கச்சேரிப் பெரியவர் கடத்தப்பட்ட தகவல் டொலர் பண்ணையிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பாடசாலையில் தங்கியிருந்த மக்களிடமும் சென்றடையவே இந்தப் பாடசாலை மண்டபமே பரபரப்பாகி விட்டது.
அவர்களில் ஒரு முதியவர் உட்படச் சிலர் அதிபரும் மற்றவர்களும் இருந்து கதைத்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தனர். அவர்களின் முகங்களில் ஒரு அச்ச உணர்வு பரவியிருந்தது.
அதிபர் அந்த முதியவரிடம், “என்னய்யா........ ஏதாவது வேணுமே?” எனக் கேட்டார்.
“அப்பிடி ஒண்ணுமே இல்லீங்க..... நீங்க எங்களுக்குச் செய்த உதவிகளே பெரிய புண்ணியமுங்க.... ஆனா...” என்றுவிட்டு வார்த்தைகளை இடை நிறுத்தினார் அவர்.“ஆனால் எண்டால் ..... ஏதோ குறை இருக்குப் போலை”.
“இல்லை.... இல்லை..... இல்லீங்க..... நேத்தைக்கி காலையிலை தான் கச்சேரியில் பெரியவரின் ஆளுங்க எங்களை வெரட்டினாங்க அந்தியிலை அவரை யாரோ கடத்திட்டாங்க .... நாமதான் ஏதோ செஞ்சமின்னு.... நமக்கு கரைச்சல் கொடுப்பாங்களோன்னு பயமாயிருக்குங்க....” என்றார் அவர்.
அதிபர், “அவர் உங்களைக் கலைக்கிற கொடுமையை மட்டும்தான் செய்தவரில்லை. முதல் எங்கடை கமக்காரருக்குத் துவக்கு இல்லாட்டில் பயிர்களை மிருக அழிவிலையிருந்து காப்பாத்த ஏலாதெண்டது தெரி்ஞ்சும் கமக்காரரின்றை துவக்கெல்லாத்தையும் கொண்டு போய் கச்சேரியிலை ஒப்படைக்கச் சொல்லி்க் கட்டளை போட்டிட்டார். இந்த ஊரிகளிலை ஒரு கொஞ்ச மோட்டார் சைக்கிளுகள் தானிருந்தது. போக்குவரத்து குறைஞ்ச இடங்களெண்டும் பாராமல் முன் சில்லுகளைக் கழட்டிக் கொண்டு வந்து கச்சேரியிலை குடுக்கச் சொல்லியிட்டார். அவராலை ஏராளம் சனங்கள் பாதிக்கப்பட்டவை. அப்ப அவரைக் கடத்தினது நீங்கள்தான் எண்டு நினைக்க முடியாது தானே?” எனக் கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினார்.
அருகில் நின்ற தபாலோடி, “அந்த விஷயத்திலை கச்சேரிப் பெரியவரை மட்டும் குறைசொல்லேலாது சேர். அவர் ஒரு மாவட்டத்துக்குப் பொறுப்பான அரசாங்க அதிகாரி. அரசாங்கம் சொல்லுறதை அவர் செய்யத்தானே வேணும்!” என்றான்.
“என்னடா தம்பி பேய்க்கதை பேசுறாய்.... எங்கடை ஊர்களிலையும் துவக்குக் கிடக்குத்தானே. பட்டிக்குடியிருப்பிலை இரண்டு, காஞ்சுரமோட்டை, ஊஞ்சல் கட்டியிலை ஒவ்வொண்டு எண்டு மற்றது மோட்டைச் சைக்கிள் எல்லாம் இருக்குது தானே. நாங்கள் ஒண்டையும் ஒப்படைக்கேல்லைத் தானே!” என்றார் சரவணையப்பு.
சரவணையப்பு குறிப்பிட்ட கிராமங்களில் ஒதியமலை தவிர்ந்த ஏனைய அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. அவருக்கும் உத்தரவுப் பத்திரம் பெற்ற துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்யும்படி கட்டளையிடப்பட்டது. விதானையார் செல்லத்துரை தனது உத்தியோகபூர்வ நாட் குறிப்பேடுகளில் முக்கியமான நபர்களின் பெயரில் பழைய திகதிகளில் துப்பாக்கிகள் காணாமற் போய்விட்டதாக முறைப்பாடுகள் எழுதி வைத்து விட்டார். அத்தனை துப்பாக்கிகளும் கள்ளத் துவக்குகளாகி விட்டன. மோட்டார் சைக்கிள்களும் மாவட்டத்துக்கு வெளியே விற்கப்பட்டு விட்டதாக உதவி அரசாங்க அதிபர் அறிக்கை எழுதி அனுப்பி விட்டார்.
அந்த விஷயங்களெயெல்லாம் தெளிவாகவும் நிதானமாகவும் விளங்கப்படுத்திய அதிபர் பின்பு “இவரும் ஒரு அரசாங்க அதிகாரி! அவர் எங்கடை உதவி அரசாங்க அதிபரை விட அதிகாரம் கூடிய அதிகாரி. அவர் சட்டத்தின்ரை ஓட்டையளைப் பாவிச்சு சனத்துக்கு ஏலுமான உதவியெல்லாம் செய்யிறார்! அவர் சனத்தை போட்டு வதைக்கி்றார். அதாலைதான் இயக்கம் அவரைக் கடத்தியிருக்குது. அதை நாங்கள் என்னண்டு பிழை சொல்லுறது” என்றார்.
அவற்றை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த காசியர் தங்கள் துப்பாக்கிகள் காப்பாற்றப்பட்ட தன் பின்னால் இருந்த உதவி அரச அதிபர், விதானையார் ஆகியோரின் சேவைகளின் பெறுமதியைப் புரிந்து கொண்டார்.
அவரும் “ஓம் வாத்தியார் உப்பிடியான வால் பிடியளைக் கவனிக்கிற மாதிரிக் கவனிச்சால் தான் மற்றவங்களும் உப்பிடியான விஷயங்களிலை இறங்கப் பயப்பிடுவங்கள்” என்றார்.
விதானையார் செல்லத்துரை இளைஞனாக இருந்த காலத்தில் மணலாற்றில் பெரும் பண்ணைகள் தொடங்கப்பட்ட போது, மணலாற்றின் வளமான காடுகள் அழிக்கப்பட்டபோதும், வெட்டப்பட்ட பெரும் மரங்கள் மொறட்டுவவுக்கு ஏற்றப்பட்ட போதும் அவரின் மனம் குமுறிக் கொண்டிருந்ததையும் அதன் பலனாக அவர் அரசாங்கக் கட்டளைகளுக்கு அப்பால் விதானையாரான பின்பு மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதையும் பற்றி அவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை . அதேபோன்று உதவி அரசாங்க அதிபரையும் அவர் தன் வசப்படுத்தி்யிருந்தார்.
சனங்கள் புறப்படுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தபோது மதிவதனி ரீச்சர் நாகராசாவிடம் வந்து “அண்ணா சனம் ஆயத்தமாகியிட்டுது” என்றார்.
“சரி, முதல் சாமான்களையும் ஏத்தி கொஞ்சம் இளம் ஆக்களையும் ஏறச் சொல்லுங்கோ அவை முதல் போய் இடங்களை ஆயத்தப்படுத்த நான் ஒரு மூண்டு தரத்திலை மற்றவையளைக் கொண்டு போய் விட்டிடுவன்”, எனக் கூறிவிட்டு உழவு யந்திரத்தை எடுது்து வந்து மண்டபத்தின் முன்பு நிறுத்தினான்.
அடுத்த நாள் பிற்பகல் பொன்னா மயிலையும் கூட்டிக்கொண்டு பாடசாலைக்கு வந்தபோது சொர்ணமும் மதிவதனியும் பாடசாலை மண்டபங்களைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கூட்டிக்கொண்டிருந்தனர். முதல் நாள் டொலர் பண்ணை மக்கள் சாப்பிட்டு விட்டு ஒரு ஓரமாகப் போட்டிருந்த தேக்கம் இலைகள் உட்பட அங்கு கிடந்த குப்பைகளை சொர்ணம் ரீச்சர் தடி விளக்குமாற்றால் கூட்டி சிறுசிறு கும்பங்களாகக் குவிச்ச மதிவதனி அவற்றை ஒற்றைச் சில்லு தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்று காணியின் ஒரு மூலையில் குவித்துக்கொண்டிருந்தாள்.
அங்கு போனதும் பொன்னா மதியிடம் “என்ன ரீச்சர் வேலை வலு கம்மக்கையாய் நடக்குது. போலை கிடக்குது. எனக் கேட்டாள்.
“ஓம் பொன்னா! நாளைக்குப் பள்ளிக்கூடமல்லே. எல்லாம் ஒரே கஞ்சலும் குப்பையுமாய்க் கிடந்தது. அதுதான் இரண்டு பேரும் விளக்குமாறுகளைத் தூக்கிக் கொண்டு இறங்கியிட்டம்” என்றாள் மதிவதனி.
மயில் போய் சொர்ணம் ரீச்சரிடம் விளக்குமாற்றை வாங்கிக் கொண்டாள்.
பொன்னா சொர்ணத்திடம் “ரீச்சர்! கிணத்தடி ஒரே புல்லாய்க் கிடக்குது? செருக்கி விடட்டே?” எனக் கேட்டாள்.
“உங்களுக்கு ஏன் கஷ்டத்தை?”
“என்ன ரீச்சர்! எங்கடை பள்ளிக்கூடம்தானே. அதை வடிவாய் வைச்சிருக்கிறது கஷ்டமே?” என்ற பொன்னா போய் மண்வெட்டியைத் தூக்கினாள்.
பொன்னா படித்த நாட்களில் அங்கு ஐந்தாம் வகுப்பு வரையில்தான் இருந்தது. நாகராசா கல்வி அதிகாரிகளிடமும் உதவி அரசாங்க அதிபரிடமும் மீண்டும் மீண்டும் ஓடித்திரிந்து அப்பாடசாலையை எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடசாலையாக தரமுயர வைத்து விட்டான். அவன் கம்பர் மலைக்குப் போகும் சந்தர்ப்பங்களில் வெள்ளைச் சட்டைகளுடன் மாணவிகளும் கறுத்தக் காற்சட்டையும் வெள்ளை சேட்டுகளுமாக மாணவர்களும் வீதிகள் நிறைந்து போவதனைப் பார்க்கும்போது தனது ஊரும் அப்படிக் காட்சியளிக்க வேண்டுமென ஆசைப்பட்டதன் விளைவுதான் அது. அந்தத் தரமுயர்த்தலின் பின்பு தான் கடந்த வருடம் மதிவதனி அங்கு கணித, விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்று வந்தாள்.
பொன்னா மண் வெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்த போது மதிவதனி, “தில்”லுக்கோ பொன்னா நானும் ஒரு மண்வெட்டி எடுத்து வாறன். புல்லுச் செதுக்கிப் பழகுவம்” என்று விட்டு களஞ்சிய அறையை நோக்கி நடந்தாள்.
இருவரும் வேலை தொடங்கிய போது “ரீச்சர்! கால் கவனம் உங்கடை சொல்லுக் கேளாமல் மண்வெட்டி காலிலை பாஞ்சுவிட்டிடும்” எனப் பொன்னா ஒரு மெல்லிய சிரிப்புடன் எச்சரித்தாள்.
அவர்கள் மூவரும் வேலைகளை முடித்த பின்பு கால்முகம் கழுவிவிட்டு வரும்போதே சொர்ணம் ரீச்சர் தேனீர் தயாரித்துக்கொண்டு வந்து விட்டாள்.
அவர்கள் தேனீர் அருந்திக் கொண்டிருந்தபோது காலையில் நெடுங்கேணிக்குப் போன பரமர் திரும்பி வந்திருந்தார். அவர் “வாத்தியார்! வாத்தியார்! என அழைத்தவாறே உள்ளே வந்தார்.
“அவர் உதிலை ஆசாரியார் வீட்டை போட்டார். வந்திடுவர்! அவசர அலுவலே?” என்று கேட்டாள் சொர்ணம்.
“அலுவல் ஒண்டுமில்லை முந்த நாள் பரந்தன் றோட்டிலை வைச்சுக் கச்சேரிப் பெரியவரைக் கடத்தினதெண்டு கதைச்சவையெல்லே! அவர் ஆள் முடிஞ்சுது?” என்றார் பரமர்.
மதிவதனி திகைப்புடன் ...“ ஏன்? என்னய்யா நடந்தது?”” எனக் கேட்டாள்.
“விடியக்காலமை கிளிநொச்சி இரணை மடுச் சந்தியிலை இருக்கிற பஸ் தரிப்பிலை அவரைச் சுட்டுப் போட்டு அந்தப் பிரேதத்தை இருத்தி வைச்சுக்கிடந்ததாம்!”
அதைக் கேட்டதும் மயில் “ஐயோ...! பாவம்!” என்றாள்.
பொன்னா ”என்னடி பாவம்?” அந்த டொலர் பண்ணைச் சனத்தை தலையிலை பாய் படுக்கையோடையும் கையிலை உரப் பையிலை சட்டி பானையோடையும் உடுத்த உடுப்போடை குழந்தை குருமன் கிழடுகளையும் கூடி ஈவிரக்கமில்லாமல் தெருத்தெருவாய் அலைய விட்டவர் பாவமே?” முதுகு முறிய உழைச்ச காசிலை வேண்டின மோட்டைச் சயிக்கிளின்ரை முன் சில்லைப் பறிச்சு அதுகளை இறப்பிலை கட்டித் தூக்க வைச்சவர் பாவமே? துவக்கைப் பறிச்சு சனத்தின்ரை பயிர் பச்சை எல்லாத்தையும் பண்டி நாசமாக்கிறதால கமக்காரரின்ட வயித்திலையடிச்சவரெல்லாம் பாவமே....” எனப் பொரிந்து தள்ளினாள்.
மதிவதனி திகைத்தே போய்விட்டாள். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு கிராமத்துப் பெண்ணிடம் கோபத்திலும்கூட இவ்வளவு ஆணித்தரமான கருத்துகள் வெளிவந்ததை அவளால் நம்பவே முடியவில்லை. எனினும் அனுபவத்தால் வரும் அறிவு, ஆழமும் அர்த்தமுமுடையதாக இருக்கும். என எங்கோ படித்தது அவள் நினைவில் வந்து அதன் உண்மைத்தன்மை நிலையை நாட்டியதை அவள் உணர்ந்து கொண்டாள்.
(தொடரும்)
Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு