அந்த வருடம் வழமை போலவே வைகாசி விசாகத்துடன் தொடங்கிய கள்ளச் சோளகம் முடியச் சில நாட்களில் ஆனித் தூக்கம் தொடங்கியது. ஆடி பிறக்க மீண்டும் காற்று சுழன்றடித்த காரணத்தால் ஐப்பசி மழையும் காலம் தவறாமல் பெய்யுமென்றே எதிர்பார்க்கப்பட்டது.
எனவே விதைப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. கமக்காரர்கள் குளப்பெருக்கு, பட்டி எரு போன்ற அடிக்கட்டுப் பசளைகளைத் தமது வயல்களுக்குப் பறிக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கி விட்டனர்.
குளப்பொருக்கு பட்டி எரு என்பவற்றை இளைஞர்களும் இளம் பெண்களும் ஏற்றிப் பறிக்க நடுத்தர வயதுப் பெண்கள் அவற்றைக் கடகங்களில் கோலி வயல் நிலமெங்கும் கும்பல் கும்பலாகக் கொட்டிவிட்டுத் தட்டிப் பரவினர். எப்படியும் புரட்டாதியில் விதைப்புத் தொடங்கி விட வேண்டுமாதலால் நில நனைப்புக்காக குளத்தில் நனையல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குலமுத்தர், வீரப்பட்டி வினாசி, வில்லடி வேலர் என்ற மூன்று பரம்பரைகளுக்குமே அந்த ஊர்க்குளம் சொந்தமாக இருந்தது. தூர் வாருதல், அணைக்கட்டில் திருத்தங்கள் செய்தல் போன்ற முக்கிய வேலைகளையும், பிரதான வாய்க்காலை நீர் தடங்கலின்றிச் செல்லும் வகையில் திருத்துவது போன்ற பணிகளையும் மூன்று பரம்பரையினரையும் சேர்ந்தே செய்வார்கள். குளம் திறப்பது, பூட்டுவது போன்ற விடயங்களை மூன்று குடும்பங்களின் தலைச்சன்களும் தீர்மானித்துக் கொள்வார்கள். அக்குளத்துக்குப் பொறுப்பாயுள்ள “ஓவசியர்” அவர்கள் சொல்வதையே கேட்டு எழுதிக்கொண்டு போக வேண்டியதுதான்.காசியர், சரவணையப்பு, பரமர், வெள்ளையர் உட்பட்ட அவ்வூர் பெரியவர்கள் நாடாரிடம் கள் அருந்தும் போதே ஒரு நல்ல நாள் பார்த்து காசியரின் தலைச்சன் வயலில் நாள் விதைப்பைத் தொடங்குவதென முடிவெடுத்தனர். பின்பு காசியரும் சரவணையப்புவும் பூசாரி கந்தப்பரிடமும் சென்று ஆலோசித்து நல்ல நாளாய்த் தீர்மானித்தனர்.
காசியர் தனது வண்டிலில் கலப்பை, மண்வெட்டி, அரிவாள், கத்திகள், பொங்கல் சட்டி பானைகள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு காலை ஒன்பது மணியளவில் தனது வயலடிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு குலமுத்தர் பரம்பரையினரான பதினாறு குடும்பங்களையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என எல்லோரும் வந்திருந்தனர்.
ஏற்கனவே பொன்னாவும் ஏனைய இளம் பெண்களும் சூட்டுக்களத்தைத் துப்புரவு செய்து தண்ணீர் தெளித்து இடத்தைத் தயார் செய்து வைத்திருந்தனர்.
காசியர் வண்டிலில் நின்றவாறே கலப்பையைத் தூக்கிப் பூசாரியாரிடமும் மண் வெட்டிகளை எடுத்து இளைஞர்களிடமும், அரிவாள் கத்திகளை இளம் பெண்களிடமும் பானை சட்டிகளை ஏனைய பெண்களிடமும் ஒவ்வொன்றாகக் கொடுத்தார். அனைவரும் அவற்றைப் பயபக்தியுடன் வாங்கி பொங்கலுக்கென மூன்று கற்களால் தயார் செய்து வைத்திருந்த அடுப்பருகில் வைத்தனர்.
வண்டிலால் இறங்கி வந்த காசியர் கண்களால் வயலை ஒருமுறை நோட்டமிட்டார். அது நீர் விட்டு நனைய விடப்பட்டுப் பின் நீர் வடியவிடப்பட்டு உழுவதற்கு பதமான நிலையில் காணப்பட்டது. அவர் தனது மருமக்கள் இருவருமே வலு செய்காரியக்காறர்தான் என நினைத்துத் தனக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார்.
பூசாரியார் சாணத்தால் பிள்ளையார் பிடித்து அதன் உச்சியில் அறுகம்புல்லைச் செருகி விட்டு அதை அடுப்பங்கரையில் வைத்தார். பின்பு அதை விழுந்து வணங்கிவிட்டு, அடுப்பை மூட்டி விட்டுப் பொங்கல் பானையில் நீரூற்றிக் கையில் எடுத்தார். பின்பு, “பொலியோ பொலியெண்டு பொலிஞ்சு மனை நிறைய வயலிறங்கி வந்து வரம் தா ஆனைமுகப் பெருமானே!....” என்று விட்டுப் பானையை அடுப்பில் வைத்தார். கூடி நின்ற அனைவரும் “அரோஹரா! என்றொலித்து வணங்கினர்.
காசியருக்கு தனது பேரன் கணபதி தலைச்சனாக இருந்த காலத்தில் இடம்பெற்ற விதைப்பு நாட்களின் ஞாபகம் நினைவுக்கு வந்தது.
அப்போதெல்லாம் விதைப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக வயல் நடுவில் ஒரு கொட்டில் போடுவார்கள்.
ஒரு நல்லநாள் பார்த்து ஆசாரியார் விரதமிருந்து அந்தக் கொட்டிலிலேயே தங்கியிருந்து கலப்பையைச் செய்ய ஆரம்பிப்பார். அவ்வாறே விரதமிருந்து அங்கு வரும் பொங்கலுக்கான சட்டி பானை வனைவோர் அரிவாள், கத்தி, மண்வெட்டி அடிப்போர், கதிர் பாய் இளைப்போர் என அனைவருக்கும் தட்சணைகளை வழங்கி அவரவர் தங்கள் விதைப்புக்கான கடமைகளைச் செய்ய ஆணையிடுவர். அவர்களும் அன்றே போய் தங்கள் பணிகளை ஆரம்பிப்பர்.
இப்போது அந்த முறை எல்லாம் மாறிவிடக் கமக்காறரே எல்லாவற்றையும் செய்வித்து தங்கள் வீட்டில் கொண்டுபோய் வைத்து விட்டு விதைபை்பன்றே வயலுக்குக் கொண்டு வருவர்.
ஆனால், ஏர் பூட்டுச் சடங்கு மட்டும் முன்பு போலவே தலைச்சன் காணியில் எல்லாக் குடும்பங்களும் ஒன்று கூடி மேற்கொண்டு வரப்படுகிறது.
பொங்கி முடிந்ததும் பூசாரியார் பிள்ளையாருக்கு நடுவிலும் இரு கரையிலும் ஐயனாருக்கும் வைரவருக்குமென மூன்று படையல்களைப் படைத்துவிட்டு கற்பூரத்தைக் கொழுத்தினார். பின்பு தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பியவாறு மூன்று முறை தன்னைத்தானே சுற்றிப் பின் படையலை வணங்கிவிட்டு அவர் வரட்சி, பெருவெள்ளம், மிருகங்கள் என்பவற்றால் எவ்வித அழிவும் ஏற்பட விடக்கூடாதென ஐயனாரையும் வைரவரையும் வேண்டிக்கொண்டார்.
கற்பூரம் அணைந்ததும் பூசாரியார் படையலுக்குத் தண்ணீர் தெளித்துவிட்டு அனைவருக்கும் திருநீறு, சந்தனம், குங்குமம் என்பவற்றை வழங்கி விட்டு, “காசி....” என அழைத்தார்.
காசியர் உழவு மாடுகளை அங்கு கொண்டு வரவே அவற்றின் நெற்றியில் திருநீறு, சந்தனத்தைப் பூசி விட்டார் அவர். பின்பு பூசாரி கலப்பை, நுகம் என்பவற்றுக்கும் விபூதி, சந்தனம் பூசி விட்டு அவற்றைத் தூக்கிக் காசியரிடம் கொடுத்தார். காசியர் நுகத்தில் மாடுகளைப் பூட்டி விட்டு, கலப்பையையும் கொழுவி விட்டு, “பிள்ளையாரே! நீதான் துணை” என்று விட்டு, “அரோகரா!” கோஷத்துடன் கலப்பையை வயலில் இறக்கினார். அனைவரும் “அரோகரா” ஒலிக்க நாள் உழவு ஆரம்பித்து விட்டது.
மூன்று வட்டம் உழுது முடிந்ததும் சேனாதி போய் கலப்பையைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுக் காசியரிடம் வாங்கி உழ ஆரம்பித்தான்.
சேனாதியின் கட்டுமஸ்தான தேகமும் நிமிர்ந்த சீரான நடையும் நெற்றியை நிறைந்திருந்த விபூதியும், அதன் மேல் துலங்கிய சந்தனம், குங்குமமும் மயிலுக்கு அவனை அப்படியே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த ஆனந்தம் அவளில் ஒரு சில கனங்களே நிலைத்தது. அவளின் மனம் மட்டுமின்றி உடல் கூடச் சோர்வடைவது போல் தோன்றியது.
காசியரின் அடுத்த தலையாரிப் பொறுப்பை ஏற்க அவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. எனவே பொன்னாவின் கணவனுக்கே அடுத்த தலையாரியாகும் உரிமை கிடைக்கும்.
காசியரிடமும் சேனாதி கலப்பையை வாங்கியபடியால் அவன்தான் அடுத்த தலையாரி என்றால் பொன்னா அவனுக்குத் தானெனத் தீர்மானிக்கப்பட்டு விட்டதோ என்ற கேள்வி அவனிடத்தில் பெரும் பூதமாய் எழுந்தது.
நாள் உழவும் சடங்குகள் நிறைவு பெற்று அவர்கள் வீடு திரும்பும்போது மயில் ஒருவித தயக்கத்துடன் பொன்னாவிடம் “எடியே..... இனி எங்கடை தலையாரி சேனாதி போலை கிடக்குது!” எனக் கேட்டாள்.
பொன்னா! “ஏன்.... அவனே அப்புவின்ரை பிள்ளை?” எனக் கேட்டாள்.
அவன்தானே காசியப்புவட்டைக் கலப்பையைக் கையேத்தவன்.....”
“போடி மடைச்சி கலப்பை வேண்டுறவனெல்லாம் தலையாரியே! நான் தான் அப்புவுக்கு ஒரே பிள்ளை.... அப்புவுக்கு ஒரே பிள்ளை.... அப்புவுக்குப் பிறகு நான் தானடி தலையாரி!”
மயில் திகைப்புடன், “என்னடி பெட்டையளும் தலையாரியாய் வரலாமே?” எனக் கேட்டாள்.
“வரவேணும்! நான் வருவன்... நான் கேட்டால் அப்பு மாட்டனெண்டு சொல்லமாட்டார். நாங்கள் பொம்பிளையள் எண்டால் என்ன இளக்காரமே?” எனச் சொன்ன பொன்னாவின் குரலில் அசைக்கமுடியாத உறுதி தெரிந்தது.
ஆனால், அதை மயிலால் நம்ப முடியவில்லை.
சில வினாடிகள் மௌனமாய் நடந்துகொண்டிருந்த மயில், “பொன்னா! நீ சொல்லறது கேட்க நல்லாய்த் தானடி இருக்குது... ஆனால் யோசிச்சுப் பார்த்தால்....?” என்று விட்டு இடை நிறுத்தினாள்.
“சொல்லன்!”
“நாகராசா அண்ணன் எங்கடை ஆக்களுக்கு வெளியிலைதான் கலியாணம் கட்டினவர். அவரை ஊரை விட்டு ஒதுக்கேல்லை. அவர் இப் பள்ளிக்கூடத்தைத் தரமுயர்த்தினது, வாசிகசாலை தொடங்கினது. கோயில் விஷயங்களிலை அக்கறை எண்டு செய்து இப்ப அவருக்குப் பெரிய மரியாதை, ஏணென்டால் அவர் ஆம்பிளை. ஆனால், சின்னத் தங்கம் எங்கட ஆக்களை விட்டிட்டு வேறை ஒருதனை விரும்பிப் போனவுடனை அவளை கொண்டோடி எண்டு ஊரை விட்டு ஒதுக்கியினதால தாயும் தூங்கிச் செத்துப் போனா. ஏனெண்டால் சின்னத் தங்கம் ஒரு பெம்பிளை!”
“அது சரியெண்டு நினைக்கிறியே?”
“இல்லை.... பிழை தான். ஆனால்.... அது எங்கடை ஊர்க் கட்டுப்பாடு”.
“இது பிழையெண்டால்.... அது பிழைதான். ஆனால், அது எங்கடை ஊர்க் கட்டுப்பாடு...” “அது பிழையெண்டால் .... மாத்தத் தானே வேணும்”.
மயில் அச்சம் கலந்த குரலில் “அதை நாங்கள் மாத்தியிட முடிஞ்ச அலுவலே?” எனக் கேட்டாள்.
“நீ படிக்கேக்கை எங்கடை நாட்டையும் வேறை கன நாடுகளையும் கட்டியாண்ட இங்கிலாந்தின்ரை ராணி ஒரு பெம்பிளையெண்டு நீ அறியேல்லையே?” எனக் கேட்டாள் பொன்னா.
“அது வெள்ளைக்காரர்!”
“வெள்ளைக்காரர் எண்டால் கொம்பு முளைச்ச ஆக்களே?”
“எண்டாலும்.....” என இழுத்தாள் மயில்.
“மயில், நீ இருந்து பார். எங்கடை குடும்பங்களின்ரை அடுத்த தலையாரி நான்தான்”. பொன்னாவின் அந்த வார்த்தைகளில் அளவற்ற உறுதி தொனித்தது.
(தொடரும்)
Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு