உலக வங்கியின் நிபந்தனைகள் உருவாக்கிய இரண்டாவது நெருக்கடி - நா.யோகேந்திரநாதன்
1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன இணைந்த ஐக்கிய முன்னணி அரசு மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிப் பீடமேறுகிறது. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகவும் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா நிதியமைச்சராகவும் பீற்றர் கெனமன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவும் பதவியேற்கின்றனர்.
ஏற்கனவே 1960 தொடக்கம் 1965வரை திருமதி ஸ்ரீமாவோ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தபோது பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்ட பொருளாதார தாக்குதல்களால் ஏற்பட்ட நெருக்கடிகள், 1961ம் ஆண்டு வடக்குக் கிழக்கில் தமிழரசுக் கட்சியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், 1962ல் இராணுவ, பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப்புரட்சி, இடதுசாரித் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டிகள் 21 கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய நாடு பரந்த வேலை நிறுத்தப் போராட்டம் எனப் பல கண்டங்களைக் கடந்து வந்த அரசாங்கம் 1964ன் இறுதிப் பகுதியில் லேக்ஹவுஸ் பத்திரிகைகளைத் தேசிய மயமாக்கும் மசோதாவில் ஒரு வாக்கால் தோல்வியடைந்து ஆட்சியை விட்டு வெளியேறுகிறது.
எனினும் இக்காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் மேற்கொண்ட பல முற்போக்கான திட்டங்கள் மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை உயர்த்தியிருந்தன. குறிப்பாக அமெரிக்கப் பெற்றோல் நிறுவனங்கள் தேசிய மயமாக்கியமை, பாடசாலைகளைத் தேசிய மயமாக்கியமை, நிலச் சீர்திருத்தம் மூலம் ஒருவரின் காணி உரிமை 50 ஏக்கர் என மட்டுப்படுத்தப்பட்டமை, இலங்கை வங்கி, காப்புறுதி நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் இலங்கையில் சுயாதிபத்தியத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவற்றின் காரணமாக அமெரிக்க உதவித்திட்டங்கள் பல நிறுத்தப்பட்டாலும் இலங்கை தனது நிலைப்பாட்டை மாற்றிவிடவில்லை.எனவே பலவிதமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை வெற்றிபெற முடியாத நிலையில் “லேக் ஹவுஸ்” மசோதா மூலம் ஆட்சி வீழ்த்தப்பட்டது.
எனினும் 1970ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அணியினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். 1960 -1965 காலப்பகுதிகளில் மேற்கொண்ட முற்போக்கு நடவடிக்கைகள், இடது சாரிகளுடன் கூட்டணி அமைத்தமை, ஜே.வி.பி.யின் ஆதரவு என்பனவே இப்பெரும் வெற்றிக்குக் காரணமாயமைந்தன.
அதிலும் என்.எம்.பெரேரா போன்ற ஒரு பொருளாதாரக் கலாநிதியும் இடதுசாரியும் நிதியமைச்சராக வரும்போது நாடு ஒரு சுபீட்சமான பாதையில் பயணிக்குமென்றே மக்கள் திடமாக நம்பினர்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்புக் கைகூடவில்லை. மாறாக எல்லா ஐக்கிய தேசியக் கட்சி நிதியமைச்சர்களையும் போலவே இவரும் உலக வங்கியை நாடினார்.
தொழிலாளர்கள் முன்பும் மக்கள் முன்பும் தன்னை ஒரு சோஷலிசவாதியாக, இன்னும் சொல்லப் போனால் லெனினைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளை விடத்தான் ட்ரொட்ஸ்கியைப் பின்பற்றும் தீவிர இடதுசாரியாகத் தன்னை இனம் காட்டிவந்த என்.எம்.பெரேரா நிதியமைச்சர் பதவி கிடைத்ததும் அதே முதலாளித்துவப் பொருளாதாரப் பாதையை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
அவ்வகையில் 1953ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சென்ற பாதையில் தன்னால் சிறப்பாகச் செய்து காட்டமுடியுமென நம்பினார். எனவே அவர் உலக வங்கியில் கடன் பெறும்போது அது போடும் நிபந்தனைகளை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பதிலிருந்து தப்பமுடியவில்லை.
எனவே ஒரு வருடத்துக்குள் உலக வங்கியின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது என்ற வாக்குறுதியின் அடிப்படையில் உலக வங்கியிடம் முதல் தொகுதி கடன் பெற்றுக் கொண்டார்.
எனவே சில பொருட்களின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் பாவனைப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. அதனால் பதுக்கல், கறுப்புச் சந்தை என்பன பலம் பெற்று பொருட்களின் விலைகள் உயர ஆரம்பித்தன. வாழ்க்கைச் செலவு உயர்வு, வேலையில்லாப் பிரச்சினை என்பன அதிகரிக்கப்பட்டது.
தமது அரசாங்கம் என மக்களால் உரிமையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சுமைகளை மக்கள் தலைமீது சுமத்திய நிலையில் மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொள்ள ஆரம்பித்தனர். வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற விடயங்களை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பிக்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசில் அங்கம் வகிக்கும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பனவற்றின் தலைமையில் இருந்தமையால் வேலைநிறுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில்தான் ஜே.வி.பி. கிளர்ச்சி ஆரம்பமானது. 1971 ஏப்ரல் 5ம் நாள் நள்ளிரவு வெள்ளவாய பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதுடன் ஆரம்பித்த போராட்டம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. தென்மாகாணத்தில் திசமாறகம உட்படப் பல பகுதிகள், குருநாகல், அனுராதபுரம், பொல்லன்னறுவ போன்ற பகுதிகள் ஏறக்குறைய ஒரு மாதகாலப் பகுதிக்கு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இப்போராட்டத்தில் ஊடகப் பிரசார ஆதரவு முதற்கொண்டு வேறும் பலவித உதவிகள் ஐ.தே.கட்சியால் மறைமுகமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கிளர்ச்சியை ஒடுக்க திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கடும் நடவடிக்கைகளில் இறங்கினார். இராணுவத் தலைமைப் பீடங்களில் ஏற்கனவே பண்டாரநாயக்க குடும்பத்தவர்களின் ஆதிக்கமே நிலவியது. கிளர்ச்சியை ஒடுக்குவதில் இராணுவமும் கடற்படையும் தீவிரமாகச் செயற்பட்டன.
இந்தியா உடனடியாக கொழும்பின் பாதுகாப்புக்கு இந்தியப் படையணியை அனுப்பி உதவியது. பல மேற்கு நாடுகளும் நிதியுதவி, ஆயுத உதவி எனப் பல்வேறு உதவிகளையும் வழங்கின. சீனா 15 கோடி ரூபா வட்டியில்லாக் கடனாக வழங்கியது.
இப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய 30 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜயவீர உட்பட 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இன்னுமொரு முக்கிய விடயம் ஜே.வி.பி. தவறான பாதையில் போகிறதென விமர்சனம் செய்த சண்முகதாசன் உட்படப் பல கம்யூனிஸ்ட் தலைவர்களும் இடதுசாரி சிந்தனைப் போக்குள்ள எஸ்.டி.பண்டாரநாயக்க, நந்தா எல்லாவல போன்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷ், மைத்திரிபால சிறிசேன போன்றவர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலமர்ந்து சில மாதங்களுக்கிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ஆயுதக்கிளர்ச்சி நெருக்கடியும் கடும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும் வெளிநாட்டு உதவிகளாலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அரசாங்கம் காப்பாற்றப்பட்டது. ஆனால் நெருக்கடிகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை.
எனினும் இலங்கை எதிர்கொண்ட இரண்டாவது பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு திருமதி ஸ்ரீமாவோ அவர்கள் தனது கணவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையைத் துணிவுடன் கையிலெடுத்தார். அவ்விடயத்தில் சர்வதேசச் சூழலும் அவருக்குக் சாதகமாக அமைந்திருந்தது. அதாவது ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் நடுநிலைமைக் கொள்கையின் அடிப்படையில் அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கின.
இந்தியாவின் ஜவகர்லால் நேரு, எகிப்தின் நாசர், ஈராக்கின் சதாம் ஹுசைன், லிபியாவின் கேணல் கடாபி, இந்தோனேசியாவின் சுகர்ணோ, பாகிஸ்தானின் பூட்டோ போன்ற தேசியத் தலைவர்களின் முயற்சியால் அந்த அணி உருவாக்கப்பட்டது. உலகின் முதற் பெண் பிரதமர் என்ற வகையிலும் தேசிய சுயசார்புக் கொள்கை கொண்டவர் என்ற வகையிலும் அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மத்தியில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்குத் தனியான கௌரவம் வழங்கப்பட்டது.
திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் நேரடியாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியதுடன் இறக்குமதிகளை மட்டுப்படுத்தி தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் வழிமுறையில் இறங்கியது.
இந்த நிலையில் உலக வங்கி தாங்கள் போட்ட நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றவில்லையெனக் கூறி நிதியுதவியை நிறுத்தியது. இதனால் நிதியமைச்சர் என்.எம்.பெரேராவுக்கும் ஸ்ரீமாவோக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றின. ஆனால் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரி.பி.இலங்கரத்தின போன்றவர்கள் ஸ்ரீமாவோக்கு உறுதியான ஆதரவை வழங்கித் தேசிய அரசியலை முன்னெடுக்கத் துணை நின்றனர்.
ஆனால் உலக வங்கியின் உதவி நிறுத்தப்பட்டதுடன் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தன.
இறக்குமதிப் பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்டபடியால் அதைப் பயன்படுத்தி பெரும் வர்த்தகர்கள் பதுக்கல், கறுப்புச் சந்தை என்பவற்றில் ஈடுபடடனர். அதன் காரணமாக பாவனைப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன. அமெரிக்கா கோதுமை, விநியோகத்தை நிறுத்திவிட்ட நிலையில் கோதுமைக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தினமும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள். அரச ஊழியர்கள் உட்பட நகர்ப்புற மக்களின் பிரதான காலை உணவு “பாண்” ஆகவே விளங்கியது. கோதுமைத் தட்டுப்பாடு காரணமாகப் போதியளவு “பாண்” உற்பத்தி செய்ய முடியாத நிலையில் பாணுக்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதேவேளையில் இலங்கையின் தேயிலை, இறப்பர் என்பனவற்றின் விலைகள் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட நாடுகளால் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியிலும் பற்றாக்குறை நிலவியது. மலையகத் தொழிலாளர்களின் பிரதான உணவாகக் கோதுமை “ரொட்டி” யே விளங்கியது. கோதுமைத் தட்டுப்பாடு அவர்களைப் பாரதூரமாகப் பாதித்தது.
எனவே இலங்கையின் கொழும்பு உட்படப் பல்வேறு நகரங்களிலும் மலையகத்திலும் அரசாங்கத்திற்கு எதிரான பெரும் கொந்தளிப்பு உருவாகியது. பல தொழிற்சங்கங்கள் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகவும் சம்பள உயர்வு கோரியும் வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டன. பாண் தட்டுப்பாடுக்கு எதிராக ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது. ஊடகங்களும் நச்சுப் பிரசாரங்களைத் தூண்டிவிட்டு அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் திசை திருப்பின.
இவ்வாறு பெரும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தபோதிலும் அரசாங்கம் உலக வங்கியிடம் மண்டியிட்டுக் கடன் பெற்று நிலைமையைச் சமாளிக்கமுயலவுமில்லை. அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களுக்கு எதிராக இராணுவ ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்க்கவுமில்லை.
அரசாங்கம் உழைக்கும் மக்களிலும் தேசிய சக்திகளிலும் நம்பிக்கை வைத்து வெளிநாட்டு இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி, உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கி ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்ரைத அடையும் வகையில் அரசியல், பொருளாதார நகர்வுகளை மேற்கொண்டது.
அந்த முயற்சி உடனடியாகப் பலனளிக்க முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல நாடு ஒரு சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தது.
ஆனால், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சமசமாஜக் கட்சியினர், ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர், தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழரசு தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் எதிர்ப்புணர்வை தூண்டி விட்டனர்.
அதாவது இலங்கையின் இரண்டாவது பொருளாதார நெருக்கடி அரசாங்கத்தையே ஈடாடச் செய்யுமளவுக்கு வலிமையாக்கப்பட்டிருந்தது. எனினும் திருமதி ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் வளைந்து கொடுக்காமல் அணி சேரா நாடுகளின் உறுதியான ஒத்துழைப்புடனும் சுயசார்பு, தன்னிறைவு பொருளாதாரக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டு முன்சென்றது. அரசாங்கத்தின் அந்த முயற்சிகளை முறியடிக்க முயன்ற பல்வேறு தரப்பினரும் சில நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும்கூட அரசாங்கம் அந்தப் பாதையில் உறுதியாக முன்னேற ஆரம்பித்தது.
தொடரும்....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை