமாய் வரச் சொன்னவராம்...” என்ற விதானையாரின் மனைவி “தண்ணி குடிச்சிட்டுப் போ” என்றாள்.

“வேண்டாமம்மா! சந்தையடியிலை ஆக்கள் பாத்துக்கொண்டு நிக்கினம். நான் பிள்ளையா கோயில் பொங்கலுக்குச் சொல்லத்தான் வந்தனான்....!”

“எப்ப பொங்கல்....?”

“இந்த முறை வெள்ளியிலைதான் வருகுது. நீங்களும் வாருங்கோ....!” என்றான் குலம். “கட்டாயம் வருவன்....!” என மகிழ்ச்சியுடன் சொன்னாள் அவள்.

குலம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

இன்ஸ்பெக்டர் விதானையாரை அழைத்தது தன்னைப் பற்றிய விஷயத்தைக் கதைக்கத்தான் என்பதைக் குலம் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, முள்ளியவளைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE