Sunday 28th of May 2023 09:18:36 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 16 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 16 (நா.யோகேந்திரநாதன்)


மாலை மங்கிப் பொழுதுபட ஆரம்பிக்கும் நேரம் நாடாரின் முற்றம் ஒரு முதியவர்களின் சனசமூக நிலையம் போலாகிவிடும். சரவணையப்பு, காசியர் கதிரியப்பு, வெள்ளையர் என எட்டுப் பத்துப் பேராகச் சம்மணமிட்டு வட்டமாக அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பனையோலைப் பிளாக்களில் நாடார் தென்னம் பன்னாடையை வடிபோல் மடக்கிப் பிடித்து அதில் கள்ளை வடித்து ஊற்ற வடியில் சேரும் செத்த குளவிகளையும் பூச்சிகளையும் அவர் கவனமாக ஓரிடத்தில் கொட்டுவதுண்டு. கோழிகளுக்கு அது நல்ல சாப்பாடாகும். வேட்டைக்குப் போகாத நாட்களில் சின்னக்குட்டி, காட்டுவாடி ரத்தினம், பண்டார வெடிபரமு ஆகியோரும் அங்கு வருவதுண்டு.

அன்று சரவணையப்பு, காசியர், வெள்ளையர், சின்னக்குட்டி ஆகியோர் நாடார் வீட்டு முற்றத்தில் ஒரு தனி வட்டமாக அமர்ந்திருந்தனர்.

அப்போ வெள்ளையர்! “அப்பு.... விடியக்காலமை உவடமெல்லாம் எச்சரிக்கையெண்டு ஒரு நோட்டீஸ் ஒட்டிக் கிடந்தது அதணை. ஆர் ஒட்டியிருப்பங்கள்?” எனக் கேட்டார்.

அன்று காலையில் வாசிகசாலை, பிள்ளையார் கோவிலடி, முக்கிய சந்திகளில் உள்ள பெரு மரங்கள் எனப் பல இடங்களிலும் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

“எச்சரிக்கை” எனத் தலைப்பிடப்பட்டிருந்தன. அதில் “பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அல்லது மிரட்டுவது, தாக்குவது, கடத்துவது போன்ற வன்முறைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என எழுதப்பட்டிருந்தது.

சின்னக்குட்டி பட்டும் படாமல் “வேறை ஆர்..... இயக்கப் பொடியனாய்த்தானிருக்கும்.....” என்றான்.

சரவணையப்பு “ஆர்ரா.... உந்தப் பச்சை சீப்பிலை திரியிறாங்கள்! அவங்களோ....?” எனக் கேட்டார்.

“உனக்கென்ன விசரே? உவங்களுக்காகத்தான், ஆரோ நல்ல இயக்கம் ஒட்டியிருக்கிறாங்கள் போலை கிடக்குது...” என்றான் சின்னக்குட்டி.

சரவணையப்புவும் “அது தானே பாத்தன்.... அதுகள் அவள் குஞ்சாத்தை வீட்டை போய் அட்டகாசம் போட்டுக் கலைபட்டு ஓடிப் போனதை வைத்துத்தான் உதை ஒட்டியிருக்கிறாங்கள் போலை...” என்றுவிட்டு பிளாவை எடுத்துக் கொஞ்சக் கள்ளை உறுஞ்சினார்.

“அப்ப .... அவங்கள் ஒட்டேல்லையெண்டால் வேறை ஆர்...?” எனக் கேட்டார் வெள்ளையார்.

“அண்டைக்கு முள்ளியவளை றோட்டிலை ஆமிக்கு வெடி வைச்ச பொடியளாய்த் தானிருக்க வேணும்....!” என்றார். காசியர். குலம் விட்டிட்டு ஓடி வந்த சைக்கிளுக்குப் பதிலாகப் போராளிகள் வேறு ஒரு சைக்கிளைக் கொடுத்தபடியால் காசியருக்கு அவர்களின் மீது ஒரு உயர்ந்த அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது. மக்களின் மீது அக்கறை கொண்டவர்கள் அவர்களாய்த்தானிருக்க வேண்டுமென்பதில் அவருக்கு எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.

“எண்டாலும் எங்கடை பெண்டுகள் கெட்டிக்காறியள்தான்.... துவக்கோடை வெட்டுறன், பிடுங்கிறன் எண்டு வந்தவங்களை மிளகாய்த் தூள் பேணியளையும் விளக்குமாறுகளையும் வைச்சுக்கொண்டு வெருட்டிக் கலைச்சுப் போட்டாளள்....” என்றார் பெருமையுடன் சரவணையப்பு.

இவ்வாறு பச்சை ஜீப்பாரர் பற்றிக் கேலியும் கிண்டலுமாகத் தொடர்ந்த கதை பிள்ளையார் கோயில் பொங்கல் பற்றித் திரும்பியது.

அப்போது காசியர், “குலத்தைப் பொலிஸ்காரர் பிடிக்கத் தேடி வரப்போறாங்கள் எண்ட கதை கேள்விப்பட்டவுடனையே குஞ்சாத்தை பிள்ளையார் பொங்கலுக்கு ஆயிரம் மோதகம் அவிச்சுப்படைக்கிறதெண்டு நேர்ந்திட்டாள்...!” என்றார்.

“ஆயிரமோ....!” என வியப்புடன் கேட்டார் வெள்ளையர்.

“துவக்கோடை வார இளந்தாரியளையே கலைக்கிற எங்கடை பெண்டுகளுக்கு ஆயிரம் மோதகம் பிடிக்கிறது ஒரு வேலையே...?” என்றார் சரவணையப்பு.

அப்போது தான் காசியருக்குக் குஞ்சாத்தை தேங்காய் பிடுங்க நாடாரை வரச்சொல்லிச் சொல்லும்படி சொன்னது நினைவுக்கு வந்தது. போகும்போது மறவாமல் சொல்லிவிட வேண்டுமென ஞாபகப்படுத்திக் கொண்டார்.

அவர்களுக்கு வெறியேற வெறியேற பொங்கலை எப்படி எப்படியெல்லாம் சிறப்பாகச் செய்ய வேண்மென்ற ஆலோசனைகள் ஒவ்வொருவரிடமும் பிறந்து கொண்டிருந்தன.

அவர்கள் இவ்வாறு பொங்கலைப் பற்றித் திட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் குஞ்சாத்தை வீட்டு முற்றத்தில் பொங்கலுக்கான ஆயுத்தங்கள் துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

ஐந்தாறு உரல்கள் வைத்து இளம் பெண்கள் நெல்லுக் குற்றிக் கொண்டிருக்க மற்றவர்கள் அவர்கள் குற்றியவற்றை சுளகால் கொழித்து உமி வேறு நெல் வேறாக்கிக் கொண்டிருந்தனர்.

பொன்னாவும் மயிலும் மரகதமும் ஒரு உரலில் மாறிமாறி கைமாறு உலக்கை போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த முன்னிலவுப் பொழுதில் பல பெண்கள் கூடி நெல் குற்றியும் புடைத்தும் கலகலப்பாய்க் களைப்பின்றி வேலை செய்து கொண்டிருந்தனர்.

நெல்லு கெம்பி வெளியில் கொட்டிவிடாதபடி நடு உரலில் உலக்கை விழுந்து கொண்டிருந்த போதிலும் பொன்னாவின் எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தன.

அன்று காலை தோட்டத்திற்குப் போவதற்கு முன்பு குலம் காசியர் வீட்டுக்குப் போயிருந்தான்.

பொன்னா குலத்தைக் கண்டதும் “என்ன மச்சான்....? பச்சை ஜீப் காறர் உன்னைக் கொண்டு போறதெண்டு அலையுறாங்களாம்..... நீ எங்கை இப்படித் தனியத் திரியிறாய்...?” எனப் பயத்துடன் கேட்டாள்.

“அவை ஒண்டும் வாலாட்ட ஏலாது....? உவ்வடமெல்லாம் நோட்டீஸ் ஒட்டிக் கிடக்கு நீ பார்க்கேல்லையே...?”

“பார்த்தனான் அதுக்கும் உனக்கும் என்ன தொடுசல்....?”

“நானும் சனம் தானே.... என்னைக் கடத்தினாலும் கடத்திற வைக்குத் தண்டனை தானே....!” என மெல்லச் சிரித்தவாறே சொல்லிவிட்டு தானும் சேனாதியும், நாகராசா வீட்டில் போராளிகளைச் சந்தித்த கதையைக் கூறினான்.

சேனாதியும் குலமும் நாகராசா வீட்டையடைந்தபோது அவன் அவர்களைப் பின்புறமுள்ள மாந்தோப்புக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கு அவர்கள் போனபோது “காண்டியண்ணை என அழைக்கப்படும் காண்டீபன் என்ற போராளியும் இன்னொருவனும் நிலத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் எழுந்து “வாருங்கோ” எனக் காண்டீபன் வரவேற்றான். பின்பு நால்வரும் நாகராசாவும் நிலத்தில் அமர்ந்து கொண்டனர்.

காண்டீபன் குலத்திடம் நடந்த சம்பவங்களைப் பற்றித் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டான்.

குலம் விதானையார் இன்ஸ்பெக்டரைச் சந்தித்துக் கதைத்த விஷயங்கள் குஞ்சாத்தை வீட்டிற்கு பச்சை ஜீப்காறர் வந்து குலத்தை விசாரணைக்கு வரும்படி மிரட்டியது, மறுநாள் பெண்களாக அவர்களை விரட்டிக் கலைத்தது போன்ற சகல விஷயங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

முழுவதையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த காண்டீபன் “குலம்.... நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பச்சை ஜீப்காறர் சேட்டை விடாதபடி நாங்கள் பாப்பம்..... அவங்களை இஞ்சையெல்லாம் திரியவிடுறதே பிழை..... என்ன செய்யிறது இயக்க மோதலாப்ப் போம் எண்டதாலை பொறுத்திருக்கிறம். மற்றது ஊருக்கை ஆரும் புதுமுகங்கள் வந்தால் கவனமாய் இருங்கோ.... அப்படி ஆரும் வந்தால் உடனை நாகராசா அண்ணையட்டை அறிவியுங்கோ.... அவர் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்துவர். குலம் நீங்கள் வீட்டிலை படுக்கவேண்டாம்! படுக்கிற இடங்களையும் ஒவ்வொரு நாளும் மாத்துங்கோ....” எனக் கூறி முடித்தான்.

அப்போது நாகராசா, “பொங்கல் நடத்தப் பயமில்லையே தம்பி...?” எனக் கேட்டான்.

“நீங்கள் வடிவாய் வழக்கம் போலை நடத்துங்கோ...” எனக் கூறிய காண்டீபன் “நாங்கள் நாலு பக்கமும் இரகசியச் சென்றியள் போடுறம்... ஆமி சுத்தி வளைச்சால் உடனை அறிவிப்பம்.... நீங்கள் ஓடத் தேவையில்லை. குலமும் இளம் பொடியளும் மெல்ல மாறுங்கோ! ஆனால் ஆமி வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதாய்த் தெரியேல்லை.... எதுக்கும் கவனமாயிருப்பம்...” என சொல்லி முடித்தான். இவற்றையெல்லாம் குலம் பொன்னாவுக்கு தெரிவித்தான்.

“குலம் சொன்ன விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்த பொன்னா, “அப்ப, இனி உனக்குப் பயமில்லையே மச்சான்?” என வினாவினாள்.

“இனியென்ன.... இப்பவும், அதுக்கு முந்தியும் இனியும் கூடி எனக்கென்ன பயம்...!”

“சும்மா வாணம் விடாதை! உன்னை நினைச்சு என்ரை மனம் படுறபாடு உனக்குத் தெரியுமே...!” என்றாள் பொன்னா. அவளின் குரலில் கவலை தோய்ந்த சிறு கோபம் வெளிப்பட்டது.

“பொன்னா.... உன்ரை உடம்பிலையும் குஞ்சாத்தையின்ரை உடம்பிலையும் ஒரே பரம்பரையின்ரை இரத்தம் தானே ஓடுது...?”

“ஓ.... ” என்றாள் பொன்னா.

“அப்ப.... துவக்கோடை வந்தவங்களை வெருட்டிக் கலைச்ச குஞ்சாத்தையின்ரை பரம்பரை நீ! பயப்பிடலாமே....?” என்ற குலம் “நானும் உங்கடை இரத்தம் தானே. எனக்கு மட்டும் பயம் வரலாமே ....” என்று விட்டுப் பெரிதாகச் சிரி்த்தான்.

குலம், எவ்வளவு சமாதானம் சொன்னபோதும் பொன்னாவின் மனம் நிம்மதியிழந்து தவித்தது.

நெல்லு குத்தப்பட்டு விட்டதை அவதானித்த மயில் உலக்கை போடுவதை நிறுத்திய பின்பும் ஒரு யந்திரம் போல் பொன்னா உலக்கை போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட மயில் சற்றுப் பலமான குரலில்... “என்னடி நீ.... குத்துப்பட்ட பிறகும் நிப்பாட்டுறாயில்லை..... அரிசி நொருங்கவல்லே போகுது...” என்றாள்.

குலத்தைச் சந்தித்ததிலும் அவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் மனதை அலைய விட்டுக் கொண்டிருந்த பொன்னா மயிலின் அதட்டலில் திடுக்கிட்டு.... “அட குத்துப்பட்டிட்டுதே.... சுளகை எடு இறக்குவம்...” என்றாள் தன்னைச் சமாளித்தவாறே.

மயில் சில சமயங்களில் தானும் தன்னை மறந்து யோசனையில் ஆழ்ந்து விடுவதுண்டு என்பதை நினைத்துப் பார்த்தவளாக” ஆரை நினைச்சடி ஆகாசத்திலை பறந்தனீ...?” என ஒரு கள்ளச் சிரிப்புடன் கேட்டாள்.

“உன்னைத்தான்...!” என வெடுக்கெனச் சொல்லிவிட்டு பொன்னா குற்றிய நெல்லை அள்ளி சுளகில் போட்டாள்.

“எனக்கு மீசை முளைச்சாப் போலை என்னை நினை.....” என்று விட்டுக் கலகலவெனச் சிரித்தாள் மயில்.

அந்த நேரத்தில் பதட்டத்துடன் ஓடி வந் கிளி களைத்தவாறே “குஞ்சாத்தை ..... குஞ்சாத்தை .... சந்தியிலையணை தோளிலை துவக்கைக் கொழுவிக் கொண்டு சைக்கிளிலை வந்த இரண்டு பொடியங்கள் .... அதாலை வந்த பச்சை ஜீப்பை மறிச்சு ஏதோ கதைக்கிறாங்கள்?” என்றாள்.

“அவங்கள் ஒரே ஆக்களாய் இருக்கும்....”, என்றாள் குஞ்சாத்தை ஒருவித அலட்சியத்துடன்.

“இல்லயணை... பிலத்துக் கொழுவுப்படுற மாதிரி ஏதோ சத்தம் போடுறாங்கள்.... ஒண்டும் விளங்கேல்லை....”

“என்னது கொழுவுப்படுறாங்களோ.... வாடி.... போய்ப் பாப்பம்....” எனப் புறப்பட்டாள் குஞ்சாத்தை.

“வேண்டாம்..... வேண்டாம்.... நீ.... போகாதை உன்னிலை கறள் வைச்சிருப்பங்கள். நான் போறன்... வாடி கிளி...” என்று விட்டு பாறுவதிக் கிழவி விடுவிடென்று நடந்தாள்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE