Tuesday 23rd of April 2024 01:35:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 14 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 14 (நா.யோகேந்திரநாதன்)


அதிகாலையில் விதானையார் வீட்டுக்குப் புறப்பட்ட குலம் எட்டு எட்டரை மணியளவில் பெருங்குளம் சந்தியடியில் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

முதல்நாள் மாலையில் நெடுங்கேணி போய் வந்த விநாயகம் குலத்தை வீடு தேடி வந்து விதானையார் தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லியிருந்ததைக் கூறியிருந்தான். குலமும் தான் விதானை வேலைக்கு விண்ணப்பித்தது தொடர்பாக ஏதாவது அறிவித்தல் வந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் வெகு ஆவலுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் புறப்பட்டான். ஆனால். விதானையார் இன்ஸ்பெக்டர் சொன்ன கதைகைளைச் சொல்லி அவனைக் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தபோது அவனுக்குத் தன் தலையிலேயே இடி விழுந்தது போலிருந்தது. அவர் இரவில் வழமையாகப் படுக்கும் இடத்தில் படுக்கவேண்டாமெனவும் படுக்கும் இடங்களை ஒவ்வொரு நாளும் மாற்றும்படியும், ஊருக்குள் புதியவர்களின் நடமாட்டம் காணப்பட்டால் எச்சரிக்கையாயிருக்கும்படியும் அறிவுரை சொல்லியிருந்தார். சந்தோசமாகப் போன அவன் திரும்பும்போது மண்டை நிறைந்த குழப்பங்களுடன் வந்து கொண்டிருந்தான். வீட்டில் படுக்காமல் வேறு இடங்களில் போய் படுப்பதற்கு என்ன காரணத்தைச் சொல்லலாம் என்பதைக் கண்டு பிடிக்கமுடியவில்லை.

பெருங்குளம் சந்தியிலிருந்து தொடர்ந்த காடுகளைத் தாண்டி அவன் ஊர்மனைப் பக்கம் வந்தபோது பொன்னா மாடுகளைக் கொண்டு போய்த் தரவையில் விட்டுவிட்டு திரும்பி வந்து வீதியில் ஏறினாள். குலம் ஏற்கனவே பொன்னாவுக்கும் சேனாதிக்கும் மட்டுமே தான் தேடப்படும் விடயத்தைச் சொல்வதென்று முடிவெடுத்திருந்தான்.

குஞ்சாத்தை, பாறுவதிப் பாட்டி போன்றவர்களின் காதில் பட்டால் அது ஊரெல்லாம் பரவிவிடும் என்பதை அவனறிவான்.

அவள்! இவ்வளவு நேரமும் எங்கை மச்சான் போனனீ...” இண்டைக்கு தோசை சுட்டனான். உங்கள் எல்லாருக்குமாய் கொண்டு போய்க் குஞ்சாத்தையிட்டைக் குடுத்தனான்”, என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

சைக்கிளை விட்டிறங்கிய குலம் அவள் ஆசையுடன் சொன்ன தோசைக் கதையைப் பொருட்படுத்தவில்லை. வழமையாகவென்றால் பசு நெய் விட்டுச் சுட்டு மடித்துவாட்டிய தோசையும் அம்மியில் அரைத்த செத்தல் மிளகாய் சம்பலும் அப்போதே நாவூறத் வைத்திருக்கும்.

அவன் சைக்கிளிலிருந்து இறங்கி உருட்டியவாறே தான் தேடப்படும் கதையையும் தலைமறைவாக வேண்டிய நிலையையும் விபரமாக எடுத்துச் சொன்னான்.

பொன்னா பயத்துடன், “மச்சான்.... இனி என்ன செய்யப் போறாய்?” எனக கேட்டாள். அவளின் விழிகள் அச்சத்தில் அகல விரிந்தன.

அவன் ஒரு நெடுமூச்சுடன் “பாப்பம். முதல் விதானையார் சொன்ன மாதிரிச் செய்வம்.... பிறகு நிலைமையைப் பார்த்து அதுக்குத் தக்கதாய் நடப்பம்”, என்றான்.

“மச்சான்.... இனிமேல் நீ வந்து எங்கடை மாலுக்கை படு, ஆரும் உன்னைப் பிடிக்க வரட்டும் பாப்பம்... அப்பிடி உன்னைக் கொண்டு போறதெண்டால் எங்கடை பிரேதத்தைத் தாண்டித்தான் செல்லலாம். எங்கடை நாய் சுக்கிரீவன் விட்டிடுமே...?”

அவளின் அப்பாவித்தனத்தை நினைத்தபோது உள்ளூரச் சிரிப்பு வந்தாலும் அவள் தனக்காக உயிரைக் கொடுப்பாள் என்பதில் அவனுக்குச் சந்தேகமிருக்கவில்லை.

இருந்தபோதிலும் அவளின் முகத்தை முறிக்கக் கூடாதென்பதற்காகப் “பாப்பம் .... நிலைமையைப் பாத்துச் செய்வம்...” என்றான் அவன்.

அந்த நேரத்தில் காசியரின் வீடு வந்துவிடவே “மச்சான்! காலையில் தோசை மா மிச்சம் கிடக்குது. வா நல்ல நெய் விட்டுச் சுட்டுத்தாறன், சுடச் சுடத்தின்ன அருமையாயிருக்கும்....” என்றாள்.

வழமையாயெனில் பொன்னா சுட்டுச் சுட்டு வட்டிலிலை போட... சம்பலில் தொட்டுத் தொட்டுச் சாப்பிடும் இன்பத்தை அனுபவிக்க மகிழ்வுடன் சம்மதித்திருப்பான். ஆனால் அன்று சாப்பிடவே மனமில்லாமலிருந்தது.

“பசிக்கேல்லைப் பொன்னா...! முதல் நான் போய் அண்ணையட்டை விஷயத்தைச் சொல்லவேணும்...” என்ற விட்டு பொன்னாவின் பதிலை எதிர்பாராமலே சைக்கிளில் ஏறினான்.

அவனுடன் உரிமையுடன் பழகக் கூடிய ஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லாமற் போனமை பொன்னாவுக்குக் கவலையை ஏற்படுத்தியது. அவன் மனம் குழம்பிப் போயிருப்பதை அவளும் உணர்ந்திருந்ததால் அவள் தனக்கு வந்த கவலையை மெல்ல அடக்கிக் கொண்டாள்.

அவள் உள்ளே போகக் கடப்பைக் கழற்றியபோது, நிமிர்ந்து பார்த்தாள் இரு தேன் சிட்டுகளும் அமைதியாக அவள் மனதை உணர்ந்தவைகள் போல் அசையாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தன.

குலம் வீட்டில் போய் இறங்கியதுமே குஞ்சாத்தை “உதிலை போட்டு வாறனெண்டு போனனீ...... இவ்வளவு நேரமும் எங்கை சுத்திப் பொட்டு வாறாய்...?” என்றவள், “குறத்தி பிள்ளைப் பெற குறவன் காயம் திண்டமாதிரி, ஆரோ ஆமிக்காறனுக்கு வெடி வைக்க நீ உன்ரை சைக்கிலைப் பறி குடுத்தனீ.... இன்னும் உனக்குப் புத்திவரேல்லையே ...?” எனக் கேட்டாள்.

அப்போது விஷயம் பறிகொடுத்ததற்கு அப்பால் வெகு தூரம் சென்று விட்டதை அவள் அறிந்திருக்கவில்லை.

“எணேய்..... நான் எங்கையும் சும்மா..... சுத்தேல்லையணை.... விதானையார் வரச் சொல்லித்தான் போட்டு வந்தனான்...”

“விதானையும் பச்சத்தண்ணியிலை பலகாரம் சுடுகிற மாதிரி உன்னட்டை வேலை வேண்டுது..... நீயும் திரி,” என்ற குஞ்சாத்தை,

“அவள் பொன்னா முட்டைத் தோசையும் நெய்த் தோசையும் கொண்டந்தவள். உனக்கும் வைச்சு மூடியிருக்கிறன். காலை முகத்தைக் கழுவிப் போட்டு வந்து தின்!” எனக் கூறினாள்.

“எனக்குப் பசியில்லையெணை, பிறகு சாப்பிடுறன்...”

“என்ன விண்ணானம் கொட்டிறாய்..... விடிய வெளிக்கிட்டு நெடுங்கேணிக்கு எவ்வளவு தேசம் சைக்கிளோடிப் போட்டு வாறாய் போ ..... போய்த் தின் .... பசிக்கும்”.

எனினும் குஞ்சாத்தை அவனின் முகம் இருண்டிருந்ததையும் அவன் வழமைபோல் இல்லையென்பதையும் உணர்ந்து கொண்டாள் “துடைப் புண் நொந்தால் முகத்திலை வலி தெரியும்...” என அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாலும் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவன் தானாகச் சொல்லுவான் என்பதே அவளின் நம்பிக்கை.

குஞ்சாத்தையின் வலியுறுத்தல் காரணமாக சாப்பிட்டாலும்கூட அந்த முட்டைத் தோசையையோ, நெய்த் தோசையையோ அவை பொன்னாவின் தோசைகள் என்ற போதிலும் ருசித்துச் சாப்பிட முடியவில்லை. ஒருவாறு சாப்பிட்டு முடித்துவிட்ட அவன் சேனாதியிடம் போகத் தயாரானான்.

“எணேய்..., நான் அண்ணரின்ரை தோட்டத்துக்குப் போட்டு வாறன் ...!” என்று விட்டு சைக்கிளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் போய் சிறிது நேரத்தின் பின் அந்தப் பச்சை ஜீப் கடப்படியில் வந்து “பிரேக்“ அடித்து நின்று கொண்டு “ஹோர்ண்” அடித்தது.

வீட்டின் பின்புறத்தில் கிடுகு பின்னவெனத் தென்னோலையைக் கிணற்றடியிலிருந்து இழுத்து வந்து கொண்டிருந்த குஞ்சாத்தை “ஹோர்ண்” சத்தம் கேட்டு வியப்புடன் முன் பக்கமாக வந்தாள்.

ஜீப்பின் சாரதி ஆசனத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த செங்கண்ணன் இறங்கி முற்றத்துக்கு வந்தான். அவனின் பின்னால் துப்பாக்கிகளுடன் இருவர் மிடுக்காக இறங்கி வந்தனர்.

அவர்களின் துப்பாக்கிகளைக் கண்ட குஞ்சாத்தை “ஏன்ரா, பொடியள்..... ஏன்ரா உதுகளை இஞ்சை கொண்டு வாறியள்? கோழி கலைக்கவே?” எனக் கேட்கவேணும் போலிருந்தாலும் அதை அடக்கிக் கொண்டாள்.

“இது குலத்தின்ரை வீடே...?” எனச் செங்கண்ணன் கேட்டான்.

“ஓ ....... என்ன சங்கதி,”

“நாளைக்குக் காலமை வாசிகசாலையடிக்கு அவரை வரச் சொல்லுங்கோ.... ஒரு விசாரணை இருக்கு .....?”

“விசாரணையோ....? என்ன விசாரணை..... களவெடுத்தவனோ.... கள்ளப் பெம்பிளை பிடிச்சவனோ.... எங்கடை வமிசத்திலேயே உப்பிடியான பழக்கம் இல்லை....!என்றாள் குஞ்சாத்தை வெடுக்கென்று.

அவன் முதல் தங்கள் வண்டிலை விலத்தும்போது பல்லைக் காட்டியவாறு பொன்னாவைப் பார்த்துக் கையசைத்தது நினைவுக்கு வரவே சினம் பற்றிக் கொண்டு வந்தது.

“அதுகளை விடப் பெரிய பிழை?

“என்னது?”

“உங்கடை மேனைப் பொலிஸ் தேடுறாங்கள்.... திடீரெண்டு பட்டாளமாய் வந்து ஒரு நாளைக்குப் பிடிப்பங்கள். ஓடினால் வெடி வைப்பங்கள் ..... அதாலை எங்களைப் போலை இயக்கங்களுக்கும் ஆபத்து....”

கிழவியால் எள்ளளவும் நம்பமுடியவில்லை...

அவள், “உது பொய்.... பச்சைப் பொய் .... நீங்கள் வேறை ஆரையோ நினைச்சுக் கொண்டு என்ரை பிள்ளையைத் தேடுறியள்....!” என்றாள் அவள்.

“ஆச்சி! எல்லாத் தாய்மாரும் தங்கடை பிள்ளையளைப் பற்றி நல்லாய்த்தான் நினைக்கிறது, நீங்கள் நாளைக்கு அனுப்பி விடுங்கோ .... எல்லாம் விளங்கும் ....”

“பசு அறியாக் கண்டுமில்லை .... தாயறியாப் பிள்ளையுமில்லை” என்ற குஞ்சாத்தை, “அவன் பிழை விட்டிரான்....!” என உறுதியாகச் சொன்னாள்.

“அது எங்களுக்கு விளங்கும் .... நாளைக்குக் கட்டாயம் வரவேணும் ... இல்லாட்டில் நாங்கள் வந்து ஜீப்பிலை தூக்கிப் போட்டுக் கொண்டு தான் போவம்” என்ற செங்கண்ணன் போய் ஆசனத்தில் ஏறி அமர்ந்து கதவை அடித்துச் சாத்தினான்.

ஜீப் புறப்படக் கடப்படிக்கு வந்த குஞ்சாத்தை “எங்களை விசாரிக்க இவை ஆர் வட்ட விதானையோ.... கிராமக் கோட்டு ராசாவோ...?” என்று விட்டு உள்ளே போனாள்.

எனினும் குலத்தை பொலிஸ் தேடுவது என்பது உண்மையாயிருக்குமோ என எண்ணியபோது நெஞ்சில் ஒரு பயம் எழத்தான் செய்தது.

அவள் தாழ்வாரத்தால் குனிந்து உள்ளே போன போது தலைக்கு நேர் மேலே பல்லி சொல்லியது.

“உச்சத்துப் பல்லி அச்சமில்லை” என நினைத்துக்கொண்டவளாக தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்டாள் அவள்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE