Monday 24th of June 2024 07:37:42 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 13 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 13 (நா.யோகேந்திரநாதன்)


விதானையார் செல்லத்துரை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது அங்கு பணியில் இருந்த சார்ஜண்ட் இன்ஸ்பெக்டர் குவாட்டேசுக்குப் போய்விட்டதாகவும், விதானையாரை அங்கு வரும்படி கூறியிருந்தார் எனவும் குறிப்பிட்டான்.

அவர் அங்கு போய்ச் சேர்ந்தபோது, “வாருங்கோ ஜீ.எஸ்...!” என்றவாறே இன்ஸ்பெக்டர் வெளியே வந்தார். அவரின் கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. அவர் மாமிசமோ, மதுவோ பாவிப்பதில்லையென்ற போதிலும் சிகரட்டை மட்டும் கைவிடவில்லை.

அவர், “அதிலை காத்துப்பட இருந்து கதைப்பம்” என்று முற்றத்து முதுரை மர நிழலில் எதிரெதிராகப் போடப்பட்டிருந்த கதிரைகளில் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டார்.

விதானையார் கதிரையில் அமர்ந்து கொண்டே, “இராசவள்ளிக் கிழங்கு கொஞ்சம் கொண்டு வந்தனான்..... பொடியனைக் கூப்பிடுங்கோ சேர்...!” என்றார்.

இன்ஸ்பெக்டர் லிங்கம் யாரிடமும் எதையும் வாங்கமாட்டார். ஆனால் விதானையார் அவரிடம் வரும்போது ஏதாவது தனது தோட்டத்தின் விளைபொருட்களில் ஒன்றைக் கொண்டு வரத் தவறுவதில்லை. விதானையார் மறுத்தாலும் லிங்கம் பெறுமதிக்குக் கூடுதலான பணத்தைக் கொடுத்து விடுவர்”.

அவர் விதானையார் கொடுத்த பையை வாங்கி வேலைக்காரனைக் கூப்பிட்டு அவனிடம் கொடுத்துவிட்டு, “ஒரு முக்கியமான விஷயம் கதைக்கத்தான் உங்களைக் கூப்பிட்டனான்...!” என்றார்.

விதானையார் “சொல்லுங்கோ சேர்....” என்று விட்டு அவரின் முகத்தைப் பார்த்தார்.

“உங்களுக்கு ஒதியமலையிலை “குலம்” என்ற பொடியனைத் தெரியுமே?”

“ஏன் சேர்.... அவனை நல்லாயத் தெரியும் ...... அங்கத்தையில் வேலையளுக்கு எனக்கு அவன் தான் முழு உதவி...!” என்றார் விதானையார்.

“அவன் இயக்கக்காரனெண்டு ஐம்மிச்சப்படுறாங்கள் ...!”

“இருக்கவே இருக்காது.... அவன் கமமும் தானுமாய் இருக்கிற பொடியன்...”.

“நீங்கள் சொல்லுறது சரியாயிருக்கலாம். ஆனால் இப்ப இரண்டு மூண்டு கிழமைக்கு முந்தி முள்ளியவளை றோட்டிலை “மைன்ஸ்“ வெடிச்சு ஆமி செத்த இடத்திலை இவன் சைக்கிளை விட்டுட்டு ஓடினவனாம். சைக்கிளை ஆமி தூக்கிக்கொண்டு போய் சி.ஐ.டியட்டைக் குடுத்திருக்கிறாங்கள். அவங்கள் நம்பர் பிளேட்டை வைச்சு கிராம சபையிலை போய் சைக்கிள்காரன்ரே பேர், ஊர் எல்லாம் கண்டு பிடிச்சிட்டாங்கள்” என முழு விபரத்தையும் சொல்லி முடித்தார் இன்ஸ்பெக்டர் லிங்கம்.

“விதானையார் பதட்டத்துடன் “சேர்! அவன் வேறை அலுவலாய் முள்ளியவளைக்குப் போய்க் கொண்டிருக்கேக்கை அந்தச் சம்பவம் நடந்தது. அவன் வெடிவெடிச்சவுடனே சைக்கிளைப் போட்டிட்டு ஓடினவன்!.....” என்றார்.

“ம் .... நானும் அப்படித்தான் நினைச்சனான். எனக்குப் போராளியளைப் பற்றி வடிவாய்த் தெரியும். அவங்கள் எங்கையும் தங்களைப் பற்றிய அடையாளங்களை விட்டிட்டுப் ஓடமாட்டாங்கள்”.

லிங்கத்தின் மாமனாரான ஓய்வு பெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சண்முகலிங்கத்தின் இன்னொரு வீட்டில் சில இளைஞர்கள் வாடகைக்குக் குடியிருந்தனர். அவர்கள் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் படிப்பதாகவே சொன்னார்கள். அப்போது லிங்கம் பொலிஸ் சேவையில் இணையவில்லை. ஆனால் அவர்களுடன் சகஜமாகப் பழகுவதுண்டு. அவர்களின் ஒழுக்கம். கட்டுப்பாடு, பண்பாகப் பழகும் விதம் எல்லாமே லிங்கத்துக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் வாடகைப் பணத்தைத் திகதி தவறாமல் கொடுத்து விடுவார்கள். அந்தக் காணியில் விளையும் வாழை, தோடை, மாதுளை ஆகியவற்றின் பழங்களைக் கூடத் தொட்டதில்லை. அவர்கள் வீட்டைக் காலி செய்து சென்ற பின்புதான் அவர்கள் போராளிகளெனவும் அச்சுற்றாடலில் நடந்த மூன்று சிறு தாக்குதல்கள் அவர்களால் தான் மேற்கொள்ளப்பட்டதாகவும், லிங்கம் தனது சிநேகிதன் ஒருவன் மூலம் கேள்விப்பட்டான். அவன் அவர்கள் குடியிருந்த வீட்டைச் சந்தேகத்தின் பேரில் போய்ச் சல்லடை போட்டான். அவர்கள் போராளிகள் என்பதற்குரிய ஒரு சிறு ஆதாரத்தைக் கூடக் கண்டு பிடிக்கமுடியவில்லை.

லிங்கம் சிறிது காலத்தில் மாமனாரின் செல்வாக்கில் இன்ஸ்பெக்டராக இணைந்து விட்டாலும் அவருக்குப் போராளிகள் பற்றி நல்ல அபிப்பிராயமே இருந்தது.

விதானையார், மெல்லிய பயத்துடன், “அப்ப என்ன சேர் செய்யுறது!” எனக் கேட்டார்.

“உங்கள் மூலமாய் கைது செய்து அவனைத் தங்களட்டை ஒப்படைக்கச் சொல்லி எனக்கு “ஓடர்” வந்திருக்குது”.

“அவன் ஒரு அப்பாவி பாவம் சேர்!”

“எனக்கு விளங்குது. நான் அதை அவங்களுக்கும் சொல்ல ஏலாது....!” நான் அவனை அறெஸ்ட் பண்ணச் சொல்லி உங்களுக்கு ஒரு கடிதம் அடிச்சு வைச்சிருக்கிறன்”, என்றார் இன்ஸ்பெக்டர்.

“என்னண்டு சேர்....... ஒரு நல்ல பொடியனை....?”

“பரவாயில்லை...... நீங்கள் விசாரிச்சளவிலை அவனுக்கும் இதுக்கும் தொடர்பில்லையெண்டும், தற்செயலாய் அதிலை போய் மாட்டுப்பட்டிட்டான் எண்டும் இப்ப அவன் ஒரு வேலை விஷயமாய் நேர்முகப் பரீட்சைக்குக் கொழும்புக்குப் போட்டான் எண்டும் ஒரு றிப்போட் எழுதிக் குடுங்கோ..... உங்கடை ஆவணங்களிலையும் அவனுக்கு “இன்ரவீயூவுக்குப்” போக “கறக்றர் சேட்டிவிக்கேற்” குடுத்த பதிவுகளையும் வையுங்கோ இவ்வளவு தூரம் குலம் தப்புவதற்கான வழியை இன்ஸ்பெக்டர் செய்து தருவார் என்பதை விதானையார் சற்றும்கூட எதிர்பார்க்கவில்லை.

அவர், ”நன்றி சேர் .... நன்றி” என்றார் மகிழ்ச்சியில் அவரால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.

“ஆனால், ஜீ.எஸ். இதோடை அவங்கள் விட்டிடுவங்கள் எண்டு நினைச்சிடக்கூடாது. பொடியனட்டை விஷயத்தைச் சொல்லி கவனமாய் இருக்கச் சொல்லுங்கோ. சி.ஐ.டி.க்காரன் மாடு வாங்க, எருப் பார்க்க எண்டு சொல்லிக் கொண்டு வருவாங்கள். அவனை வழக்கமாய்ப் படுக்கிற இடத்திலை படுக்கவேண்டாமெண்டு சொல்லுங்கோ” என எச்சரிக்கை செய்தார் லிங்கம்.

விதானையார், “சரி...... சேர்..... நான் கவனமாய்ப் பார்க்கிறன்!” என்றார்.

வேலைக்காரன் இரண்டு தேனீர் கொண்டு வந்து வைத்தான். இன்ஸ்பெக்டர் தேனீரைக் குடித்துவிட்டு மீண்டும் ஒரு சிகரட்டை மூட்டினார்.

விதானையார் நெடுங்கேணிக்கு வந்துசேர நேரம் ஒரு மணியாகிவிட்டது.

அவர் உடுப்பை மாற்றிக்கொண்டு போய் கால்முகம் கழுவி விட்டு வந்தபோது அவரின் மனைவி குலம் வந்து பொங்கலுக்கும் சொல்லி விட்டுப் போன விடயத்தை அவரிடம் சொன்னாள்.

“போட்டானோ.... உங்கினையுக்கை நிக்கிறானோ?”

“அவையின்றை வண்டில் வெளிக்கிட்டு ஒரு மணித்தியாலத்துக்கு மேல் இருக்கும்” என்றாள் அவள்.

இனி அவர் ஒதியமலைக்குப் போகவேண்டிய கடமை நாள் புதன்கிழமை. அதுவரைக் குலத்துக்கு விஷயத்தை தெரிவிக்காமலிருப்பது ஆபத்தாயும் முடியுமாகையால் வேறு ஏதாவது வழி தேடவேண்டுமென நினைத்துக்கொண்டார்.

அதேவேளையில் தன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்துகொண்டிருப்பதை அறியாத குலம் கண்ணகைப் பாட்டி, பாறுவதிக் கிழவி, குஞ்சாத்தை ஆகியோரையும் அவர்களின் பொருட்களையும் அவரவர் இடங்களில் இறக்கி விட்டு வண்டிலை காசியர் வீட்டை நோக்கி விட்டுக் கொண்டிருந்தான்.

பொன்னா வண்டிலுக்குள் அரக்கி குலத்தின் அருகில் வந்து “மச்சான் உனக்குக் குஞ்சாத்தை கறுப்புக்கரை வேட்டி சால்வை எடுத்தவ. நான் தான் சொல்லி சிவப்புக் கரை எடுப்பிச்சனான்....” என்றாள்.

“அப்ப உனக்கு என்ன நிறத்திலை அரைத் தாவணி எடுத்தனீ...?”

“சிவப்பில வெள்ளைப் புள்ளி போட்டது..... வெள்ளைப் புள்ளி போட்டது. உனக்குப் பிடிக்குமே....?” என்று கேட்டாள் பொன்னா.

“அது.... அது...” என்று இழுத்த குலம்! எனக்கு உன்ரை தாவணியை விட உன்னைத்தான் பிடிக்கும்...” என்று விட்டுப் பலமாகச் சிரித்தான்.

“உனக்கு எந்த நேரமும் .....!” என்று விட்டு அவனின் முதுகில் செல்லமாகக் குத்தினாள்.

குலம் திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏன் நிப்பாட்டிப் போட்டாய் குத்தன்...!” என்றான்.

“உனக்கு நோகேல்லையே...?”

“நோகும்தான் ..... ஆனால் இப்பவே குத்த வேண்டிப் பழக வேணும்...”

“என்ன பழகவேணுமோ....?” பொன்னா எதுவும் விளங்காமல் வியப்புடன் கேட்டாள்.

“ம் .... நாங்கள் கலியாணம் கட்டின பிறகு எங்களுக்கை சண்டை வந்தால் நான் உனக்கு அடிக்கமாட்டன். நீ எனக்கடிச்சால் திருப்பி அடியாமலிருக்க இப்பவே பழக வேணுமல்லே...?” என்று விட்டுக் குலம் கடகடவெனச் சிரித்தான்.

பொன்னாவின் முகம் ஓடிச் கறுத்தது.

அவள் ஒரு விதமான ஏக்கத்துடன் “எங்களுக்கை சண்டை வருமே மச்சான்...?” எனக் கேட்டாள்.

“வராது..... தற்செயலாய் வந்தால் .....”

“வராது ... வராது .... வரவே கூடாது...!” என்றாள் பொன்னா தன் குரலை உயர்த்தி. பின்பு அவள் கெஞ்சும் வகையில் “எங்களுக்கை சண்டை வருமே மச்சான்.....?”

“நிச்சயமாய் வராது” என அழுத்தமான குரலில் சொன்ன குலம்... “நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னால் ஏன் இப்படி கலங்குறாய்...!” எனக் கேட்டான்.

அவள் எட்டி அவனின் நாடியில் பிடித்து முகத்தைத் தனது பக்கம் திருப்பி விட்டு ... “தெரியேல்லை ..... மச்சான் ...” என்றாள்.

“எல்லாம் ஒருதரிலை ஒருதர் வைச்சிருக்கிற ஆசை தான்..” என்று விட்டு மாடுகளைத் தட்டி விட்டான் குலம்.

அவை உசாராக ஓடத் தொடங்கவே சலங்கையொலி அவர்களை வாழ்த்துவது போலிருந்தது.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE