Monday 24th of June 2024 08:07:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 15 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 15 (நா.யோகேந்திரநாதன்)


குஞ்சாத்தை எதிர்பார்த்தது போலவே அவள் வீட்டுக் கடப்படியில் அந்தப் பச்சை ஜீப் காலை ஒன்பது மணிபோல வேகமாக வந்து “பிரேக்” அடித்து நின்றது. செங்கண்ணன் இறங்கிப் பலத்த ஓசையுடன் கதவை அடித்துச் சாத்திவிட்டு “எங்கை அவன்...?” என்றவாறே முற்றத்துக்கு வந்தான்.

“ஆரது...?”

“உங்கடை மேன் தான்...!”

“அவன் எங்கையோ வெளியிலை போட்டான்!”

“விசாரணைக்கு வரச் சொல்லி நேற்றுச் சொல்லிப் போட்டுப் போனனானல்லே....?”

“நீர் வா எண்ண வரவும் போ எண்ண போகவும் என்ரை பிள்ளை நீங்கள் வைச்ச எடுபிடியே?”

“ஆச்சி ! எனப் பலமாக அதட்டிய அவன் “நாங்கள் இயக்கம். எல்லாத்தையும் உங்களுக்காகத்தான் செய்யுறம்!....” என்றான்.

“எங்கடை நன்மை தீமை எங்களுக்குப் பாக்கத் தெரியும். நீங்கள் எங்களுக்கு ஒண்டும் புடுங்கத் தேவையில்லை....”

“நல்லதும், கெட்டதும் காட்டுறம் .... தோழர் வீட்டுக்கை புகுந்து ஆளைக் கழுத்திலை பிடிச்சு இழுத்து வாங்கோ!” என்றான் செங்கண்ணன்.

அவனுக்குப் பின்னால் துப்பாக்கிகளுடன் நின்ற இரு இளைஞர்கள் முன்னால் வந்தனர்.

குஞ்சாத்தை ”ச்..... சூ... ச்து .... சூடாதை” என்று தனது நாய் சூரனைக் கூப்பிட்டாள். எங்கிருந்தோ “சூரன்” குறைத்தவாறே பாய்ந்து வந்தது.

முன்னால் வந்த இரு இளைஞர்களும் சற்றுப் பின் வாங்கினர். அது வந்த விதமே அவர்களைப் பயமுறுத்தியது.

குஞ்சாத்தை “ஐயோ.... ஓடியாருங்கோ .... ஓடியாருங்கோ! ஐயோ, ஓடியாருங்கோ...” எனப் பலமாகக் கத்திவிட்டு ஓடிப் போய் ஏற்கனவே தயாராகத் திண்ணையில் வைத்திருந்த மிளகாய்த் தூள் பேணியை ஒரு கையிலும் விளக்குமாத்தை மறுகையிலும் எடுத்தாள்.

பக்கத்துவீட்டிலும் “கள்ளர்! கள்ளர்!! சேனாதி வீட்டை கள்ளர்....!” என்ற சத்தம் ஒலிக்கவே அது ஒவ்வொரு வீடுகளிலும் எதிரொலிபோன்று ஒலிக்க ஆரம்பித்தது.

சில பெண்கள் மண் வெட்டிப் பிடிகளுடனும் விளக்குமாறுகளுடனும் ஓரிருவர் மிளகாய்த் தூள் பேணிகளையும் கொண்டு வந்தனர். காளிப்பாட்டியின் கையில் காட்டுக் கத்தி இருந்தது.

செங்கண்ணன் குழுவினர் சற்றும் எதிர்பாராத நிலைமைகளைக் கண்டு திகைத்துப் போய்விட்டனர்.

குஞ்சாத்தை முதல் நாள் மாலையே அயல் அட்டையிலுள்ள வீடுகளெல்லாம் போய் பச்சை ஜீப் காரர் வந்து மிரட்டிய விஷயத்தைக் கூறியதுடன், மறுநாள் அவர்கள் எப்பிடியும் குலத்தைத் தேடி வருவார்களெனவும் அப்போதுதான் “கள்ளர் .... கள்ளர் ....” எனக் கத்தினால் பெண்களைக் கொட்டன் பொல்லு காட்டுக் கத்திகளுடன் ஓடி வரும்படி கூறியிருந்தாள்.

அந்த ஊரில் பிறத்தியார் வந்து சண்டித்தனம் காட்டினால் அவர்களுக்கெதிராய் ஊரே திரண்டு விடும்.

குஞ்சாத்தை ஆவேசமாகக் கேட்டாள், “எங்கை வீட்டுக்கை உள்ளடுங்கோடா பாப்பம்....!”

தங்களை மண் வெட்டிப் பிடிகளுடனும், காட்டுக் கத்திகளுடனும், விளக்குமாறுகளோடும் சுற்றி வளைத்த பெண்களைக் கண்டு உண்மையிலையே மிரண்டு விட்டான் செங்கண்ணன்.

அவர்களின் ஆவேசத்தின் முன்னால் தங்களால் நின்று பிடிக்க முடியாதென்பதை உணர்ந்து கொண்டபோதிலும் அவன் தன் பயத்தை வெளியே காட்டாமல், “எல்லாரும் இஞ்சையிருந்து போங்கோ.... இல்லாட்டில் கலைச்சுக் கலைச்சுச் சுடுவம்....!” என மிரட்டினான். பக்கத்தில் நின்ற இருவரும் துவக்குகளை லோட் பண்ணினர்.

குஞ்சாத்தை ஆங்காரமாக “நாங்கள் ஓடினாலெல்லோ நீங்கள் எங்களைக் கலைச்சுச் சுடுறது? இப்ப நீங்கள் போகப் போறியளோ... இல்லாட்டில் நாங்கள் கலைச்சு கலைச்சு வெட்டவோ” என்று விட்டு கையில் மிளகாய்த் தூளை அள்ளினாள்.

முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தாலும் மிளகாயத் தூள்தான் கண்களை நிறைக்கும் என்பதையும் குரைத்துக் கொண்டிருந்த நாய் தன் கழுத்தை கௌவும் என்பதையும் புரிந்து கொண்டான்.

குஞ்சாத்தை பத்திரகாளி போல் நின்றாள். அவள் “சாகத் துணிஞ்சவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டடா. வாடா!.... வா....! எனக் கர்ஜித்தாள். அவளின் கண்கள் இரத்தமாய்ச் சிவந்திருந்தன.

தாங்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தினால் பெண்களில் ஓரிருவர் செத்தாலும் தங்களில் பலர் வெட்டு வாங்க வேண்டிவரும் என்பதையும் கொட்டனடியில் மண்டை பிளபட வேண்டிவரும் என்பதையும் புரிந்து கொண்டான். ஒருவர் இருவருக்கு வெடி வைக்க மற்றவர்கள் ஓடி விடுவார்கள் என எதிர்பார்க்கமுடியாது என்பதையும் அவர்களின் ஆவேசம் அவனுக்கு உணர்த்தியது.

“ஆச்சி! நாங்கள் இயக்கம்..... எங்கடை துவக்கு சனத்தைச் சுடுறதுக்கில்லை...! ஆமியைச் சுட..... இல்லாட்டில்....” என்று உறுமினான்.

“இல்லாட்டில் என்ன பிடுங்கிப் போடுவியளே....!”

மூண்டு நாளையுக்கை உன்ரை மேனை எங்களட்டை அனுப்பாட்டித் தெரியும்..... நாங்கள் பிடுங்கிறதைப் பற்றி.....” என்று விட்டு வேகமாய்ப் போய் ஜீப்பில் ஏறினான்.

அன்றொருநாள் தான் இறைச்சி கேட்டபோது சின்னக்குட்டி நடந்து கொண்ட விதமும் இன்று குஞ்சாத்தை வீட்டில் இடம் பெற்ற சம்பவங்களும் அந்த ஊரவர்களின் துணிவை அவனுக்குப் புலப்படுத்தின. இப்படியே விட்டால் தாங்கள் செல்லாக்காசாகி விடும் நிலை ஏற்பட்டு விடுமென்பதால் அவர்களுக்கு பாடம் படிப்பிக்கவேண்டுமென அவன் முடிவெடுத்துக் கொண்டான்.

மற்றவர்களும் போய் ஏறிக் கொள்ள ஜீப் உன்னிக் கொண்டு புறப்பட்டது.

குஞ்சாத்தை கையில் எடுத்த மிளகாய்த் தூளை மீண்டும் பேணியில் போட்டுவிட்டு “பெட்டைக் கோழி கூவி விடியுமே எண்ணுவினம்..... இப்ப விடிய வைச்சிருக்கிறம், வாருங்கோடி தண்ணி குடிச்சிட்டுப் போவம்......!” என்றாள் குஞ்சாத்தை.

பெண்களின் கேலிச் சிரிப்பும்.... செங்கண்ணன் குழு பற்றிய கிண்டல்களும் அவ்விடத்தை நிறைத்தன.

குஞ்சாத்தை சுற்றிவர இருந்து பெண்களுடன் கூடிக் கதைத்து செங்கண்ணன் குழுவினரை வெருட்டிக் கலைக்கத்திட்டம் போட்டதையோ செங்கண்ணன் வந்து குலத்தை விசாரணைக்கு வரும்படி மிரட்டி விட்டுப் போனதைப் பற்றியோ குலத்திடமோ, சேனாதியிடமோ எதுவும் கூறவில்லை. அவள் அவர்களுக்குப் பொண்களாகவே பாடம் படிப்பித்தால் அவர்களின் சில்லறைச் சேட்டைகள் நிறுத்தப்படுமெனக் குஞ்சாத்தை நம்பினாள்.

முதல் நாள் வீட்டிலிருந்து புறப்பட்ட குலம் நேராகச் சேனாதியின் தோட்டத்துக்குப் போய் விஷயத்தை அவனுக்கு விபரமாகச் சொன்னான். பின்பு இருவரும் நாகராசாவிடம் போய் விதானையார் சொன்னவற்றையெல்லாம் அவனிடம் தெரிவித்துவிட்டு அவற்றைப் போராளிகளுக்கு அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். நாகராசாவும் எப்படியும் தான் அவர்களுக்கு அறிவிப்பதாகச் சொல்லியிருந்தான்.

அன்றிரவு குலம் சேனாதியின் தோட்டத்துக் காவல் கொட்டிலிலேயே தங்கி விட்டான்.

சோனாதி வெங்காயத்துக்குள் பண்டி விழுவதாகவும் அதற்காக அங்கேயே அவனைக் காவலுக்கு மறித்து விட்டிருப்பதாகவும் குஞ்சாத்தையிடம் சொல்லி விட்டான். குலத்தைப் பொலிஸ் தேடுவதாக செங்கண்ணன் சொன்னதைக் குஞ்சாத்தை நம்பாவிட்டாலும் குலம் வீட்டில் படுக்காமலிருப்பது நல்லது போலவே தோன்றியது அவளுக்கு.

அன்று அவர்களுக்கு மதிய உணவு கொண்டு போகும்போது அவள் அன்று காலையில் செங்கண்ணன் குழு வந்து அட்டகாசம் போட்டதையும் பெண்களாக அவர்களைக் கலைத்து விட்டதையும் அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டாள். அவள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அச்சம்பவம் பற்றிய செய்திகள் இந்நேரம் ஊரெங்கும் பரவியிருக்குமென்பது அவளுக்குத் தெரியும்.

குஞ்சாத்தை சமையலை முடித்துக்கொண்டு சாப்பாடு கொண்டு தோட்டத்திற்கு வந்தபோது நேரம் இரண்டு மணியாகிவிட்டது.

சேனாதி அவளிடம்... “இவ்வளவு நேரமும் என்னைணை செய்தனீ...?” எனக் கேட்டான்.

“நான் செய்ததைப் பிறகு சொல்லுறன்..... நீங்கள் இப்ப சாப்பிடுங்கோ.... பசியல்லே...” என்றுவிட்டு கொண்டு வந்த சாப்பாட்டை இரு தட்டுகளிலும் போட்டாள்.

“அண்ணர் அண்டைக்கு வேண்டியந்த பாரைக் கருவாட்டைப் போட்டு எங்கடை தோட்டத்துக் கத்தரியிலை ஒரு பிரட்டல் செய்தனான். கொண்ணனுக்குப் பிடிக்குமெண்டு முருங்கை இலையிலை ஒரு வறையும் செய்தனான்...”.

குஞ்சாத்தையின் முருங்கையிலை வறைக்கு ஒரு தனி வாசம் உண்டு. அதனுடனேயே மட்டும் சோறு சாப்பிடுமளவுக்கு அதற்கொரு தனி ருசியுண்டு.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் காலையில் மிளகாய்த் தூளையும், விளக்குமாத்தையும் ஆயுதமாய்க் கொண்டு செங்கண்ணன் கோஷ்டியைக் கலைத்த கதையைச் சொல்லி முடித்தாள்.

“ஏனணை..... நேற்று வரக்கை குலத்தை விசாரணைக்கு வரச் சொன்ன விஷயத்தைச் சொல்லியிருந்தால் அந்த ஜீப்பை அப்படியே வாய்க்காலிலை பிரட்டி விட்டிருப்பமே...” என்றான் சேனாதி.

“ஏன்!..... நான் உங்களட்டைச் சொல்ல நீ ஒரு துவக்கு, சின்னக்குட்டியன் ஒரு துவக்கு, காட்டுவாடி இரத்தினன் ஒரு துவக்கெண்டு தூக்கிக் கொண்டு வெளிக்கிடப் பிறகு நானும் காசியண்ணரும் கோடு கச்சேரியெண்டு அலையுறதே...?”

“அதுக்காக உவங்கள் உப்பிடித் துள்ளித் திரிய விடுறதே...?”

“எறும்படிக்க ஏன்ரா இரும்புப் பொல்லை? நாங்கள் பெண்கள் கலைச்ச கலையலிலை இனி உந்தச் சொறிச் சேட்டையளுக்கு வரமாட்டினம்....”

அவர்கள் சாப்பிட்டு முடித்து கையைக் கழுவிட்டு அமர்ந்தபோது குலம், “கொஞ்சப் பயித்தங்காயும் வெண்டியும் பிடுங்கி வைச்சிருக்கிறனணை..... கொண்டுபோ” என்றான்.

“காசி அண்ணருக்கு பசு நெய்யிலை வதக்கி வைக்கிற வெண்டிக்காய்க் குழம்பெண்டால் உயிர்..... கொண்டு போய் பொன்னாவட்டைக் குடுப்பம்...” என்றாள் குஞ்சாத்தை.

அப்போதுதான் பார் இடைக்குள்ளால் கால விட்டுச் சைக்கிள் ஓடி வந்த நாகராசாவின் மகன் கண்ணன் அதை வேலியில் சாத்தி விட்டு உள்ளே வந்தான்.

“என்னடா கண்ணா...! ஆத்து விழுந்து வாறாய்?” எனக் கேட்டான் குலம்.

அவன் மெல்லிய களைப்புடன் “உங்கள் இரண்டு பேரையும் ஐயா உடனை வந்திட்டுப் போகட்டாம்!” என்றான்.

குஞ்சாத்தை “ஏனாம்...?” எனக் கேட்டாள்.

சேனாதி “அவன் சின்னப் பெடியனுக்கு என்னணை தெரியும்...” என்று விட்டு “நாங்கள் வாறமெண்டு போய்ச் சொல்லடா தம்பி...” எனச் சொன்னாள்.

போராளிகளைச் சந்திப்பது சம்பந்தமாகத்தான் ஏதோ நாகராசா தெரிவிக்கத் தான் தங்களைக் கூப்பிட்டிருக்க வேண்மெனக் குலம் ஊகித்துக் கொண்டான்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE