Wednesday 24th of April 2024 08:42:18 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 19 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 19 (நா.யோகேந்திரநாதன்)


பொழுது நன்றாக விடிந்த பின்பே மக்கள் கோவிலடியை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். நாகராசாவின் ஏற்பாட்டில் இளைஞர்கள் உழவு யந்திரங்கள், வண்டில்கள் என்பவற்றை ஒரு ஒழுங்கு முறையில் ஒன்று புறப்பட்டு ஐந்து நிமிடங்களின் பின்பு மற்றது என்ற விதமாக அனுப்பிக் கொண்டிருந்தனர். வாகனங்கள் போகத் தொடங்கின அரை மணி நேரத்தின் பின்பே கால்நடையாக வந்த மக்கள் போக அனுமதிக்கப்பட்டனர். அதாவது முதலில் சென்ற உழவு யந்திரங்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்திருக்கவில்லை என உறுதி செய்த பின்பே மக்களைப் போக அனுமதிக்கும்படி நாகராசா ஏற்பாடு செய்திருந்தான்.

முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு “பாலன்” என்பவன் தான் நாளாந்தம் மீன் விநியோகம் செய்து வந்தான். அவன் தினமும் மீன் கொடுத்து விட்டுத் திரும்பும்போது பழனி என்ற சீவல் தொழிலாளியிடம் கள்ளுக் குடிக்கத் தினமும் வருவதுண்டு. பழனி கள்ளைக் கொடுத்துக் கொண்டே கதையோடு கதையாக இராணுவ முகாம் நடவடிக்கைகளைக் கேட்டுக்கொள்வார். பழனி தன்னிடம் கதை பிடுங்குவதற்காகப் போராளிகளால் பழனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறியாமலே பாலன் தெரிந்த விடயங்களையெல்லாம் கொட்டி விடுவான். தனக்கு இராணுவம் பற்றிப் பல விடயங்களைத் தெரியும் எனக் காட்டிக் கொள்வதில் பாலனுக்கு ஒரு பெருமை.

இவ்வாறே அன்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கொக்கிளாய், மண்கிண்டி ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து ஏராளமான படையினர் இரவிரவாகக் கொண்டு வந்து குவிக்கப்பட்ட விஷயத்தைப் பாலன் பழனியிடம் புளுகி விட்டான்.

அவன் போனதுமே பழனி ஓடிப்போய் போராளிகளிடம் இராணுவம் குவிக்கப்படும் விடயத்தை அறிவித்தார்.

அவ்வாறு இராணுவம் குவிக்கப்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு நகர்வை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் போராளிகள் அறிவார்கள்.

பிள்ளையார் கோவில் பொங்கல் நடக்கவுள்ள அன்றைய நாளில் படையினர் தயாரிப்புகளில் ஈடுபடுவது போராளிகளுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால், அவர்கள் கோவிலைச் சுற்றிவளைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஏராளமான மக்களைக் கொன்று குவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவேயிருந்தன. ஏனெனில் ஆடி மாதம் நடந்த இனக் கலவரத்தில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று லட்சக் கணக்கானோரை அகதிகளாக விரட்டியமை தொடர்பாக பல உலக நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது தெரிவித்திருந்தன.

எனவே படையினர் கூட்டுக் கொலையில் ஈடுபடாமல், பொங்கல் முடித்து வருபவர்களைப் பகுதிபகுதியாகச் சுற்றிவளைத்து இளைஞர்களைக் கைது செய்துகொண்டு போகக்கூடுமெனப் போராளிகள் எதிர்பார்த்தனர்.

எப்படியிருந்தபோதிலும் அன்று படையினரை வெளியேற விடுவதில்லையெனப் போராளிகள் முடிவு செய்திருந்தனர்.

முல்லைத்தீவு இராணுவத் தளம் சிலாவத்தை, கள்ளப்பாடு, வட்டுவாகல், முல்லைத்தீவு எனப் பல முகாம்களைக் கொண்ட பரந்த பிரதேசத்தில் அமைந்திருந்தது. எனினும் சிலாவத்தைப் பகுதியால் முன்னேறக் கூடுமெனப் போராளிகள் எதிர்பார்த்தனர்.

படைய வேவுப் போராளிகள் தளத்திற்குள் இரகசியமாகப் பிரவேசித்து தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தனர். இரவு 12 மணியளவில் படையினர் வெளியேறுவதற்கான தயாரிப்புகளில் இறங்கி விட்டதாக தகவல் கிடைத்தது.

போராளிகள் வட்டுவாகல் முகாம் நோக்கி எறிகணைகளை ஏவ ஆரம்பித்தனர். ஐம்பது கலிபர் துப்பாக்கிகளும் வேலை செய்தன. போராளிகள் வட்டுவாகல் முகாமைக் கைப்பற்றும் நோக்குடன் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர் என்ற பிரமையை ஏற்படுத்தும் வண்ணம் வியூகத்தை வகுத்திருந்தனர். அதேவேளையில் முள்ளியவளைப் பக்கமாக மாஞ்சோலையிலும் சிலாவத்தைப் பக்கம் அளம்பில் சந்திக்கிடையிலும் இரு போராளிக் குழுக்கள் கண்ணி வெடிகளைப் புதைத்து விட்டுக் காத்திருந்தனர். அந்த இரு குழுக்களும் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை.

வட்டுவாகல் பக்கம் ஏறக்குறைய அரை மணி நேரம் விட்டு விட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு வெளியேறி விட்டனர்.

இராணுவத்தின் மூன்று தாக்குதல் அணிகள் வட்டுவாகலுக்கு நகர்த்தப்பட்டன. போராளிகள் பின் வாங்கி விட்ட நிலையில் தாக்குதல் எதுவும் நடக்காமல் இருக்கவே படையினர் பராவெளிச்சங்களைப் போட்டுத் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினர்.

போராளிகள் பின்வாங்கிய பின்பு அவர்கள் அடர்ந்த பனை வடலிக் கூடல்களிலிருந்து தங்களைத் தாக்கக்கூடுமெனப் பயந்த படையினர் ஒரு குறிப்பிட்ட சிறு தூரம் கடந்த பின்பு அங்கிருந்து எறிகணைகளையும் பரா வெளிச்சத்தையும் தொடர்ந்து ஏவிக் கொண்டிருந்தனர்.

எனினும் போராளிகள் முகாம்களைத் தாக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் நாலு பக்கங்களையும் பலப்படுத்திக் கொண்டனர்.

அதேவேளையில் பொங்கலுக்கோ அல்லது பொங்கல் முடித்துத் திரும்புபவர்களுக்கோ படையினர் இடையூறு செய்ய முடியாதபடி அவர்களைத் திசை திருப்புவதில் பெரு வெற்றியே பெற்றிருந்தனர்.

பொங்கல் முடிந்து இசைக் கச்சேரியில் லயித்துப் போயிருந்த மக்கள் வானத்தில் கண்ட வெளிச்சம் “பரா” வெளிச்சக் கூடுகள் பாய்ச்சிய ஒளிதான். அது மக்களைக் கிலி கொள்ளவைத்தபோதிலும் நாகராசா ஒலிபெருக்கியில் அவை வெகு தொலைவில் ஏவப்பட்ட பராவெளிச்சங்கள் எனவும், பயப்பட்டு அங்குமிங்கும் ஓட வேண்டாமெனவும் அறிவித்துவிட்டான். அவன் உடனடியாகவே இளைஞர்களைக் கூட்டி நான்கு பக்கமும் யாராவது நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு அனுப்பி விட்டான். இசை நிகழ்ச்சி தொடர்ந்தும் இடம்பெற்றது.

இரவு முழுவதும் அசம்பாவிதம் எதுவும் இடம்பெறாத நி்லையில் காலையில் நன்றாக விடிந்த பின்பு மக்கள் தங்கள் இடங்களுக்குப் போக ஆரம்பித்தனர்.

ஐயர் அதிகாலையிலேயே காலைப் பூசையை ஆரம்பித்து விட்டார். பொன்னா, மயில், கிளி ஆகியோரும் பிள்ளையாரை வணங்கி விட்டு ஐயர் கொடுத்த விபூதி, சந்தணத்தை வாங்கிப் பூசிக் கொண்டு புறப்படத் தயாரான போதுதான் அவர்கள் மதிவதனி ரீச்சரைக் கண்டனர்.

மதிவதனி வவுனியா நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒரு இடதுசாரி அரசாங்க உத்தியோகத்தரின் மகள். அவளின் முதல் நியமனமே ஒதியமலைப் பாடசாலை என்றபடியால் அந்த வருட ஆரம்பித்திலேயே இங்கு வந்து விட்டாள். அவள் அதிபரும் மனைவியும் தங்கியிருந்த ஆசிரிய விடுதியின் ஒரு அறையிலேயே தங்கியிருந்தாள்.

அதிபருடனும் மனைவியுடனும் வந்து கொண்டிருந்த மதிவதனி அதிபரிடம் “நீங்கள் போங்கோ சேர். நான் இவையோடை வாறன்!....” எனச் சொல்லிவிட்டு பொன்னா ஆகியோர் நின்ற இடத்திற்கு வந்தாள்.

மயில் அவளிடம் “என்ன ரீச்சர்... இரா முழுக்கக் காணயில்லை...!” என்று விட்டுக் கையிலிருந்த கச்சான் சரையை அவளிடம் கொடுத்தாள்.

“இன்னும் பல்லுத் தீட்டேல்லை...!” என்று கூறியவாறு அதை வாங்கிய அவள், “நானும் உங்களைத் தேடினனான். கண்ணிலை படேல்லே...!” என்றாள்.

“பாடசாலைக்கு பக்கத்திலேயே மயிலின் வீடு அமைந்திருந்தமையால் மதிவதனி வந்து சில நாட்களிலேயே மயிலுடன் நெருக்கமாகி விட்டாள். மயிலில் தொடங்கிய சிநேகிதம் விரிவடைந்த பின்பு அவள் அங்குள்ள இளம் பெண்களுடன் நட்பாகப் பழக ஆரம்பித்து விட்டாள்.

அவள் சனி, ஞாயிறு வீட்டுக்குப் போகும்போது பொன்னாவோ மயிலோ தேன், மரைவத்தல் போன்றவற்றைக் கொடுத்து விடத்தவறுவதில்லை. அவளும் வரும்போது தொதல், வட்டிலப்பம் போன்ற தின்பண்டம் கொண்டு வருவாள்.

அவர்கள் குஞ்சாத்தையிடம் சொல்லி விட்டுப் புறப்படுவதற்காக அவளை நெருங்கியபோது அவள் ஒரு அலுமினியப் பாத்திரம் நிறைய மோதகங்களையும் வடைகளையும் நிரப்பி கிளியிடம் கொடுத்து.... ”எடியே..... இதைக் கொண்டுபோய் ரீச்சர் பிள்ளைக்கும், பெரிய வாத்தியார் வீட்டுக்கும் குடுத்திட்டுப் போடி....!” என்றாள்.

“ஏனாம் இவ்வளவும்...?” எனக் கேட்டாள் மதிவதனி.

“பிள்ளையாரின்ரை நேர்த்திப் பண்டம் பிள்ளை.... வேண்டாமெண்டு சொல்லக்கூடாது. கொண்டு போ பிள்ளை...!” என்றாள் குஞ்சாத்தை. அந்த ஊர் மக்கள் தன்னில் காட்டும் அன்பில் அன்று போலவே அவள் பலதடைவைகள் அடிக்கடி உருகிப் போனதுண்டு.

அவர்கள் பாடசாலை விடுதிக்குத் திரும்பும் வழியில் அந்தப் பச்சை ஜீப் வந்து அவர்களின் அருகில் நின்றது. மோதகச் சட்டியைக் கவனித்த செங்கண்ணன் “எங்களுக்கு கோயில் சமான் இல்லையோ....?“ எனக் கேட்டான்.

“உனக்குக் கோயிலுக்கு வர நோவோ. அங்கை போய் வேண்டு”, எனச் சீறி விழுந்தாள் கிளி.

“என்ன கிளி, நீ ..... பெரியாக்களோடை இப்படியே கதைக்கிறது .... சரியில்லை ..... கொஞ்சம் குடு....!” என்றாள் மதிவதனி.

“உங்களுக்கு இவங்ளைப் பற்றித் தெரியாது ரீச்சர்...!” என்ற கிளி வேண்டா வெறுப்பாகச் சிலவற்றை எடுத்து “இந்தா.... பிடி....!” என்று விட்டு அவனிடம் நீட்டினாள்.

அவன் ஒரு மெல்லிய சிரிப்புடன் பொன்னாவைப் பார்த்து “உங்கடை கையாலை தந்தால் தான் எனக்கு ருசிக்கும்....!” என்றான்.

பொன்னா வெறுப்புடன் பார்த்துவிட்டு, “வாங்கோ .... ரீச்சர் .....”, என்று விட்டு விடுவிடு என்று நடக்கத் தொடங்கினாள்.

கையில் எடுத்த மோதகத்தை மீண்டும் சட்டியில் போட்டு விட்டு அவர்களின் பின்னால் போன கிளி, “காசியப்பு.... செருப்பாலை தருவர்! வேண்டு...!” என்றுவிட்டு நடந்தாள்.

“மயிலே! மயிலே எண்டால் இறகு போடாது..... போட வைக்கத்தான் வேண்டும்....” என்றுவிட்டு ஜீப்பை எடுத்தான் அவன்.

மதிவதனியும் கோபமடைந்து விட்டாள்,

“நீ.... என்ன பொன்னா? இந்த ஊரிலையும் இப்பிடி ஒருதனே...?”

“மயில், இவன் எங்கடை ஊரில்லை ரீச்சர், ஊர்பேர் தெரியாத எருமைமாடு....” என்றாள் கிளி.

பொன்னா எதுவும் சொல்லா விட்டாலும், மனதுக்குள் சேனாதியிடம் சொல்லி இவனின் தொல்லைக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டாள்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவுபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE